தமிழ் மக்களின் விடுதலைப் பயணத்தில் ஊடகர்களின் பங்கு கட்டுரைத் தொகுப்பு நூல் அறிமுகம்

(சிவம்)

மட்டக்களப்பைப் பிறப்பிடமாகவும் சுவிற்சர்லாந்தில் வசிப்பவருமாகிய சிரேஷ்ட ஊடகவியலாளர் சண் தவராஜா எழுதிய தமிழ் மக்களின் விடுதலைப் பயணத்தில் ஊடகர்களின் பங்கு கட்டுரைத் தொகுப்பு நூல் அறிமுகம் நேற்று (29) மாலைமட்டக்களப்பு  மறைக் கல்வி நடுநிலையத்தில் நடைபெற்றது.

மறைந்த தராகி சிவராம் அவர்களின் 13 ஆம் ஆண்டு ஞாபகார்த்த நினைவு தினம் அனுஷ்டக்கப்பட்டபோது அதன் ஒரு அங்கமாக குறித்த நூல் அறிமுகம் இடம்பெற்றது.

கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியம், யாழ் ஊடக அமையம், வொய்ஸ் ஒவ் மீடியா ஊடகக்கற்கைகள் நிறுவகம், அரங்கம் ஊடக நிறுவனம் , இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் மற்றும் இணையத்தள ஊடகவியலாளர் ஒன்றியம்என்பன இணைந்து ஏற்பாடு செய்திருந்த சிவராம் அவர்களின் 13 ஆம் ஆண்டு ஞாபகார்த்த நினைவு தின நிகழ்வு சிரேஷ;ட ஊடகவியலாளர் இ. பாக்கியராஜா தலைமையில் நடைபெற்றது.

கிழக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சர் கி.துரைராசசிங்கம், முன்னாள் உறுப்பினர்களான கோ.கருணாகரன், இந்திரக்குமார் பிரசன்னா, மட்டக்களப்பு மாநகர பிரதி மேயர் க.சத்தியசீலன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களானபா.அரியநேத்திரன், எஸ்.ஜெயானந்தமூர்த்;தி, மாநகரசபை உறுப்பினர்கள், மட்டக்களப்பு வர்த்தக சங்கப் பிரதிநிதிகள், சுவீடன் நாட்டு ஊடகவியலாளர் ஜோண் மெகாஷpன், இணையத்தள ஊடகவியலாளர் ஒன்றிய தலைவர் பிறடி ஹமஹே,யாழ் ஊடக அமைய போசகர் தயாளன் மற்றும் சமன் வக்காராச்ச உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அகரம் சஞ்சிகையில் வெளிவந்த எழுபதிற்கும் மேற்பட்ட கட்டுரைகளிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 25 கட்டுரைகளைத் தாங்கிய இத்தொகுப்பு  நூல் கடந்த 22.04.2018 இல் சுவிற்சர்லாந்தில் வெளியிட்டு வைக்கப்பட்டதோடு இந்த நூல் சிவராம்ஞாபகார்த்தமாக இலங்கை வாசகர்களுக்காக மட்டக்களப்பில் கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியத்தினால் அறிமுகம் செய்து வைக்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.