அபிவிருத்தி என்ற போர்வையில் தமிழினத்திற்கு பாதிப்பு ஏற்படுமாகவிருந்தால் அதனை முற்றாக எதிர்ப்போம்!

கல்முனை மாநகரசபை கன்னி அமர்வில் த.தே.கூ.உறுப்பினர்ஹென்றி சூளுரை!
 
(காரைதீவு  நிருபர் சகா)
 
 
புதிய நகர அபிவிருத்தித்திட்டத்தால் கல்முனை அபிவிருத்தியடையவேண்டும். அதற்கு நாம் தடையுமல்ல. ஆனால் அவ் அபிவிருத்திகள் எந்த ஒரு இனத்தையும் பாதிக்காதவகையில் அமையவேண்டும். குறிப்பாக  தமிழினத்தைப்  பாதிக்குமாகவிருந்தால் அதனை முற்றாக எதிர்ப்போம்.கூடவே எமது ஒத்துழைப்பும் கிடைக்காது.
 
இவ்வாறு தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் கல்முனை மாநகரசபை உறுப்பினர் ஹென்றிமகேந்திரன் கன்னியுரையாற்றுகையில் கூறினார்.
 
கல்முனை மாநகரசபை கன்னி அமர்வு நேற்று(26) வியாழக்கிழமை  மேயர் சட்டத்தரணி எம்.ஏ.றக்கீப் தலைமையில் சபாமண்டபத்தில்  நடைபெற்றது.
 
அங்கு ஹென்றி மேலும் பேசுகையில்:
 
 
எமது 3அம்சக்கோரிக்கையினடிப்படையில்தான் எமது மக்கள் எமக்கு வாக்களித்து அனுப்பியுள்ளனர். ஆகவே நாம் அவர்களது அபிலாசைகளுக்கு முரணாக நடக்கமுடியாது. 
கல்முனையில் தமிழருக்கான நிலையான சில பிரச்சினைகளிருப்பதை அனைவரும் அறிவர்.இது காலாகாலமாக இழுத்தடிக்கப்பட்டுக்கொண்டுவருகின்றது.
 
கடந்த 35வருடகாலமாக இழுத்தடிக்கப்பட்டுவரும் கல்முனை தமிழ் பிரதேசசெயலக தரமுயர்த்தல் விடயம் சுமுகமாக தீர்த்துவைப்பதற்கு இச்சபை ஒத்துழைப்பு வழங்கவேண்டும். புதிய நகரஅபிவிருத்தித்திட்டம் என்றபோர்வையில் தமிழ்மக்களின் நெற்காணிகள் சுவீகரிக்கப்பட்டு கல்முனையில் இனக்குடிப்பரம்பல்  மற்றும் இனவிகிதாசாரம் குறைவடைவதற்கு நாம் ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம்.
சாய்ந்தமருதுக்கு தனியான சபை அமைவதில் எமக்கு ஆட்சேபனைஇல்லை. அது தவிர்ந்த மாநகரசபை ஒன்றாக இருத்தலவசியம். கட்டாயம் 3ஆகப்பரிக்கத்தான் வேண்டுமாகவிருந்தால் தமிழர் பிரதேசங்களை உள்ளடக்கிய நகரசபையொன்றை ஏற்படுத்தித்தர இச்சபை ஆதரவு நல்கவேண்டும்.
 கல்முனை மாநகரசபையில் சிற்றூழியர்கள் உள்ளிட்ட சக அலுவலர்களதும் அடிப்படைத்தேவைகள் உரிமைகள் சலுகைகள் மதிக்கப்பட்டவேண்டும்.
எநடநத விடயமானாலும் வெளிப்படைத்தன்மை அவசியம். கடந்த காலங்களில் அது பேணப்படவில்லை. தமிழ்மக்கள் சகல விடயங்களிலும் புறக்கணிக்கப்பட்டனர். எனவே அதுபோன்றதொரு பாரபட்சம் அநீதி புறக்கணிப்பு இச்சபையில் நடைபெறக்கூடாது.
எனவே இந்த புதிய சபையில் நல்லவிடயங்களுக்கு நாம் பூரணஆதரவு தருவோம். ஆனால் பிழையான வியடங்களுக்கு உடன்படமாட்டோம்.
புதிய மேயர் எனது நல்ல நண்பர். அவர் தெரிவானதற்கு வாழத்துக்கள். அவரது தலைமையில் கல்முனை சிறப்பான அபிவிருத்திகாணவேண்டும். அந்த அபிவிருத்திகள் வெளிப்படைத்தன்மை கொண்டதாகவும் எந்தவொரு இனத்தைப் பாதிக்காதவகையிலும் அமைதல்வேண்டும்.
 
ஒரு இனத்தால் இன்னொரு இனம் வஞ்சிக்கப்படக்கூடாதென்பதில் நம்பிக்கைகொண்டுள்ளவன் நான். இனிவரும் காலங்களில் இனமதபேதமின்றி நல்ல புரிந்துணர்வுடன் இதயசுத்தியுடன் சபையை வழிநடாத்திச்செல்ல ஒத்துழைப்பு நல்குவோம். என்றார்.