குடிசையில் பிறந்து ரூ. 10 ஆயிரம் கோடிக்கு அதிபதியான சுவாமியார்

பதினாறு வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டில் சிக்கி தண்டனைக்கு உள்ளாகியிருக்கிறார் தன்னையே கடவுள் என அறிவித்துக் கொண்டு, தனக்கென ஒரு உலகத்தைக் கட்டமைத்த ஆசாராம் பாபு. 2012-ம் ஆண்டு ஜோத்பூர் ஆஸ்ரமத்தில் தங்கி இருந்த பெண்ணை பலாத்காரம் செய்த வழக்கில் சாமியார் ஆசாராம் பாபுவுக்கு வாழ்நாள் சிறைத் தண்டனை வழங்கி ஜோத்பூர் சிறப்பு எஸ்.சி.,எஸ்.டி. நீதிமன்றம் நேற்று அதிரடித் தீர்ப்பு வழங்கி உள்ளது.

ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூரில் ஆசிரமம் நடத்தி வந்தவர் சாமியார் ஆஸ்ராம் பாபு (75). மத்தியப் பிரதேச மாநிலம், சிந்திவாரா பகுதியில் உள்ள ஆசாராம் பாபுவின் மற்றொரு ஆசிரமத்தில் இளம்பெண் ஒருவர் தங்கிப் படித்து வந்தார். இந்தப் பெண் தன்னை சாமியார் ஆசாராம் பாபு பாலியல் பலாத்காரம் செய்ததாக பொலிஸில் புகார் செய்தார்.

2013-ம் ஆண்டு, ஓகஸ்ட் 15-ம் திகதி ஜோத்பூர் ஆசிரமத்துக்கு வரக்கூறிய ஆசாராம் பாபு தன்னை பலாத்காரம் செய்தார் என்று அந்த இளம்பெண் புகாரில் குறிப்பிட்டிருந்தார்.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த பொலிஸார், ஆசாராம் பாவுவை கைது செய்தனர். இவர் மீது போக்சோ, எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச்சட்டத்தில் வழக்குப் பதிவு செய்தனர். கடந்த 2013-ம் ஆண்டு, ஓகஸ்ட் 31-ம் திகதியில் இருந்து ஆசாராம் பாபு சிறையில் இருந்து வருகிறார்.

விசாரணை முடிந்த நிலையில் நிலையில் நேற்று நீதிபதி ஜோத்பூர் நீதிமன்றத்துக்கே சென்று தீர்ப்பு வழங்குவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி நீதிபதி மதுசூதன் சர்மா ஜோத்பூர் சிறைக்கு நேற்றுக் காலை சென்று, 16-வயது சிறுமியை பாலத்காரம் செய்த வழக்கில் சாமியார் ஆசாராம் பாபு குற்றவாளி என்று அறிவித்தார். தண்டனை விவரங்கள் பிற்பகலில் அறிவிப்படும் என்று அறிவித்துச் சென்றார்.

அதன்படி நீதிபதி மதசூதன் சர்மா நேற்று பிற்பகலில் தீர்ப்பளித்தார். அதில் 2012-ம் ஆண்டு 16-வயது சிறுமியை பலாத்காரம் செய்த குற்றத்துக்காக போக்சோ சட்டம் மற்றும் எஸ்சி,எஸ்டி சட்டத்தின்படி சாமியார் ஆஸாராம் பாபுவுக்கு வாழ்நாள் சிறை விதிக்கப்படுகிறது. அவரின் உதவியாளர்கள் சரத், சில்பி ஆகியோருக்கு 20 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்படுகிறது எனத் தீர்ப்பளித்தார்.

1970களில் சபர்மதி ஆற்றங்கரையில் சாதாரண குடிசையில் தனது ஆசிரமத்தைக் கட்டமைத்து, எளிமையாக தொடங்கிய ஆசாராம் பாபுவின் வாழ்க்கை அடுத்த 40 ஆண்டுகளில் ரூபா 10 ஆயிரம் கோடிக்கு மேலான சொத்துக்களுக்கு அதிபதியாக்கி விட்டது. கோடிகளில் புரண்டு, வாழும் ஆடம்பரமான சாமியாராகி விட்டார் ஆசாராம் பாபு.

