வீட்டுக்கொரு ஊஞ்சல் கட்டி ஆடியவர்கள் நாங்கள்!

—– படுவான் பாலகன் —-

படுவான்கரையில் வீட்டுக்கொரு ஊஞ்சல் கட்டி, ஆடி மகிழ்ந்த காலம் ஒன்று இருந்தது. அது ஒரு சுகமான காலம். ஆனால், அது மறைந்து ஊஞ்சல் என்பது விழாவாக ஓர் பிரதேசத்தில் ஓரிடத்தில் மாத்திரம் ஆடுகின்ற நிலைமை உருவாகி விட்டது.

“சித்திரை புதுவருடத்திற்கு ஒரு கிழமைக்கு முன்னமே, உயர்ந்து நிற்கும் மரங்களில் ஊஞ்சல் இட்டு, பாடல் பாடி குதூகலித்த காலமெல்லம் கடந்து, அவை குறித்த நினைவுகளை மட்டும் மீட்டிப்பார்க்கும் நிலை உருவாகியிருக்கின்றது.” என்பதனை நினைக்கையில் வேதனையாக இருக்கின்றது.” என்று கொக்கட்டிச்சோலை சந்தியில் நின்று சின்னத்தம்பி கவலைப்பட்டுக் கொண்டிருந்தார்.

சித்திரைப்புத்தாண்டு பிறந்தால் வீடுகளில் அல்லது பெரிய பெரிய மரங்கள் உள்ள இடங்களில் ஊஞ்சல் இட்டு, அதிலே இரண்டு பேருக்கு மேல் ஏறி, ஊஞ்சல் ஆடி களிப்பில் ஈடுபட்டுவந்தமை வழக்கமாய் இருந்தது. குறிப்பாக படுவான்கரைப்பகுதியில் திரும்பும் திசைக்கெல்லாம் ஊஞ்சல் ஆடுகின்றமை வழமை.

யுத்தம் நடந்தபோதிலும் கிட்டிப்புல், வார்போர், வட்டக்காவடி, கொத்து இழுத்தல், பிள்ளையார்கட்டை போன்ற பல விளையாட்டுக்களே பொழுது போக்காகவும், மகிழ்ச்சி கூடங்களாகவும் இருந்தன.

யுத்தத்தின் பின்னரான காலத்தில், தொலைபேசியின் வருகை, தொலைக்காட்சியின் வருகை என பல்தரப்பட்ட நவீன சாதனங்களின் வருகையினால் படுவான்கரைப் பகுதியில், முகங்களை முகங்கள் பார்த்துச் சிரித்ததும், பேசியதும், புத்துணர்வுகளை ஏற்படுத்திய விளையாட்டுக்களும், ஊஞ்சல் போன்ற பண்பாடுகளும் மறைந்து, தொலைபேசியை, தொலைக்காட்சியை பார்த்து சிரிக்கும், பேசும் நிலை உருவாகியிருக்கின்றமை புத்துணர்ச்சியை அகற்றி, மண்ணுலக வாழ்க்கையிலிருந்து விரைவாக விடைபெற்று செல்வதற்கான காலத்தினை உருவாக்கியுள்ளது என்பதே உண்மை.

ஒரு கடப்பினால் (கதவு) ஒருவரின் வீட்டு வளவிற்குள் நுழைந்தால் ஆறு, ஏழு வளவு கடந்து வெளியேறும் காலங்களும் கடந்து பக்கத்து வீட்டில் என்ன நடைபெறுகின்றது? என்பது தெரியாமலே மதில்களையும், மறப்புக்களையும் கட்டிவருகின்றனர். இவ்வாறான காலப்பகுதியில் சின்னத்தம்பியின் ஊஞ்சல் பற்றிய கதையும் அவசியமானதொன்றே.

கொடிகளையும், திரித்தெடுத்த கயிறுகளையும் ஊஞ்சல் கட்டுவதற்காக பயன்படுத்திய காலங்களும் இருந்தன. கொடிகளின் செல்வாக்கு வீழ்ச்சியுற்ற நிலையில், புதிய கயிறுகள் அவற்றிற்கு ஈடாகின.

உயர்ந்த மரங்களில் கயிறுகளை இட்டு, அவற்றில் பலகையைக் கோர்த்து, பலகையின் இருபக்கமும் இருவர் ஏறி நிற்க, நடுவில் ஒருவரோ, இருவரோ, இருவருக்கு மேற்பட்டவரோ (மரத்தின், பலகையின், கயிற்றின் தாங்கு திறனுக்கேற்ப) ஏறி அமர்ந்துகொள்ள, பலகையின் இருபக்கமும் கயிற்றுக்கு வெளியே பலகையில் நிற்பவர்கள் இருவரும் ஊஞ்சலை உந்தும் வேகத்திற்கு அமைய ஊஞ்சலும் நெடு தூரம் சென்றுவரும். குறிப்பாக அரைவட்ட வடிவத்திலே ஊஞ்சல் ஆடப்படும். ஆடுகின்ற போது, பல ஊஞ்சல் பாடல்களையும் பாடி மகிழ்ச்சியுறுவதும் வழமை. அதேபோன்று ஊஞ்சல் அங்குமிங்கும் செல்லுமாக இருந்தால் (தெத்துதல்) அந்தவேளை ஊஞ்சலுடன், அங்குமிங்கும் செல்லாமல் நேராக செல், நேராக சென்றால் உனக்கு நாங்கள் பணிகாரம் சுட்டுத்தருகின்றோம். என்று கூறுகின்ற பாடல்களும் பாடுகின்றமையும் சிறப்புக்குரியது.

