தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டத்தைக் காட்டிக் கொடுத்த ஒருவராக அலி சாகிர் மௌலானா அடையாளப்படுத்தப்பட்டுள்ளார்.

0
793

ஏ.எச்.சித்தீக் காரியப்பர்-
ஏறாவூர் நகர சபைக்கு தவிசாளர் ஒருவரை நியமிப்பதிலும் ஆகப் பெரிய சிக்கல் நிலைமைதோன்றியுள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இரண்டாகப் பிளவடைந்ததாலேயே இந்த நிலைமை உருவாகி உள்ளது.

இந்த விடயத்தில் கட்சியின் தலைமை சாணக்கியமாகச் செயற்பட்டு இருவரையும் ஐக்கியப்படுத்தி ஒரே கட்சியில் களத்தில் இறக்கியிருந்தால் இந்தப் பிரச்சினை இவ்வாறு எழுந்திருக்காது.

யானை தனது தலையிலேயே மண்ணை வாரி போட்ட கதையாக இந்த விவகாரம் இன்று மாறியுள்ளது. தனித்து ஆட்சியமைப்பதில் தொங்கு நிலைமை. மற்றவர்களைத் தங்கி நிற்கும் கட்டாய நிலைமை இன்று ஏறாவூர் அரசியலில் எழுந்துள்ளது.

‘ஒரு சமூகம் தன்னுடைய தலையெழுத்தை மாற்றிக் கொள்ள முயற்சி செய்யாத வரை அந்தச் சமூகத்தின் தலையெழுத்தை அல்லாஹ் மாற்றமாட்டான்’ என்று அல்குர் ஆனை ஆதாரம் காட்டி மாமனிதர் மர்ஹும் அஷ்ரஃப் அவர்கள் அடிக்கடி கூறும் அந்த ஆழ்ந்த அர்த்தங்கள் கொண்ட வார்த்தைகளின் உண்மைகள் இன்னும் புரியப்படாமையே இவ்வாறான பிரச்சினைகள் எழுவதற்கு காரணமாகின்றன.

ஏறாவூரில் தனித்துவமாக ஆட்சியமைக்க வேண்டிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தன்னால் தனது பலத்தை தானாகவே இழந்து மற்றவர்களின் தயவை நாடவேண்டிய கட்டாய நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது.
இதற்கான பொறுப்பை கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் ஹாபிஸ் நஸீரிடமோ அல்லது மட்டு. மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலிசாகிர் மௌலானாவிடமோ தனியே ஒப்படைத்து விட முடியாது. பதில் சொல்ல வேண்டியது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமைக்குரியது.
ஏறாவூர் நகர சபைத் தேர்தல் முடிவுகளின்படி

1 முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பு
(அலிசாஹிர் மௌலானா) -5
2. ஐக்கிய தேசியக் கட்சி (ஹாபிஸ் நஸீர்) -04
3. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி -03
4. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு -02
5. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் -01
6.சுயேட்சை –(ஒட்டகம் -01)
7 பஷீர் சேகு தாவூதின் ஐக்கிய
சமாதானக் கூட்டமைப்பு -1

இந்த அடிப்படையில் முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக் கட்சி என இரு பிரிவுகளாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரியாது ஒரே கட்சியின் கீழ் போட்டியிட்டிருந்தால் இதனை விட அதிக ஆசனங்கள் கிடைத்திருக்கலாம் அல்லது இப்போது ஹாபீஸ் –அலிசாகிர் கூடடுக்குக் கிடைத்த மொத்த ஒன்பது ஆசனங்களுடனே தனித்துவமாக ஆட்சியமைக்கவும் முடிந்திருக்கலாம். ஆனால், பிரிந்து நின்றதால் ஏற்பட்ட பின்னடைவின் அறுவடையை இன்று பெற்றுத்தான் ஆக வேண்டியுள்ளது.

இப்படியான நிலையில்தான் பலருடன் பேசி பல விட்டுக் கொடுப்புகளைச் செய்து ஹாபிஸ் நஸீரோ அல்லது அலி சாகிர் மௌலானாவோ ஆட்சியமைக்க வேண்டியுள்ளதுடன் அவ்வாறு உருவாக்கப்படும் ஏறாவூர் நகர சபையைக் கடன்பட்டோன் நெஞ்சம் கலங்குவது போல் என்பதற்கு ஒப்பாக தயக்கத்துடன் நடத்தும் நிலைமை தோன்றலாம்.

சிறியதொரு பிரதேசத்தில் 7 கட்சிகளுக்கு (சுயேட்சை உள்ளடங்கலாக) உறுப்பினர்கள் உதிரியாக கிடைத்துள்ளதன் காரணமாகவே மற்றைய உள்ளூராட்சி மன்றங்களை விட ஏறாவூர் நகர சபை விவகாரம் வேறாகப் பார்க்கப்பட வேண்டிய ஒன்று.

இந்த நிலையில், தனிப்பட்ட செல்வாக்கு மற்றும் ஏனைய பலத்துடன் கிழக்கு மாகாண முன்னாள் முதல்வர் ஹாபிஸ் நஸீர் ஆட்சியமைக்க மற்றவர்களின் துணையைத் தேடுவாரானால் பெரும்பாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இரண்டு உறுப்பினர்கள் அவருக்கு தயக்கமின்றி ஆதரவு வழங்கலாம்.

ஏனெனில், கிழக்கு மாகாண சபையின் இறுதிக் காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணக்கப்பாட்டு அரசியல் செய்தவர் அவர், ஐக்கியத்துடன் அவர்களை அரவணைத்துச் சென்றவர் என்ற நற்சான்றிதழ்கள் அவருக்கு உள்ளன. மேலும் சம்பந்தன் ஐயாவுடன் நிறையவே நெருக்கத்தைக் கொண்டவர். எனவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு பெரும்பாலும் ஹாபிஸ் நஸீருக்கே கிடைக்கும் வாய்ப்பு அதிகம்.

