தமிழர்களின் கலாச்சாரத்தை பாதுகாக்கும் வகையில் கழகங்கள் செயற்பட வேண்டும்

தமிழர்களின் கலாச்சாரத்தை பாதுகாக்கும் வகையில் விளையாட்டுக் கழகங்கள் செயற்பட வேண்டும் என வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினரும்,இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் கோறளைப்பற்று பிரதேச கிளையின்; செயலாளருமான கனகரெட்ணம் கமலநேசன் தெரிவித்தார்.

கல்மடு லக்ஷ்மன் விளையாட்டு கழகத்தின் விளையாட்டு நிகழ்வின் இறுதி நிகழ்வான பரிசுகள் வழங்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை மாலை கழகத்தின் மைதானத்தில் நடைபெற்ற போது கலந்து கொண்டு மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்-

தமிழர்களின் கலாச்சாரம் தற்போது மங்கிக் கொண்டு செல்கின்ற நிலைமை காணப்பட்டு வருகின்றது. தற்போது அந்நிய நாட்டுக் கலாச்சாரம் எமது மக்கள் மத்தியில் எழுந்து கொண்டு வருகின்றது.

அந்நிய நாட்டு கலாச்சாரத்தை ஒழித்து எமது தமிழ் கலாச்சாரத்தை வளர்க்கும் வகையில் அனைத்து கழகங்களும் செயற்பட்டு, தமிழ் கலாச்சார நிகழ்வுகளை நடாத்த வேண்டும். வருடத்தில் ஒரு முறை மாத்திரம் நடாத்தாமல் பலமுறை நடாத்தி எமது கலாச்சாரத்தை காப்பாற்றுங்கள்.

தமிழ் மக்களின் பாராம்மபரியங்களை காப்பாற்றும் பொறுப்பு தமிழ் மக்களாக நமது கையில் உள்ளது எனவே இந்த விடயத்தில் அனைவரும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும் என்றார்.

இந்நிகழ்வில் ஐக்கிய தேசிய கட்சியின் கல்குடாத் தொகுதி அமைப்பாளர் ஆறுமுகம் ஜெகன் உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்து கொண்டதுடன், வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டது.