குறிப்பாக ‘தெத்தாத ஊஞ்சல் தெத்தாதா தெத்துப்பலகாரம் சுட்டுத்தாரம்’ என்ற பாடல் வரி மறக்க முடியாதது.

ஊஞ்சல் ஆடுகின்ற இடத்தினை சுற்றி அச்சூழலில் உள்ளவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து விடுவர். ஆடுபவர்கள் மட்டுமல்லாது, பார்த்திருப்பவர்களும் ஊஞ்சல் பாடல்களைப் பாடுவர். இப்பாடல்களை செவி வழியாகவே பலர் கேட்டறிந்து பாடுபவை.

ஊஞ்சலில் யார்? அதிக தூரம் சென்று வருவதென்பதும் இங்கு போட்டியாகவிருக்கும், அதற்காக பலகையின் இருபக்கமும் கயிற்றைப் பிடித்து உத்துபவர்கள் (உந்துதல்) வேகமாக உத்திக்கொண்டிருப்பார்கள். அவர்களே ஊஞ்சலை இயக்குபவர்களாகவும் இருப்பர். ஊஞ்சலின் உத்துதலை நிறுத்திவிட்டால். ஆட்டத்தின் வேகமும் படிப்படியாக குறைவடைந்து, ஊஞ்சல் ஆடுவது நின்றுவிடும். இவ்வாறு ஊஞ்சல் இட்டு ஆடுவதனைக் கண்ணுறும் சிறுவர்கள் தங்கள் வீடுகளிலும், வளைகளில் (கூரையில் வேயப்பட்ட மரம்) சீலையைக்கட்டி ஊஞ்சல் ஆடுவதுமுண்டு.

அதேவேளை ஆலமரத்தின் விழுதுகளை இணைத்து கட்டி அதில் ஊஞ்சல் ஆடுவதும், விழுதுகளை பிடித்து ஊஞ்சல் ஆடுவதும் இங்கு வழமை.

இவ்வாறான செயற்பாடு ஒன்றுகூடல், பொழுபோக்கு, மகிழ்ச்சி, உடலுக்கான உற்சாகம், சுறுசுறுப்பு, ஊஞ்சலை இயக்கும் தன்மை போன்ற பல்வேறான அனுபவக் கற்றல்களையும், செயற்பாட்டுத்தன்மையும் ஏற்படுத்தி நிற்கும்.

நவீன போக்கிற்கு மனிதர்களின் ஈடுகொடுப்பு, நாகரீக வளர்ச்சி போன்றவற்றினால் இவ்வாறன மகிழ்ச்சிகரமான தருணங்கள் அருகிப்போய், சித்திரை வருடப்பிறப்பு விழாவுக்காக, எமது பிரதேசத்தில் இவ்வாறான நிகழ்வுகள் ஒரு காலத்தில் இடம்பெற்றன என்பதனை எடுத்துக்காட்டுவதற்காக மட்டும் ஊஞ்சல் விழா மாறியிருக்கின்றமை கவலைக்குரியதாகும்.

ஊஞ்சல் ஆடிய மரங்கள் எல்லாம் ஒழிந்துபோய், அந்த நேரங்களை எல்லாம் நவீன சாதனங்களில் செலவு செய்ய ஒதுக்கியமை, மரத்தில் ஊஞ்சல் இட்டு ஆடியதும், ஊஞ்சல் பாடல்களும் இளம்சமூகத்திற்கு தெரியாமலே போகச் செய்துவிட்டன.

மூதாதையர் உருவாக்கிய விளையாட்டுக்களும், கலைகளும், சம்பிரதாயங்களும் மனிதவாழ்வுக்கு தேவையான, மனித உடலுக்கு உறுதியை ஏற்படுத்திக்கொடுக்க கூடிய, அனுபவக்கற்றலை ஏற்படுத்தக்கூடிய செயற்பாடுகளேயாகும். அவற்றின்பால் ஈர்ப்பும், ஈடுபாடும் கொள்ளாமையினால் தமிழர்களின் இருப்புக்கான, வரலாற்றுக்கான காலங்களை சுருக்கியுள்ளோம். இதனால் மகிழ்ச்சிகரமான வாழ்க்கைக்கு உதவும், ஆரோக்கியத்திற்கு உறுதுணையாக எமது மூதாதையர்கள் எமக்களித்த விடயங்களை தொடர்ந்தும் எமது இளம் சமூதாயத்திற்கு கடத்தி நிற்க அனைவரும் ஒன்று சேரவேண்டுமென்பதே தற்போதைய எதிர்பார்ப்பு.