இலங்கைக்கான பிரித்தானியா தூதரக அதிகாரிகளுக்கும் ஜனநாயக போராளிகள் கட்சியினருக்கும் இடையிலான சந்திப்பு

0
486

இலங்கைக்கான பிரித்தானியா தூதரக அதிகாரிகளுக்கும் ஜனநாயக போராளிகள் கட்சியினருக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பொன்று இன்று 17 ஆம் திகதி திருகோணமலையில் இடம்பெற்றது.

போர் ஓய்வுக்கு பின்னர் தற்போதைய விடுதலைப்புலிகளதும் அதன் போராளிகளது அரசியல் பொருளாதார செயற்பாடுகள் தொடர்பிலும். தாயக அரசியல் பரப்பில் போராளிகளது பங்குபற்றுதலும் அதற்கான ஏற்பாடுகள் தொடர்பில் விரிவாக இச்சந்திப்பின் போது  ஆராயப்பட்டுள்ளதுடன் போரில் நேரடியாக பங்குபற்றியவர்கள் புனர்வாழ்வின் அடிப்படையில் விடுதலைசெய்யப்பட முடியுமானால் அதே போன்று போர்சூழலில் பலதரப்பட்ட காரணங்களுக்காகவும் காரணமின்றியும் பலநாட்கள் சிறையில் வாடும் அரசியல்கைதிகள் எவ்விதமானதொரு பொறிமுறையிலாவது உடனடிவிடுதலைக்கு அழுத்தம்கொடுக்க வேண்டும் என ஜனநாயக போராளிகள் கட்சியின் சார்பில் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது.

தொடர்ச்சியாக இனங்களுக்கிடையில் நல்லிணக்கம் பேணப்பட வேண்டுமாயின் அதீத இராணுவ பிரசன்னம் அகற்றப்படுவதோடு காணாமல்போனோர் தொடர்பில் அக்கறையுடனும் பொறுப்புடனும் தீர்வுகளை பெற்றுத்தரவல்ல ஒரு பொறிமுறைக்கட்டமைப்பு உருவாக்கப்படவேண்டும்.

அதனோடு தமிழர்களுக்கான ஓர் நியாயப்பாடான தீர்வு இலங்கையில் எட்டப்படும் வரை தமிழர்கள் பிரித்தானியாவில் இருந்து திருப்பி அனுப்பப்படுவது நிறுத்தப்பட வேண்டுமெனவும் கோரப்பட்டது.

இலங்கையில் மிகமோசமான யுத்தகாலப்பகுதியில் புலம்பெயர்ந்த தமிழ்மக்களை அன்புடன் அரவணைத்து பாதுகாத்த பிரித்தானிய அரசுக்கும் அதன் மக்களுக்கும் ஜனநாயக போராளிகள் கட்சியின் சார்பில் நன்றியும் வாழ்த்துக்களும் தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.