முன்பள்ளி ஆசிரியர்களின் கொடுப்பனவு அதிகரிக்க வேண்டும் : உரிய நேரத்திற்கும் வழங்கவேண்டும்.

இரண்டாம் மாதக் கொடுப்பனவு வருடத்திற்கு பிற்பாடு கொடுக்குமளவிற்கு பாலர் பாடசாலை பணியக நிருவாகம் சீராக இல்லையா? 3548பேர் கிழக்கு மாகாணத்தில் தங்களை பதிவு செய்து மட்டக்களப்பு மாவட்டத்தில் 1150பேர், அம்பாறை மாவட்டத்தில் 1850பேரும், திருகோணமலை மாவட்டத்தில் 850 பேரும் முன்பள்ளி ஆசிரியர்களாக சேவையாற்றி வருகின்றனர். இவர்களுக்கான கொடுப்பனவை அதிகரிக்க வேண்டுமென கிழக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் இரா.துரைரெட்ணம் தெரிவித்தார்.

முன்பள்ளி ஆசிரியருக்கான கொடுப்பனவை அதிகரிப்பதோடு வழங்கப்படுகின்ற கொடுப்பனவை உரிய மாதத்திற்கு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கோரி கிழக்கு மாகாணசபையின் ஆளுனருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலே இதனைக் குறிப்பிட்டுள்ளதாக  ஊடகங்களுக்கு குறிப்பிட்டார்.

அக்கடிதத்தில்,

டிப்ளோமா பட்டப்படிப்பை முடித்துக் கொண்டு கிழக்கு மாகாணசபையின் பாலர் பாடசாலை கல்விப் பணியகத்தின் கீழ் அண்ணளவாக 3548பேர் கிழக்கு மாகாணத்தில் தங்களை பதிவு செய்து மட்டக்களப்பு மாவட்டத்தில் 1150பேர், அம்பாறை மாவட்டத்தில் 1850பேரும், திருகோணமலை மாவட்டத்தில் 850 பேரும் முன்பள்ளி ஆசிரியர்களாக சேவையாற்றி வருகின்றனர். இவர்களைப் பொறுத்தவரையில் தொடர்ச்சியாக 20வருடத்திற்கு மேலாக சேவையாற்றி வருகின்றனர். இவ் ஆசிரியர்கள் குடும்ப சுமைகளைச் சுமந்துகொண்டும், பொருளாதார கஸ்ரத்திற்கு மத்தியிலும், சேவைஅடிப்படையிலும், சிறார்கள் ஒவ்வொருவரையும் தங்கள் சொந்தக் குழந்தைகளைப் போல் பராமரித்து வருகின்றனர். இவர்கள் ஒவ்வொருவருக்கும் மாதாந்தம் ரூபா3000 ஆயிரம் நிதி கொடுப்பனவாக வழங்கப்பட்டுக் கொண்டு வருகின்றன. இந்த நிதியைக் கூட வழங்குவதில் கால தாமதங்கள் ஏற்படுகின்றன. கணனி மயமாக்கப்பட்டுள்ள இந்த யுகத்தில் இரண்டாம் மாதக் கொடுப்பனவு வருடத்திற்கு பிற்பாடு கொடுக்குமளவிற்கு பாலர் பாடசாலை பணியக நிருவாகம் சீராக இல்லையா? எனும் கேள்வி எழுப்பப்படுகின்றன. இவர்களுக்கு தற்சமயம் மாகாணசபையால் வழங்கப்படுகின்ற கொடுப்பனவு என்பது ஒருசில அடிப்டைகளை மட்டுமே பூர்த்தி செய்ய போதுமானதாகவும் இன்னும் பல குறைபாடுகளை தலையில் சுமந்தவர்களாக ஒருமனஅழுத்தத்திற்கு மத்தியில் சேவையாற்றுவதை கண்கூடாக அவதானிக்கக் கூடியவாறு உள்ளது. எனவே இவர்களுக்கான கொடுப்பனவை, மாதம் குறைந்தது ரூபா 5000 மாக மாற்றவும், ஆசிரியர்களுக்கு ஒரு விசேட கொடுப்பனவை வழங்க துரித நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். 2018ம்ஆண்டு கிழக்கு மாகாணத்திலுள்ள சகல பாலர் பாடசாலை ஆசிரியர்களுக்கும் ஏதாவது ஒரு நிதி ஒதுக்கீட்டின் கீழ் நிதியை ஒதுக்கி ஆகக் குறைந்தது ரூபா5000 ஆவது கொடுப்பனவை வழங்க துரித நடவடிக்கை எடுப்பதோடு, வயது முதிர்ந்து வீடு செல்லும் போது எப்படியாவது ஒரு விசேட நிதியை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு குறிப்பிட்டுள்ளதாகவும் கூறினார்.