பழந்தமிழ் பண்பாட்டு பிரதேசமாக மட்டக்களப்பு அங்கீகரிக்கப்பட வேண்டும். – ச.வியாழேந்திரன்.

(படுவான் பாலகன்) தொல்பொருள் மரபுரிமை, பழந்தமிழ் பண்பாட்டு பிரதேசமாக மட்டக்களப்பு அங்கீகரிக்கப்பட வேண்டும். என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ச.வியாழேந்திரன் குறிப்பிட்டார்.

கொக்கட்டிச்சோலை ஈஸ்வரா கலைகலா மன்றத்தின் ஏற்பாட்டில் நடாத்தப்பட்ட படுவான் முத்தமிழ் முரசு நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இதனைத் தெரிவித்தார்.

நடாளுமன்ற உறுப்பினர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

மனிதன் இயந்திரத்தோடு பேசுகின்ற நிலையைதான் 21ம் நூற்றாண்டிலே பார்க்ககூடியதாகவிருக்கின்றது. ஆனால் மனிதர்கள் மனிதர்களோடு பேசவேண்டும். மனித விழுமியப்பண்புகள் வளர்த்தெடுக்கப்படவேண்டும். பரஸ்பரம், புரிந்துணர்வு, விட்டுக்கொடுப்பு, தராள மனப்பாங்குபோன்ற நல்ல விழுமியப்பண்புகள் வளர்த்தெடுக்கப்பட வேண்டும். இதனை கலைகளின் ஊடாக ஒன்றுசேர்தலில் மூலம் வளர்த்தெடுக்க முடியும்.

மட்டக்களப்புக்கே உரியதான பல பாரம்பரிய அம்சங்களை குழிதோன்றி புதைத்துள்ளோம். அல்லது ஏதோ ஒரு விதத்தில் மறந்துகொண்டு வருகின்றோம். செந்தமிழ்சொல்வளம், கண்ணகிவழக்குரை, கண்ணகிசடங்கு, கொம்பு விளையாட்டு, நாட்டுக்கூத்து, வசந்தன் ஆடல், பாரம்பரிய வைத்தியம் என மட்டக்களப்பு மண்ணுக்கே உரித்தான தனித்துவமான அம்சங்கள் எவ்வளவோ இருக்கின்றன. ஆனால் அவற்றை வெளிக்கொணராமல் மறைத்து, புதைத்துக்கொண்டு வருகின்றோம். அவ்வேர்களை தேடி கலைமன்றங்களுடாக கொண்டு வந்து அடுத்த தலைமுறைக்கு கையளிக்க வேண்டும்.

இன்னொருவரினது பண்பாட்டை, கலாசாரவிழுமியத்தை, நாங்கள் எங்கெளுக்குரியதென்று கூறுவது ஒருவகையில் அடிமைத்தனமான செயற்பாடாக பார்க்கின்றேன். மட்டக்களப்பு தமிழர்களுக்கு, மண்ணுக்கென்று உரித்தான தனித்துவமான அம்சங்கள் வெளிக்கொணரப்பட வேண்டும். தொல்பொருள் மரபுரிமைபிரதேசமாக மட்டக்களப்பு அங்கீகரிக்கப்பட வேண்டும். பழந்தமிழ் பண்பாட்டு பிரதேசமாக மட்டக்களப்பு அங்கீகரிக்கப்பட வேண்டும். அதற்குரிய வேலைத்திட்டங்களை அனைவரும் இணைந்துமேற்கொள்ள வேண்டும். குறிப்பாக கலைமன்றங்கள் அதிக அக்கறை செலுத்த வேண்டும். என்றார்.