பிரிக்கப்படாத இந்தியாவில் தற்போது பாகிஸ்தானின் சிந்து மாநிலத்தில் உள்ள நவாப்ஷா மாவட்டத்தில் உள்ள பெரானி கிராமத்தில் கடந்த 1941-ம் ஆண்டு, ஏப்ரல் 17-ம் திகதி பிறந்தவர் ஆசாராம் பாபு. இவரின் இயற்பெயர் ஆசாராம் பாபு இல்லை, அன்சுமால் துமால் ஹர்பலானி.

கடந்த 1947-ம் ஆண்டுக்கு பின்னர் இந்தியா பிரிக்கப்பட்டபோது, பாகிஸ்தானின் சிந்து மாநிலத்தில் இருந்து புறப்பட்டு குஜராத்தின் அஹமதாபாத் நகரில் ஆசாராம் பாபுவின் பெற்றோர் குடும்பத்துடன் புலம்பெயர்ந்தனர். தங்களுடைய சொத்துக்கள் அனைத்தையும் பாகிஸ்தானில் கைவிட்டு இந்தியாவுக்கு வந்தனர். அதன்பின் ஆசாராம் பாபுவின் தந்தை துமால் சிறுமலானி நிலக்கரி, மரம் வியாபாரம் செய்தார்.

ஆசாராம் பாபு அஹமதாபாத்தில் உள்ள ஜெய்ஹிந்த் உயர்நிலைப்பள்ளியில் 4-ம் வகுப்புவரை மட்டுமே படித்தார். இவரின் தந்தை இறந்தபின் ஆசாராம் பாபு, தந்தையின் தொழில் செய்யாமல் மதுவிற்பனை, தேநீர் விற்பனை, சைக்கிள் பழுதுபார்த்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளைச் செய்தார்.

தன்னுடைய 15-வது வயதில் லட்சுமி என்ற பெண்ணுடன் ஆசாராம் பாபுவுக்கு திருமணமானது. இவருக்கு நாராயண் சாய் என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

குடும்ப வாழ்க்கைக்குபின் ஆன்மிகத்தில் நாட்டம் கொண்ட ஆசாரம் பாபு இமயலைக்குச் சென்றார். அங்கு லீலாஷா பாபு என்ற துறவி 1964-ம் ஆண்டு, அக்டோபர் 7-ம் திகதி அன்சுமால் துமால் ஹர்பலானிக்கு தீட்சை அளித்து , ‘ஆசாராம் பாபு’ என்ற பெயரை வழங்கினார். அன்று முதல் தனது அன்சுமால் துமால் ஹர்பலானி என்ற இயற்பெயரை மறைத்து ஆசாராம் பாபு என்ற பெயரில் வாழத் தொடங்கினார்.

கடந்த 1971-ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் அஹமதபாத் நகரம் வந்து பல்வேறு சொற்பொழிவுகளையும், ஆன்மீக கூட்டங்களையும் ஆசாராம் பாபு நடத்தினார். அதன்பின், கடந்த 1972-ம் ஆண்டு ஜனவரி 29-ம் திகதி சபர்மதி ஆற்றங்கரையில் உள்ள மோதிரா எனும் கிராமத்தில் சிறிய குடில் அமைத்து தனது ஆசிரமத்தை ஆசாராம் பாபு தொடங்கினார்.

அவருக்கு அதிகமான சீடர்கள் வரத் தொடங்கினார்கள், மாநிலத்தில் பல்வேறு நகரங்களில் சிறிய அளவிலான ஆசிரமத்தைத் தொடங்கினார். அதன்பின் கடந்த 1981- மற்றும் 1992 ஆகிய ஆண்டுகளில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசு ஆசாராம் பாபுக்கு ஆசிரமம் அமைக்க நிலம் வழங்கியது. 1997ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பாஜக அரசு ஆசாராம் பாபுவின் ஆசிரமத்தை விரிவாக்கம் செய்ய அனுமதி வழங்கி, இடத்தையும் அளித்தது.

அதன்பின் ஆசாராம் பாபு குஜராத் மட்டுமல்லாது ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தனது ஆசிரமத்தின் கிளைகளையும், குருகுலங்களையும் தொடங்கினார்.

குருகுலத்தில் அச்சடிக்கும் இயந்திரங்கள்,சவர்க்காரம், ஷாம்பு, ஆயுர்வேத மருந்துகள் உள்ளிட்ட பொருட்களைத் தயாரித்து அதை விற்பனை செய்தார். இதன் மூலம் இவருக்கு இலாபமும், புகழும் பெருகின. உள்நாட்டில் இருந்து மட்டும் வந்த சீடர்கள், வெளிநாடுகளிலும் இருந்து வரத்தொடங்கினார்கள், நன்கொடை குவியத் தொடங்கியதால், ஆசராம் பாபு தனது ஆசிரமத்தின் கிளைகளை வெளிநாடுகளிலும் அமைத்தார்.

