அன்னை பூபதியின் தியாகம் என்றும் நிலைத்து வாழும்!வே. தவராஜா

0
989

.
தியாக தீபம் அன்னை பூபதி அம்மாவின் 30வது ஆண்டு நினைவு நாள் இன்று தமிழ்த்தேசப் பற்றாளர்களால் அனுஷ்டிக்கப்படுகிறது. இந்திய அமைதிகாக்கும் படையினருக்கும், விடுதலைப்புலிகளுக்குமிடையே மூண்ட போரினால் மீண்டும் தமிழ்மக்கள் நிம்மதியிழந்து சொல்லொண்ணா துன்ப துயரங்களை அனுபவித்ததைப் பொறுக்க முடியாமல் துயரம் நிறைந்த அந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர மட்டு அம்பாறை அன்னையர் முன்னணி பெரும் பிரயத்தனங்களை மேற்கொண்டார்கள்.
அதனடிப்படையில் 04.01.1988 அன்னையர் முன்னணிக்கும் இந்திய அமைதிகாக்கும் படையினருக்குமிடையே திருமலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்திய அமைதிப்படை சார்பாக பிரிகேடியர் சண்டேஸ் அவர்கள் பங்கெடுத்தார்.
அன்னையர் முன்னணியினர் இரண்டு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்தார்கள். மோதலைத் தவிர்க்கும் வகையில் யுத்தம் நிறுத்தம் மேற்கொள்வது, விடுதலைப்புலிகளோடு பேச்சுவார்த்தை நடத்துவது என்ற கோரிக்கைகளை எடுத்துச் சொன்னார்கள். கோரிக்கைகளை பரிசீலிப்பதாக பிரிகேடியர் சண்டேஸ் கூறினார்.
காலம் கடந்ததே தவிர காரியம் எதுவும் நடைபெறவில்லை. மனமுடைந்துபோன அன்னையர் முன்னணியினர் காந்திய வழியில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவது பற்றி மிகவும் தீவிரமாக ஆலோசனை நடத்தினார்கள். அகிம்சைப்போர் மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் தீவிரம் பெற்ற நிலையில் அன்னையர் முன்னணியை மீண்டும் இந்திய அமைதி காக்கும் படைகள் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு கொழும்பிற்கு அழைத்திருந்தார்கள்.
அப்போதைய இந்தியத் தூதுவர் டீக்சித் தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது. அப்போதும் ஏற்கெனவே திருமலையில் முன்வைத்த கோரிக்கைகளை அன்னையர் அமைப்பு முன்வைத்தது. ஆனால் டிக்கித்தவர்கள் விடுதலைப்புலிகள் ஆயுதங்களை ஒப்படைக்கவேண்டும் என்ற நிபந்தனையை முன்வைத்தார். பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
அகிம்சைப் போர் முனைப்புப் பெற்றது. சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பிப்பதென்று முடிவானது. அன்னையர்கள் பலர் போரட்டத்தில் குதிப்பதற்காக முன்வந்தனர். போரிலே ஈடுபட விரும்புபவர்களை குலுக்கல் முறையில் தெரிவு செய்தார்கள்.
அந்த அரியவாய்ப்பை அன்னம்மா டேவிட் எனும் அன்னை பெற்றுக்கொண்டார். குருந்தைமரம் மலர்தூவ, கோயில்மணி வாழ்த்துரைக்க வரலாற்றுப் புகழ்கொண்ட மாமாங்கப் பிள்ளையார் முன்றலிலே வேள்வித்தீ மூட்டப்பட்டது. அன்னம்மா டேவிட் அவர்கள் புன்னகை பூத்த முகத்தோடு அறப்போரை ஆரம்பித்தார். போர் தீவரமடைந்தது. அணியணியாக தமிழ்மக்கள் திரண்டனர். தமிழ் தேசமெங்கும் அகிம்சை போர்மூட்டம் கொண்டது. பொறுக்கமுடியாத இந்திய அமைதிப்படையினர் அப்புனிதப் போரைத் தடுக்க வியூகம் அமைத்தனர்.
