சுவிஸ்லாந்து நாட்டு ஓட்டப்போட்டிக்கு மட்டக்களப்பு மாணவன் தெரிவு.

0
2873

கிழக்குப் பல்கலைக்கழக கலை கலாசார பீடத்தின் 3ம் வருட மாணவனாகிய கோவிந்தராசா கோகிலநாதன் எதிர்வரும் 6 ஆம், 7 ஆம் திகதி ஏப்பிரல் மாதம் சுவிஸ்லாந்தில் சென்ட் கலன் நகரில் நடைபெறவுள்ள சர்வதேச பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான ஓட்டப் போட்டியில் ( Cross Country Championship)   பங்கு கொள்வதற்காக சுவிஸ்லாந்து பயணமானார்.

இவர் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த நெல்லிக்காடு காச்சிரங்குடா கிராமத்தில் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் ஆவார். இலங்கைப் பல்கலைக்கழகத்தின் சார்பில் நான்கு வீரர்கள் பங்குபற்றும் இப்போட்டியில் ஸ்ரீஜெயவர்த்தனபுர, யாழ்ப்பாணம், களனி ஆகிய பல்கலைக் கழகங்களில் இருந்து தலா ஒவ்வொரு மாணவர்களுடன் இம்மாணவர் பங்குபற்றவுள்ளார்.

இவர் கடந்த காலங்களில் இலங்கைப் பல்கலைக் கழகங்களுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டிகளில் வெள்ளி, வெண்கலம் பதக்கங்களைப் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்ததக்கது.

இப் போட்டிக்கான தெரிவுப் போட்டி அனைத்துப் பல்கலைக்கழகங்களின் விளையாட்டு சம்மேளனத்தின் பங்குபற்றலுடன் கடந்த மார்ச் மாதம் 4ஆம் திகதி பேராதனைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. இதில் கடந்த காலங்களில் பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகளில் தமது திறமைகளைக் காட்டிய ஏறத்தாழ 40 க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்குபற்றினர். இவர்களில் இருந்து இம்மாணவன் தெரிவு செய்யப்பட்டுள்ளான்.