கல்வி ரீதியாக மாற்றத்தை ஏற்படுத்த துடிக்கும் மண்முனை தென்மேற்கு மகளீர்கள்!

0
893
– படுவான் பாலகன் –
இழந்தவைகளை பெற்று சாதித்து காட்ட வேண்டுமென்பதே இவர்களின் துடிப்பு.
யுத்த வடுக்களை தாங்கிய மண்முனை தென்மேற்கு பிரதேசத்தில், பல பெண்கள் விதவைகளாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். ஆண் துணையுள்ள குடும்பங்களே வாழ்க்கையை சிரமின்றி கொண்டு செல்வதற்கு பல பிரயத்தனங்களையும், போராட்டங்களையும் மேற்கொண்டு வாழ்க்கையை வழிநடத்தும் இக்காலகட்டத்தில். ஆண்துணையின்றி குடும்பத்தின் தலைவன், தலைவியாகவிருந்து பல பெண்கள் குடும்பத்தினை வழிநடத்தி செல்கின்றமை வியப்பானதே.
அரிசி குற்றி, மா இடித்து தலையில் வைத்து சுமந்து 15கிலோ மீற்றர் தொலைவில் சென்று விற்று வீடு திரும்பி, வீட்டு வேலைகளையும் செய்து, பிள்ளைகளின் கடமைகளையும் நிறைவேற்றும் சம்பவங்கள் இன்றும் பட்டிப்பளைப்பிரதேசத்தில் இருப்பதென்பதும் வேதனையானதே.
தாம் அனுபவிக்கும் சுமைகளையும், வேதனைகளையும் தம்பிள்ளைகள் அனுபவித்துவிடக்கூடாது என்பதில், தாய்யவள் குறியாக இருக்கின்றாள். இதைத்தான் தாய் பாசம் என்கிறார்கள். அதற்காக பிள்ளைகளை கற்பிப்பதில் ஆர்வமாக இருப்பதாக, துணைவன் இன்றி நிற்கும் தாய் ஒருவர் குறிப்பிட்டாள். சமூகத்தில் துணையின்றி நிற்கும், மகளீர்களுக்கு கல்வியும் அவர்கள் காலத்தில் எட்டாக்கனியானதும் இன்று வேதனையுறுவதற்கும் ஓர் காரணமே.
மூன்று தசாப்த யுத்தம் ஏற்படுத்திய வடுக்களை தாங்கி, கல்வியிலே, பொருளாதாரத்திலே வீழ்ச்சியுற்றிருந்த மண்முனை தென்மேற்கு பிரதேசம் தற்போதுதான் மெதுமெதுவான வளர்ச்சிக்கு அத்திவாரமிடுகின்றது. கல்வி ரீதியிலான வளர்ச்சியில் மண்முனை தென்மேற்கு பிரதேச பெண்களின் கால்பதிப்பு என்பதும் அவசியமானதே.
மண்முனை தென்மேற்கு கோட்டத்தில் ஆறு பாடசாலைகளில், கல்விப் பொதுத்தராதர உயர்தர வகுப்புக்கள் வரை இருக்கின்றன. இப்பாடசாலைகளில் இருந்து பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகி செல்கின்ற மாணவர்களின் எண்ணிக்கை நகர்புறப்பாடசாலைகளில் இருந்து செல்வதைவிட குறைவாகினும், இப்பிரதேசத்தில் முன்னரைவிட தற்போது கூடுதலாக செல்கின்றனர் என்பதே உண்மை.
2016ம் ஆண்டு வெளியாகிய கல்விப்பொதுத்தராதர உயர்தரப்பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், மண்முனை தென்மேற்கு கோட்டத்திற்குட்பட்ட பாடசாலைகளில் கற்ற 22பெண் மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு சென்றிருக்கின்றனர். இதேபோன்று இப்பகுதியைச் சேர்ந்த ஆனால் நகர்புறப்பாடசாலைகளில் கல்வி கற்ற பெண் மாணவர்கள் பலரும் பல்கலைக்கழகத்திற்கு சென்றுள்ளனர். இவ்வாறான மாற்றங்கள் பிரதேசத்திற்கு கிடைத்த வெற்றியென்றால் மிகையாகாது.
அம்பிளாந்துறை கலைமகள் வித்தியாலயத்தில் கல்வி பயின்ற குணசீலன் கோபிகா, அரசடித்தீவு விக்கினேஸ்வரா மகா வித்தியாலயத்தில் கல்வி பயின்ற பவளசிங்கம் கஜானா, அமிர்தலிங்கம் அலோஜிகா, நவரெத்தினம் துசாலா, சிவநேசராசா யுதாயினி, அழகுதுரை இதயரஞ்சனி கொக்கட்டிச்சோலை இராமகிருஸ்ணமிசன் வித்தியாலயத்தில் கல்வி பயின்ற சுகிர்தகரன் மாதங்கி, வசந்தராஜா றோசாந்தி முனைக்காடு விவேகானந்த வித்தியாலயத்தில் கல்வி பயின்ற காராளசிங்கம் ஜெயந்திமாலா, சுதாகரன் மாலினி முதலைக்குடா மகா வித்தியாலயத்தில் கல்வி பயின்ற தட்சணாமூர்த்தி டினேஸ்கா, வன்னியசிங்கம் துலக்சனா, ஜெயராசா சர்சினி, உதயகுமார் யனுஸ்கா, சிவலிங்கம் கவிந்தா, கேசவன் மிதுசனா மகிழடித்தீவு சரஸ்வதி வித்தியாலயத்தில் கல்வி பயின்ற  தம்பிராசா அனுராதா, அரியசிறி நிவேதிகா, கணபதிப்பிள்ளை றேணுகா, சுப்பிரமணியம் பிரசனா, சிவகுமார் குபேதினி, அலையப்போடி தர்சிகா ஆகிய மாணவர்கள், 2016ம் ஆண்டு பெறுபேற்றின் அடிப்படையில் மண்முனை தென்மேற்கு கோட்டப்பாடசாலைகளில் இருந்து, பல்கலைக்கழகத்திற்கு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. இவை பிரதேசத்திற்கு கிடைத்ததான வெற்றியும், மாற்றத்திற்கான

வழியுமேயாகும்.
பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகி சென்றிருக்கின்ற இம்மாணவர்களை சந்திக்கும் வாய்ப்பு கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்தில் வைத்து கிடைக்கப்பெற்றது. இதன்போது, மாணவர்களின் ஆதங்கமாக, எமது பிரதேசத்தினை நாமே ஆழ வேண்டும். இழந்தவைகளை பெறவேண்டும்,நாம் முன்னேறுவதற்கான வழி கல்வி மட்டுமே. பெண்களால் பிரதேசத்தில் மாற்றத்தையேற்படுத்த முடியும் என்பதை சாதித்து காட்;டுவோம். கல்வியில் எழுச்சிபெற்ற சமூகமாக உருவாக்கி காட்டுவோம். என்ற கருத்துக்கள் வெளிப்பட்டு நின்றன. இவ்வாறான ஆதங்கள் மகிழ்ச்சியை அளித்தன.