கூத்துப்பனுவல்களை புதிதாக உருவாக்குதலும் அதனை அச்சிட்டு வெளியிடுதல் என்பதும் மிக அருந்தலானவை.

0
980

கூத்துப்பனுவல்களை புதிதாக உருவாக்குதலும் அதனை அச்சிட்டு வெளியிடுதலும் என்பது மிக அருந்தலாகவே நடைபெற்றிருக்கும் சூழலில் காலத்தின் தேவையுணர்ந்து கேதீஸ்வரன் அவர்களால் உருவாக்கப்பட்டிருக்கும் இந்தப்பிரதிகள் உருவாக்கற் தளத்திலும், பேசு பொருளிலும், அமைப்பு முறையிலும் நோக்குதற்குரியதாகின்றது. என கிழக்கு பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் க.மோகனதாசன் குறிப்பிட்டார்.
கூத்தியல் நூல் வெளியீட்டு விழாவின் அறிமுக உரையிலே இதனைத் தெரிவித்தார்.
அறிமுக உரையில் மேலும் கூறுகையில்,
கூத்துப் பனுவல் என்பது ஒரு ஆசிரியரின் இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழ் சார்ந்த அறிவின் அடிப்படையில் உருவாவது. இவை மட்டுமின்றி நிகழ்த்துதல் சார்ந்த காலம், இடம், சூழல், பார்வையாளர் என்ற பன்முக அரங்கச் சூழல்களையும் நிறைவு செய்யும் நிலையில் கூத்துப் பிரதியை உருவாக்குவது கூத்து ஆசிரியரின் ஆளுமையைப் பிரதிபலிக்கக் கூடியதாகிவிடுகின்றது. கூத்தின் இலக்கியமாக இருப்பது கூத்துப் பனுவலே. கூத்தின் செயற்பாட்டுத்தளத்தில் கூத்துப் பனுவலானது முக்கியமானதொரு வகிபங்கினை எடுத்துக் கொள்கின்றது.
கூத்துப்பனுவல்களை புதிதாக உருவாக்குதலும் அதனை அச்சிட்டு வெளியிடுதலும் என்பது மிக அருந்தலாகவே நடைபெற்றிருக்கும் சூழலில் காலத்தின் தேவையுணர்ந்து கேதீஸ்வரன் அவர்களால் உருவாக்கப்பட்டிருக்கும் இந்தப்பிரதிகள் உருவாக்கற் தளத்திலும், பேசு பொருளிலும், அமைப்பு முறையிலும் நோக்குதற்குரியதாகின்றது. இளம் வயதில் இதனைச்செய்திருப்பதென்பது இன்னும் இப்பிரதிகளின்பால் எமக்கு ஈர்ப்பினை அதிகரிக்கச் செய்கின்றது.
நாட்டுக் கூத்துக்களுக்கெனத் தெரியப்பட்ட கதைகள் பெரும்பாலும் மக்களிடையே பிரசித்தி பெற்று அவர்களால் நன்கு அறியப்பட்ட புராண இதிகாசக் கதைகளாகவே இருப்பதுண்டு. இவற்றுடன் வரலாற்றுக் கதைகளும் கூத்துப் பனுவல்களாக அமைந்திருப்பதனைக் காணலாம். இந்நிலையில், புதிதாக ஒரு கதையைத் தேர்ந்தெடுத்து, அக்கதையின் கரு சிதையாமல், அக்கதைக்கு உரிய பாத்திரங்கள், பாடல்களை தரு, விருத்தம், கொச்சகம், கந்தார்த்தம் என நிகழ்த்துதலுக்கு ஏற்ற பாடல் வடிவிலும் ராக தாள முறையோடும் கொடுப்பதற்குப் பல்துறை சார்ந்த அறிவு என்பது இன்றியமையாததாகின்றது. இதனை இவர் இலகுவாகச்செய்திருக்கிறார். அதற்கு அவரது சூழலும் அனுபவமும் கைகொடுத்திருக்கின்றது.
இது பற்றி அவர், “எனது கடமையின் ஒரு துளியாக எமது முன்னோர்கள் கையளித்த பல கூத்துப்பிரதிகளைப் பின்பற்றியவனாக அவற்றின் மெட்டுக்கள் வழுவாது முறைமை பிழையாத வகையில் சில முக்கிய காரணத்தினடிப்படையில் தகுந்த சந்தர்ப்பத்தில் சில கூத்துக்களை எழுத முற்பட்டேன்” என தெரிவிப்பதிலிருந்து கூத்துப்பனுவல்களின் தன்மையுணர்ந்து மிக அவதானமாகவே இதனைப்படைத்திருப்பது புலனாகின்றது. நந்தியின் மகிமை, மனிசி எங்கே?, உழவர் பெருமை, மதுவின் கொடுமை எனும் நான்கு கூத்துப்பிரதிகளை இங்கே அவர் எழுதி ஆற்றுகை செய்திருப்பதோடு அதனை இப்போது ‘கூத்தியல்’ எனப்பெயரிட்டு தொகுப்பாகவும் வெளியிடுகின்றார். ஒவ்வொரு கதையும் எவ்வாறு உருவானது என்பது பற்றிய பின்னணிகளையும் தந்திருக்கிறார். நந்தியின் மகிமை எனும் பிரதியில் வருகின்ற ஒரு விருத்தம்,