ஆசாராம் பாபுவைத் தேடி இவரின் சீடர்கள் மட்டுமல்லாது, வி.ஐ.பிக்களும், அரசியல்வாதிகளும், ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களும் சந்திக்கத் தொடங்கினார்கள். இதனால், முக்கியமான சக்தியாக உருவாகத் தொடங்கினார். குடிசையில் தொடங்கிய இவரின் ஆசிரமத்தின் சொத்துமதிப்பு ரூ.5 ஆயிரம் கோடியாக உயர்ந்தது.

கடந்த 2008-ம் ஆண்டில் ஆசாரம் பாபுவுக்கு முதன் முதலில் சிக்கல் உருவானது. தனது ஆசிரமத்தில் தங்கி இருந்த இரு சகோதரர்கள் தீபேஷ், அபிஷேக் வகேலா ஆகிய இருவரும் ஆசிரமத்துக்கு அருகே இருக்கும் சபர்மதி ஆற்றங்கரையில் சடலமாக கரை ஒதுங்கினார்கள்.

அவர்களின் உடலைக் கைப்பற்றி பொலிஸார் உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பியபோது அதிர்ச்சியான தகவல்கள் வந்தன. அவர்களின் உடலில் முக்கியமான உறுப்புகள் அனைத்தும் ஏற்கனவே எடுக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மர்மமாக இறந்த தீபேஷ், அபிஷேக் ஆகியோரின் பெற்றோர் தங்களுடைய மகன்கள், மந்திரதந்திரங்களுக்காக நரபலி கொடுக்கப்பட்டுள்ளார்கள் ஆதலால் உரிய நீதிவிசாரணை கேட்டு அப்போது குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடிக்கு கோரிக்கை அனுப்பினார்கள்.

இது தொடர்பாக சி.ஐ.டி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டதில் எந்தவிதமான நரபலியும் நடக்கவில்லை என அறிக்கை வந்தது. இது தொடர்பாக 7 பேர் மட்டும் கைது செய்யப்பட்டனர்.

அதன்பின்னர், அப்போது முதல்வராக இருந்த மோடி, திரிவேதி தலைமையில் ஒரு விசாரணை ஆணையம் அமைத்தார். இந்த ஆணையத்தை எதிர்த்து ஆசாராம் பாபுவின் ஆதரவாளர்கள் பெரிய அளவில் போராட்டம் நடத்தினார்கள், அதில் கலவரம் மூண்டு, 20க்கும் மேற்பட்ட பொலிஸார் காயமடைந்தனர். 200இற்கும் மேற்பட்ட ஆசாராம் பாபுவின் ஆதரவாளர்கள் கைதாகினார்கள்.

அதன்பின்னர் கடந்த 2013-ம் ஆண்டு ராஜஸ்தானின் ஜோத்பூர் ஆஸிரமத்தில் 16வயது சிறுமியை ஆசிராம் பாபு பலாத்காரம் செய்ததாக புகார் செய்யப்பட்டது. இந்தப் புகாரை விசாரணை செய்த பொலிஸார் அதில் முகாந்திரம் இருந்ததைத் தொடர்ந்து, கடந்த 2013-ம் ஆண்டு ஆகஸ்ட் 13-ம் திகதி ஆசாராம் பாபுவைக் கைது செய்தனர்.

இதற்கிடையே சூரத் நகரைச் சேர்ந்த இரு சகோதரிகள் ஆசாராம் பாபு மீதும், அவரின் மகன் நாராயண் சாய் மீதும் பலாத்கார புகார்களை அளித்தனர். ஆசாராம் பாபுவின் சீடர்களான எங்களை இருவரும் பலமுறை பலாத்காரம் செய்துள்ளனர் என்று புகார் தெரிவித்தனர்.

16-வயது சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கு தவிர்த்து இந்தச் சகோதரிகளை பலாத்காரம் செய்த வழக்கும் நிலுவையில் இருக்கிறது. இந்த வழக்கில் ஆசாரம்பாபுவின் மகன் நாராயண் சாய் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார்.

