மட்டக்களப்பில் ஆசிரியர் ஒருவர் உண்ணாவிரதம்

மட்டக்களப்பிலுள்ள ஆசிரியர் ஒருவர், மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் தனக்கு அநீதி இழைத்துள்ளதாகத் தெரிவித்து, மட்டக்களப்பு நகரிலுள்ள காந்தி பூங்காவுக்கு முன்னால், உண்ணாவிரத்தப் போராட்டத்தில் இன்று (25) ஈடுபட்டார்.

கே.கிருபாகரன் இவ்வாசிரியர், மட்டக்களப்பு கல்வி வலயத்திலுள்ள கிரான்குளம் சரஸ்வதி வித்தியாலயத்தில் தொடர்ச்சியாக பத்து ஆண்டுகள் கடமையாற்றியுள்ளதாகவும், தற்போது விபத்தொன்றில் தன்னுடைய கால் உடைந்து ஊன்றுகோலின் துணையுடனே நடப்பதாகவும் தெரிவித்தார்.
இதனால், கிரான்குளம் பாசாலைக்குச் செல்வதில் சிரமமாக இருப்பதனால், தனக்கு ஓர் இடமாற்றத்தைத் தருமாறு பல தடவை கோரிய போதிலும், தனக்கு இடமாற்றம் வழங்காமல் அநீதி இழைக்கப்படுவதாகக் குறிப்பிட்டார்.

“கடந்த ஒரு வருடம் தற்காலிகமான ஓர் இடமாற்றம் வழங்கப்பட்ட போதிலும், தற்போது அந்தத் தற்காலிக இடமாற்றமும் முடிந்து விட்டது.
“நான் இன்று ஒரு வலது குறைந்தவராக இருக்கின்றேன். நடக்க முடியாது காலில் காயமும் உள்ளது. எனது நிலையை மனிதாபிமானத்துடன் நோக்கி, எனக்கான இடமாற்றத்தைப் பெற்றுத்தர வேண்டும்” எனவும் அவர் கோரினார்.

தனது நிலைமை தொடர்பாக, கிழக்கு மாகாண ஆளுநர், கல்வியமைச்சின் செயலாளர், மாகாண கல்வித் திணைக்களப் பணிப்பாளர் ஆகியோருக்கும் அறிவித்தாகக் குறிப்பிட்ட அவர், எனினும் தனக்கான இடமாற்றம் கிடைப்பதை, வலய கல்விப் பணிப்பாளரே தடுத்து நிறுத்தியுள்ளார் என்றும் குற்றஞ்சாட்டினார்.

இது தொடர்பாக, மட்டக்களப்பு வலய கல்விப் பணிப்பாளர் கே.பாஸ்கரனிடம் கேட்டபோது, “இவருக்கு தற்காலிக இடமாற்றம் ஒன்றை, நான் வழங்கினேன். நிரந்தமாக இடமாற்றம் செய்வதற்கான அதிகாரம் எனக்குக் கிடையாது.

“அவரின் இடமாற்றத்தை நான் மாகாண கல்வித் திணைக்களத்துக்குச் சிபாரிசு செய்ய முடியும். அவர் என்னிடம் விண்ணப்பித்தால், நான் அதனை மாகாண கல்வியமைச்சின் செயலாளருக்கும் மாகாண கல்விப்பணிப்பாளருக்கும் சிபாரிசு செய்வேன்” என்றார்.