“பட்டுவண்ணச்சேலைகட்டி பளிச்சிடும் பதக்கம் பூண்டு
நெடிதோர் கூந்தல் தன்னை நேராக வாந்து கட்டி
தம்பியாம் உலக நாதன் தன்னையே துணையாய்க்கொண்டு
உலகெலாம் ஆட்சி செய்ய உலக நாச்சி வருகின்றாளே” என அமைகின்றது. இவர் சந்தத்திறாக வார்த்தைகளுக்கு எங்கும் கையேந்தி நிற்கவில்லை. அவரது கூத்து சார் அனுபவம் இயல்பாகவே வார்த்தைகளை இட்டு நிரப்புகிறது. இதனை எல்லாப்பாடல்களிலும் காண முடிகின்றது.
ஈழத்து தமிழ்க்கூத்து மரபானது பழமையின் எஞ்சியுள்ள சின்னமாய் நாட்டார்கலை ஆர்வலர்கள் கருணையுடன் புத்துயிரளிக்கவேண்டிய ஒன்றாக இன்று பார்க்கப்படுகின்றது. அதன் பார்வையாளர்கள் ஒரு சிறு கூட்டமேயான கிராமத்து மக்களாகவே இருப்பினும், அது ஒரு வீரியமும் வாழ்வும் உடைய கொண்டாட்டமான வெளிப்பாடாகும். சம காலத்தோடு தொடர்புறாத அல்லது சம காலத்தோடு இணைவிக்கப்படாத அல்லது சம காலத் தன்மையோடு பயணிக்காத எந்த ஒரு நிகழ்த்துகலை வடிவமும், எல்லாக் காலத்திற்கும் அல்லது எல்லாக் காலத்திலும் நீடிக்கிற கலை வடிவமாக அல்லாமல், அந்தந்தக் காலகட்டத்தோடு மட்டும் தேங்கிப் போகிற நிகழ்த்துகலை வடிவமாக ஆகிப்போயிருக்கின்றது. இதனையுணர்ந்து இவர் சமகாலப் பிரச்சினைகளை தமது பாடு பொருள்களாகக்கொண்டிருக்கிறார். இருந்தாலும் அவர் மரபின் கைப்பிடித்தே நடந்திருக்கின்றார்.
நிகழ்த்துகலை வடிவங்கள் நிகழ்த்துகலை வரலாற்றில் சடங்கியல் சார்ந்த கேளிக்கை சார்ந்த சமூகப் பயன்பாடு சார்ந்த செயன்மைகள் வாயிலாக ஏதேனும் ஒரு தேவையின் அடிப்படையில் பன்னெடுங்காலமாகத் தம் கலை வடிவ இருப்பை அடையாளப்படுத்தும் வகையில் முகங்காட்டிக்கொண்டிதானிருக்கின்றன. எந்த ஒரு படைப்பாளியும் மரபு குறித்த பிரக்ஞையிலிருந்து விடுபட முடியாது. படைப்பாளி கேதீசும் காலத்தின் தேவையுணர்ந்து மரபினை மறுபதிப்புச்செய்ய முனைந்திருக்கிறார்.
கால ஓட்டத்தில் மாறிக்கொண்டிருக்கும் சுழற்சியில், தற்கால உலக மயமாக்கல் தகவல் தொழிநுட்ப பின்னணியில், தம் அடையாளங்களைக் காத்துக்கொள்ளும் போராட்டத்தில், இந்தப் பருந்துகளின் கொத்தல்களிலிருந்து தம் குஞ்சுகளைக் காக்கப் போராடும் கோழியின் மூர்க்கத்தனத்தோடு சிலர் பண்பாட்டையும் பாரம்பரியக்கலை வடிவங்களையும் காப்பாற்றப் போராடி வந்திருக்கின்றனர். அது பல்வேறு தளங்களிலும் இடம்பெற்றிருக்கிறது. இந்தப்pன்னணியில் பாரம்பரியக்கலையின் முக்கிய அடையாளமாகத் திகழ்கின்ற கூத்தின் இலக்கிய பண்பாட்டு மரபின் நிலைபேறிற்கு பதிவுகள் முக்கியமாகின்றன. இதனை கேதீஸ் அவர்கள் உணர்வுத்தளதில் நின்றும் அறிவுத்தளத்தில் நின்றும் மிகச்சிறப்பாகச்செய்திருக்கிறார்.
ஒரு செவ்வியல் இலக்கியத்தை உருவாக்குவதை விடவும் மிகுதியான நுட்பங்களை மேற்கொண்டு கூத்துக்களுக்கான கூத்துப்பனுவல்கள் உருவாக்கப்படுகின்றன. இருந்தாலும் கூத்துக் கலைஞர்களாலும் பார்வையாளர்களாலும் கொண்டாடப்பட்ட அளவிற்குத் தமிழ்ச் செவ்விலக்கியங்களை கொண்டாடும் அறிவாளிகளால் இந்தப்பனுவல்கள் கண்டுகொள்ளப் படவில்லை என்பதும் நாம் வரலாற்றிலே கண்ட கசப்பான உண்மையாகும். எது எவ்வாறிருப்பினும் அவை இந்த இடையூறுகளையெல்லாம் கடந்து என்றும் நின்று நிலவுமென்பதற்கு கேதீஸ் போன்றவர்களது முயற்சிகள் எமக்கு நம்பிக்கையளிப்தாகவே அமைகின்றன. கேதீசுக்கும் அவருக்குப்பக்கபலமாய் நின்று இதனை முன்னெடுப்பவர்களுக்கும் எனது மனம் நிறைந்த மகிழ்ச்சியும் வாழ்த்துக்களும்; என்றார்.