குடிசையில் தொடங்கிய ஆசாராம் பாபுவின் வாழ்க்கை ஏறக்குறைய 40 ஆண்டுகளில் ரூ.10 ஆயிரம் கோடி சொத்துக்களுக்கு அதிபதியாக மாற்றியுள்ளது. உள்நாடு, உலக அளவில் கோடிக்கணக்கான சீடர்கள் ஆசாராம் பாபுவுக்கு உள்ளனர், இவருக்குச் சொந்தமாக 12 நாடுகளில் 400 ஆசிரமங்கள், 50-க்கும் மேற்பட்ட பள்ளிக்கூடங்கள், ஒரு மிகப்பெரிய அச்சகம், ஆயுர்வேத பொருட்கள் விற்பனை, தயாரிப்பு கூடம் உள்ளிட்டவை இருக்கின்றன.

இதோடுமட்டுமல்லாமல், ஆசாராம் பாபு அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துக்களைக் கூறி பரபரப்பையும் ஏற்படுத்துவார். கடந்த 2012ம் ஆண்டு நிர்பயா பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தின்போது, அதை கொச்சைப்படுத்தி சர்ச்சைக்குரிய வகையில் கருத்துத் தெரிவித்தார். மேலும் தனக்கு எதிராக சாட்சி கூறியவர்களைக் கொலை செய்வதும், அடித்தும் கொடுமைப்படுத்தியதாக ஆசாரம் பாபு மீது குற்றச்சாட்டு எழுந்தது.

மேலும் ஆசாரமத்துக்கு அருகே இருக்கும் ஏராளமானோரின் நிலங்களை ஆக்கிரமித்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளும் ஆசாராம் பாபுமீது இருக்கிறது. இதற்கிடையே கடந்த ஆண்டு சாதுக்களின் உயர்மட்ட அமைப்பான அகில பாரதிய அகார பரிசத் அமைப்பு, போலிச்சாமியார்கள் பட்டியலில் ஆசாராம்பாபுவின் பெயரையும் சேர்த்து வெளியிட்டு அவரை போலிச்சாமியாராக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

பலாத்கார வழக்கில் தற்போது ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு இருக்கும் சாமியார் ஆசாராம் பாபு, மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் இருந்து வளர்ந்து 40 வருடம் தனி உலகம் ஒன்றையே உருவாக்கி அதை தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்து இருந்துள்ளார். ஒரு சாமியார் தன்னுடைய பேச்சு மூலம் மக்களை எப்படி எல்லாம் ஏமாற்ற முடியும் என்பதற்கு உலகம் பல எடுத்துக்காட்டுகளை கொடுத்து இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு சாமியார்தான் இந்த ஆசாராமும்.

ஆனால் இவர் வெறும் சாமியார் மட்டுமில்லை. ஒரு பிசினஸ் ​ெமாடலாக இவரை மட்டும் எம்பிஏ படிப்பில் பாடமாக நடத்தி இருந்தால், பெரிய விஷயமாக இருந்திருக்கும். பொய்யும், புரட்டும் கூறி ஒரு மனிதர், தனியாக வெறும் 40 வருடத்தில் ரூ.10,000 கோடிக்கு சொத்து சேர்த்து இருக்கிறார் என்றால் இவர் வாழ்க்கை எப்படிப்பட்டதாக இருக்கும்? முக்கியமாக ஒரு நான்காம் வகுப்பு தாண்டாத ஆள், இவ்வளவு பெரிய மோசடியை செய்தது எப்படி?

இவ்வளவு வருடம் நடந்த வழக்கில் இன்று இவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இவருக்கு சொந்தமாக ரூ.10000 கோடி மதிப்பிற்கு பல இடங்களில் சொத்து இருப்பதாக கூறப்படுகிறது. இந்த சொத்துக்கள் அனைத்தும் இப்போது முடக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் இன்னும் இவரின் சொத்துக்கள் பல முடக்கம் செய்யப்படாமல், யாருக்கும் எங்கே இருக்கிறது என்று தெரியாமல் இருப்பதாக சமூக ஆர்வலர்கள், இந்த வழக்கை கவனித்து வரும் நபர்கள் தெரிவித்துள்ளனர்.

இவ்வளவு குற்றம் ரூ. 10000 கோடி சேர்த்த இவருக்கு இன்னும் இவரது பக்தர்கள் ஆதரவு அளிக்கிறார்கள். இவர் மீது போடப்பட்டது பொய் வழக்கு என்கிறார்கள்.