அன்னையர் முன்னணி முக்கியஸ்தர்களை மிரட்டடினார்கள். கைது செய்தார்கள். ஆனால் போர் முனைப்புப் பெற்றது. அன்னம்மா டேவிட் அவர்களின் பிள்ளைகளைக் கைது செய்து அவர்களிடமிருந்து தங்களது தாய் சுயவிருப்பத்தின்பேரில் களத்தில் குதிக்கவில்லை, அச்சுறுத்தப்பட்டே சம்மதித்தார் என்று அறிக்கையைப் பெற்று அவரைக் காப்பாற்றப்போகின்றோம் என்ற கபட நோக்கோடு அவரை பலவந்தமாக அழைத்துச் சென்றார்கள்.
காந்திதேசப் படைகளின் அடாவடித்தனமான போக்கையறிந்து கொண்ட அன்னையர் முன்னணி போரைத் தொடர ஆயத்தமானார்கள்.
அப்போது அன்னை கணபதிப்பிள்ளை பூபதியென்ற தாய் மூட்டப்பட்ட அந்த வேள்வித்தீயில் குளிக்க முன்வந்தார். எனவே இந்தியப்படை மேற்கொண்ட நடவடிக்கை மீண்டும் ஏற்படக்கூடாது என்பதற்காக அவர் கைப்படக் கடிதம் எழுதினார். “சுயவிருப்பத்தின் பேரிலேயே போரில் இறங்குகிறேன். என்னுடைய உடல்நிலை மோசமடையும்போது என்பிள்ளைகளோ வேறு எவருமோ என்னைக் காப்பாற்ற எந்த முயற்சியும் மேற்கொள்ளக்கூடாது என்று அறிவித்துப் போரிலே குதித்தார். எந்த இடத்தில் வேள்வித்தீ மூட்டப்பட்டதோ அங்கேயே மக்கள் ஆதரவோடும், ஆண்டவன் ஆசீர்வாதத்தோடும் உந்தியில் தீ மூட்டித் தமிழர் விடிவுக்காய் உயிர்கொடுக்க உறுதிபூண்டு களம் கண்டார்.
போரைத் தொடர்ந்த அன்னையர் முன்னணியின் தளராத உறுதியான உணர்வைக் கண்டு அமைதிப்படை அதிசயித்துப்போனார்கள்.
மாமாங்கப்பிள்ளையார் ஆலய வளாகம் மக்கள் வெள்ளத்தால் மூழ்கிப்போனது. வானதிர, மண்ணதிர எங்கும் போர் முழக்கம் அப்போதும் மிரட்டிப்பார்த்தார்கள். கைதுகளைச் செய்தார்கள். எதற்கும் களமாடும் அன்னை பூபதி கலங்கவில்லை. இருண்டுபோன தமிழர்தேசம் விடிவுபெற அன்னை மூட்டிய தியாகத்தீ மேலே மேலே எழுந்தது. 1988.03.19 அன்று அன்னை மூட்டிய தீ 31வது நாளில் அணைந்தது. உந்தியில் தீ வளர்த்த தமிழ்த்தாய் தன் இன்னுயிர் ஈந்து என்றுமே அணையாத தீபமாக தியாகி அன்னை பூபதி வாழ்ந்துகொண்டிருக்கிறார். அவரது இறுதி யாத்திரையைக்கூட காந்திய தேசப் படைகள் குழப்ப முயன்றார்கள். பலவிதமான அச்சுறுத்தல்களை மீறியும் ஆயிரக்கணக்கான மக்கள் கண்ணீர்மல்க அன்னை தமிழ் மண்ணில் வித்தானார்.
நீலக்கடல் ஆர்ப்பரித்து நிற்கும் நாவலடி மண்ணில் அனைவரையும் கவரும் வண்ணம் அன்னைக்கு நினைவாலயம் அமைத்தார்கள். ஆனால் அது சிதைக்கப்பட்டது. சிதைந்துபோன நினைவாலயத்திலும் அன்னையை அஞ்சலிக்க, துதிக்க மக்கள் மறக்கவில்லை. ஆனால் அந்த நினைவாலயத்தை புனர்நிர்மாணம் செய்து புதுப்பிக்க இன்னமும் தமிழ்த்தேசியம் பேசும் தலைவர்கள் முன்வரவில்லை.
எனவே அன்னையின் நினைவு நாளில் நாம் அனைவரும் அன்னையை நினைப்போம், அஞ்சலிப்போம், அந்தத் தியாகத் தாயைத் துதிப்போம்.

19.04.2018 வே. தவராஜா
0770070617 மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர்