இலங்கை தீவில் தமிழ் மக்களும் இறையாண்மை உள்ள ஆட்சி அதிகாரங்களுக்கு உரித்துடையவர்கள்

இலங்கை தீவில் தமிழ் மக்களும் இறையாண்மை உள்ள ஆட்சி அதிகாரங்களுக்கு
உரித்துடையவர்கள். இச்செல்நெறிப்போக்கு கடந்த காலங்களில் இடர்பாடுகளை எதிர்கொண்ட வேளைகளில்தான் தமிழர்கள் தமது தார்மீக அடிப்படையிலான அரசியல் உரிமைகளை பெற்றுக்கொள்வதற்காக  ஆயுதமேந்தி போராடினர்.

இனவிடுதலைக்காக அதியுச்சம் பெற்ற ஆயுதப்பொறிமுறை அதிகளவான பொருட்சேதங்களையும் அதி உன்னதமான உயிர்ச்சேதங்களையும் ஏற்படுத்தியபின் நிறைவுற்றிருக்கின்றது.

முள்ளிவாய்க்கால்மண் சொல்லிநிற்கின்ற செய்தியினை இன்னமும் சர்வதேசமும் இலங்கை அரசும் பன்னாட்டு அரசுறவியளாளர்களும் தாம் புரிந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு இதுவரையில் ஏற்பட்டுள்ளதாக தெரியவில்லை. தமது உரிமைகளை பெற்றுக்கொள்வதற்காக போராடிய இனக்குழுமத்தினை அதியுச்ச ஆயுதவன்முறையில் சிதைத்தழித்தால் அந்த  இனத்தின் விடுதலை நோக்கிய பயணத்தினை முடக்கிவிடலாம் என்கின்ற மோசமான சிந்தனையினை எம்மை அழித்த தரப்புக்கள் உருவாக்கி வைத்திருப்பதானது இனநல்லிணக்கத்துக்கும் எதிர்காலச்சகவாழ்விற்கும் இடையூறாகவே அமையும்.

போர்க்காலச்சூழல் அதன் தேவைகளைப்பூர்த்திசெய்து ஓய்ந்துபோய் ஒன்பதாண்டுகளை கடந்துசெல்வுள்ளோம் இந்த நிலையில் தமிழர்கள் உரிமைசார் விடயங்களில் தீர்க்கமான தீர்வின்றி சுபீட்ஷமான அபிவிருத்தியின்றி சிறையிலுள்ள  எமது அரசியல் கைதிகளின் விடுதலையின்றி வெற்றிடமான ஓர்காலவோட்டத்தில் தமிழினம் பயணிக்கின்றது.
அழிக்கப்படும் ஒரு நிலையில் தமிழர்கள் ஆயுதமேந்தியபோது ஜனநாயகம் மனித உரிமைகள் தொடர்பில் வலியுறுத்தி சர்வதேச மத்தியஸ்தத்துடன் தமிழர்கள் நலனில் அக்கறைகொண்ட சர்வதேச நாடுகள் இன்றும் அதேபிரச்சினைகள் எமை விட்டகலாது சூழ்ந்துள்ள நிலையில் ஆயுதங்களற்ற இராணுவச்சமநிலையற்ற தமிழர் தரப்பை எங்கள் நியாயப்பாடுகளில் சர்வதேசம் கவனம்கொள்ளாதது கவலை அளிக்கின்றது.

அன்பான தாயக உறவுகளே ஒன்றாகுதலே இனத்தின் இன்றையதேவை வருகின்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தில் அனைத்து உறவுகளும் அமைப்புக்களும் அரசியல்கட்சிகளும் ஒன்றினைந்து ஓரணியாக ஒன்றுபட்டு செயலாற்றவருமாறு அன்புரிமையுடன் அழைக்கின்றோம். பேதங்கள் கோபங்கள் வியாக்கியானங்கள் கோட்பாடுகள் அனைத்தையும் இத்தினமதில் மறவுங்கள் முள்ளிவாய்கால் என்பது ஒரு இனத்தின் விடுதலைக்காக போராளிகளும் அதன் மக்களும் தீக்குளித்தமண் விடுதலைக்கனவுடன் ஆயிரம்ஆயிரம் வேங்கைகளும் பல இலட்சக்கணக்கான மக்களும் தங்கள் இன் உயிர்களை ஆகுதியாக்கிய மண். விடுதலை வேண்டி ஒன்றாக போராடியநாம் அந்த விடுதலையை வேண்டியவர்கள் நினைவில் கொள்ளப்படும் காலமதில் விலகிநிற்பதில் எவ்வித நியாயப்பாடுகளும் இல்லை.

நன்றி
க.துளசி
ஊடகப்பிரிவு
ஜனநாயகப் போராளிகள் கட்சி