உங்களை நம்பி வடக்கு கிழக்கு மாகாணங்களின் இணைப்புக்கு ஆதரவு தர கிழக்கு முஸ்லிம்களின் பட்டறிவு இடம் தராது.  

திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் பாடசாலை சுமார் 150 வருட பாரம்பரிய வரலாறைக் கொண்டது.அகற்கென உலகம் ஏற்றுக்கொண்ட ஒரு மரபு உண்டு. அந்த மரபுகளுக்கு ஏற்ப கருமங்கள் நடக்க வேண்டும். அவற்றை மீறாமல் பேச்சு நடத்தப்பட்டு உரிய முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
 
இது குறித்து கிழக்கின் எழுச்சியின் செயலாளர் அஸ்ஸுஹூர் சேகு இஸ்ஸடீன் கருத்து தெரிவிக்கையில்.
 
முஸ்லிம்களுக்கென்று அதை விடவும் பெரிய உலகம் ஏற்றுக்கொண்ட கலாச்சாரம ஒன்றுள்ளது. பெண்களின் அவயவங்கள் தெரியாதவாறு மிகவும் கண்ணியமான முறையில் ஆடை அணியும்போது சண்முகாவின் பாரம்பரியமும் மரபுகளும் எங்கனம் பாதிக்கப்படும்?
 
படிப்பிக்கும் ஆசிரியைகளின் ஆடையில்தானா சண்முகாவின் பாரம்பரியம் தங்கியுள்ளது. அப்படியாயின் அபாயாவை விடவும் ஒழுக்கமான  ஆடை இருக்க முடியாது. அவ் முஸ்லிம் ஆசிரியைகள் தாமாக விரும்பி அப்பாடசாலைகளுக்குச் சென்றவர்களும் அல்ல.
 
அப்பாடசாலை தனியாரினால் ஆரம்பிக்கப்பட்டதாக இருக்கலாம். ஆனால் இன்று அது ஒரு அரச பாடசாலை. இன மத வேறுபாடுகளுக்கப்பால் மனிதத்தை முன்னெடுப்பதற்கான கல்வியை இளம் தலைமுறைக்குச் சொல்லிக்கொடுக்க வேண்டியது அவ்வதிபரினதும் ஆசிரியர்களினதும் கடமையல்லவா?
 
இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுவதனால்  சண்முகாவின் பாரம்பரியம் மரியாதை என்பன காற்றில் பறக்க விடப்பட்டுள்ளதை இவர்கள் உணரவில்லையா?
 
இளம் சந்ததியினருக்கு எவ்வகையான முன்மாதிரியை நீங்கள் கொண்டு சேர்க்க விரும்புகிறீர்கள்.?
 
மதங்களுக்கிடையேயான சகிப்புத்தன்மை இல்லாமல் நடந்து கொண்டதோடல்லாமல் காலா காலமாக உள்ள நடவடிக்கைகளை மாற்ற முடியாது என்று நொண்டிச்சாட்டு கூறுகின்றீர்கள்.
 
சிறுபான்மையினரான தமிழர்கள் தம்மிலும் சிறுபான்மையினரான முஸ்லிம்களை கௌரவத்துடன் நடத்துவதல்லவா அவர்களின் நீண்ட கால போராட்டத்தை நியாயப்படுத்துவதாக அமையும். முப்பது வருட இருண்ட யுகம் உங்களுக்கு எதையும் கற்றுத்தரவில்லையா?
 
யாழ்ப்பாண, காத்தான்குடி மற்றும் ஏறாவூர் முஸ்லிம்கள் உட்பட வடகிழக்கு முழுவதும் ஏற்படுத்தப்பட்ட இழப்புகளுக்குப் பிராயச்சித்தம் செய்து முஸ்லிம்களின் ஆதரவைப் பெறுவதிலிருந்தும் இச்செயல்கள் இன்னும் தூரமாக்கிவிடும்.
 
உங்களை நம்பி வடக்கு கிழக்கு மாகாணங்களின் இணைப்புக்கு ஆதரவு தர கிழக்கு முஸ்லிம்களின் பட்டறிவு இடம் தராது.