மட்டக்களப்பு மாவட்ட எல்லையில் நடந்தேறிய மாவட்ட வெசாக் நிகழ்வு

(படுவான் பாலகன்) மட்டக்களப்பு மாவட்ட வெசாக் நிகழ்வுகள் செங்கலடி பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட மங்களகம ஸ்ரீ தர்மராமய விகாரையில், விகாரதிபதி பி.சந்தரத்தன ஹிமியின் ஆசிகளுடன் நடைபெற்றன.
மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை(29) இரவு நடைபெற்ற இந்நிகழ்வில், வழிபாடுகளைத்தொடர்ந்து வெசாக் பந்தல்களை அரசாங்க அதிபர் ஒளியூட்டி ஆரம்பித்து வைத்ததுடன், வெசாக் காட்சிப் பந்தல்களையும் பார்வையிட்டார்.

இந்நிகழ்வுக்கான ஏற்பாடுகளை ஏறாவூர்பற்று, செங்கலடி பிரதேச செயலகத்தினர் மேற்கொண்டிருந்தனர்.
இனங்களுக்கிடையில் நல்லுறவை ஏற்படுத்தும் வகையில், மாவட்ட செயலகங்களினால் இவ்வாறான நிகழ்வுகள் நடாத்தப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

குறித்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ், சிங்கள மக்கள் பலர் கலந்துகொண்டிருந்ததுடன், மாவட்டத்தின் நகரை அண்டிய பகுதியில் மாத்திரம் இவ்வாறான நிகழ்வுகள் நடைபெற்று வந்த நிலையில், மாவட்டத்தின் எல்லைப்பகுதிகளிலும் வெசாக் நிகழ்வுகள் நடாத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

காட்சிப்படுத்தப்பட்டிருந்த வெசாக் பந்தல்களில், சிறந்த பந்தல்களை தெரிவு செய்து பரிசில்களும்வழங்கப்பட்டன. நிகழ்வில் இந்து, இஸ்லாம் மதகுருமார்களும், மாவட்ட செயலக உயரதிகாரிகளும், பிரதேசசெயலக உயரதிகாரிகளும், செயலக உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.