வாழைச்சேனையில் முஸ்லிம் காங்கிரஸிற்கு பிரதி தவிசாளர் பதவி பெறும் வாய்ப்பு இருந்தது.பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி

வாழைச்சேனை பிரதேச சபையில் இலகுவாக பிரதி தவிசாளர் பதவியை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு பெறக் கூடிய வாய்ப்புக்கள் காணப்பட்டது என கிராமிய பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

கிராமிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக பிரிவிற்குடப்பட்ட வாழைச்சேனை 206டி மற்றும் வாழைச்சேனை 206 ஆகிய பிரதேசத்திலுள்ள தொழில் முயற்சியாளர்களுக்கு வாழ்வாதார உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு சனிக்கிழமை மாலை வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலை கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற போதே மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்-

பிரதேச சபை கொடுக்கின்றோம் என்று சென்னால் அதனை எடுப்பதற்கு தயாராக இல்லை. இம்முறை உள்ளுராட்சி தேர்தல் முடிந்ததற்கு பிறகு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு வாழைச்சேனை பிரதேச சபையில் பிரதி தவிசாளர் பதவியை பெறக் கூடிய வாய்ப்பு இருந்தது.

வாழைச்சேனை பிரதேச சபை விடயத்தில் நாங்கள் உடன்படிக்கை செய்தோம் தங்களுக்கு ஆதரவு வழங்குவதாக இருந்தால் எங்களுக்கு பிரதி தவிசாளர் பதவி தாருங்கள் என்ற முனைப்பை வைத்தோம். வெற்றி பெற்று சென்றவர்கள் இந்த விடயத்தில் கரிசனை கொள்ள மாட்டார்கள்.

அரசியலில் எந்த மாற்றத்தை கொண்டு வர வேண்டும், எதை எடுக்க வேண்டும் ஒரு விடயம் இந்தவொரு கால கட்டத்தில் கோறளைப்பற்று மத்தி பிரதேச சபையை பிரித்துக் கொள்கின்ற வேலைத் திட்டத்தில் ஒரு அழுத்தத்தை கொடுத்திருந்தால் நல்லம்.

வாழைச்சேனை பிரதேச சபையை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி வெற்றி கொள்வதற்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி ஆதரவு வழங்கினார். அதற்கு எந்த பெறுமானமும் இல்லாமல் போயுள்ளது. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினரிடத்தில் இவர்கள் பிரதி தவிசாளர் பதவியை தாருங்கள் என்று கேட்டிருக்க முடியும்.

எங்களுக்கு தனியாக பிரதேச சபை வேண்டும் என்கின்ற கோரிக்கையை உறுதிப்படுத்துகின்ற செயற்பாட்டை அங்கு இந்தக் கட்சி தெரிவின் போது தவறியிருக்கின்றது. எமது பிரதேசத்தில் அடுத்த தேர்தலுக்கிடையில் எல்லாவற்றையும் மறந்து விடுவார்கள்.

அத்தோடு வாழைச்சேனை முஸ்லிம் பகுதியில் பெற்றோர்கள் பிள்ளைகளின் கல்வியில் ஆர்வம் காட்டுவது குறைவாக காணப்படுகின்றது. பாடசாலை வளர்ச்சி, ஆசிரியர் பற்றாக்குறை விடயத்தில் எந்த கரிசனையும் காட்டுவது கிடையாது என்றார்.

கோறளைப்பற்று மத்தி கூட்டுறவுச் சங்க தலைவர் எம்.எப்.ஜஃபர்; தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் எஸ்.தையூப், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வட்டார உறுப்பினர்களாக எஸ்.நாசர், எஸ்.சஹாப்தீன், அரூஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது சிறிய தொழில் முயற்சியாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் கிராமிய பொருளாதார அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் பத்து இலட்சம் ரூபாய் பெறுமதியான மேசன் உபகரணம், இடியப்பம் அவிக்கும் உபகரணம்;, கேஸ் அடுப்பு, மண் வெட்டி, மீனவர் காப்பக மேலங்கி, எண்ணெய் தெளிக்கும் கருவி, தண்ணீர் பம், என்பன 148 பேருக்கு வழங்கி வைக்கப்பட்டது.