தமிழ்-முஸ்லிம் மக்களுக்கிடையிலான மனக் காயங்களை ஆற்றுவதிலும் தனது பங்களிப்பை வழங்கியவர் ஹாபிஸ் நஸீர் என கிழக்கு மாகாண சபையின் முன்னாள் தமிழ் உறுப்பினர்கள் சிலர் கூறியதனை நான் ஊடகங்களில் பார்த்ததுண்டு, படித்ததுண்டு.

இவ்வாறான நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் இருவரின் ஆதரவுடன் மேலும் மூவர் ஹாபிஸ் நஸீருக்கு ஆதரவு வழங்கினால் ஓரளவு ஸ்திரமான ஆட்சியை முன்னெடுக்கலாம் என நான் நம்புகிறேன்.

இதேவேளை, மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலிசாகிர் மௌலானா அவர்கள் தனது தனிப்பட்ட செல்வாக்கு மற்றும் ஏனைய பலத்துடன் ஆட்சியை அமைக்க முயற்சித்தால் அது பல தரப்புடன் பேசப்பட வேண்டிய விடயமாக அமையும் என எதிர்பார்க்கலாம்.

அம்பாறை மாவட்டத்தின் உள்ளூராட்சி சபைகள் சிலவற்றில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இணக்கம் கண்டு ஆட்சியமைப்பது வேறு விடயம். ஆனால், அதே நிலைப்பாடே மட்டகளப்பு மாவட்டத்திலும் தொடரும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை.
ஏனெனில், தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டத்தைக் காட்டிக் கொடுத்த முஸ்லிம் என்று உள்ளூர் தமிழ் மக்கள் மத்தியிலும் சர்வதேசத்திலும் சாபத்தைப் பெற்ற ஒருவராக அலி சாகிர் மௌலானா அடையாளப்படுத்தப்பட்டுள்ளார்.

முப்பது வருட கால தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தை கருணா என்ற நபர் மூலம் காட்டிக் கொடுத்து நசுக்கி அவர்களது போராட்டத்தைக் கொச்சைப்படுத்தி முள்ளிவாய்க்கால் வரை கொண்டு சென்றவர் உங்களது அலிசாஹிர் மெளலானாதான் என என்னிடமே பலர் பல தமிழ் சகோதரர்கள் கூற நானும் தலைகுனிந்தவனாக நடந்து சென்றதும் உண்டு.

முள்ளிவாக்காலில் அப்பாவி மக்களின் கொலைகளுக்கும் அழிவுகளுக்கு கருணாவே காரணம். அதேவேளை, அந்தக் கருணா அம்மான் என்ற நபர், தமிழ் மக்களுக்கான போராட்டத்திலிருந்து விலக முடிவெடுத்த போது அவருக்கு அலி சாஹிர் மௌலானா ஆதரவு கொடுத்ததாலேயே எங்களுக்கு இந்த நிலைமை என்று மிக ஆத்திரமும் வேதனையும் கொண்ட மன நிலையுடன் பெரும்பாலான தமிழ் மக்கள் வாழக் கூடிய மட்டக்களப்பு மாவட்டத்தின் ஒரு பிரதேசமான ஏறாவூரில் அலிசாஹிர் மௌலானா ஆட்சியமைக்க தமிழ்த் தரப்பு உதவும் என்ற விடயத்தில் நான் நம்பிக்கை கொள்ளவில்லை.

தமிழ் மக்களின் மனவடுக்களை ஆற்றுவது என்பது வெறும் அரசியல் காய் நகர்த்தல் என்ற மருந்தின் மூலமாக நடைபெற முடியாத என்று நம்புவன் நான்.
எது எப்படியிருப்பினும், இந்த விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முஸ்லிம் காங்கிரஸுக்கு ஆதரவளிக்க தீர்மானித்தாலும் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் மக்களின் பெரும்பாலானோரின் முகச் சுழிப்புக்கு உள்ளாக நேரிடும்.

அனைத்தையும் ஒரு பக்கம் வைத்து விட்டு, முஸ்லிம் காங்கிரஸுக்கு ஆதரவு வழங்குவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்தால் ஒரே கட்சியைச் சேர்ந்த இருவரான ஹாபிஸ் நஸீர், அலி சாகிர் மௌலானா இவர்களில் யார் பக்கம் கூட்டமைப்பின் ஆதரவை வழங்கச் செய்வது என்பதில் முஸ்லிம் காங்கிரஸின் தலைமை இருதலைக் கொள்ளி எறும்பின் நிலைக்கு உள்ளாக்கப்படும்.

ஏனெனில் ஹாபிஸ் நஸீரின் உதவிகள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு தேவை என்பது வெளிப்படையான உண்மை.

இது இவ்வாறிருக்க, அலி சாஹிர் மௌலானா போட்டியிட்ட முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பு என்ற கட்சி முஸ்லிம் காங்கிரஸுடன் தொடர்புடைய ஒரு கட்சியல்ல. இந்தக் கட்சி ஹாபிஸ் நஸீரின் அபிமானிகளையும் உள்ளடக்கிய ஒரு கட்சியாகும். எனவே, அலி சாகிர் மௌலானா அந்தக் கட்சியில் போட்டியிட்டாலும் அவரால் கூட அந்தக் கட்சி தொடர்பில் அதிகாரம் செலுத்த முடியாத நிலை. வாடகை வாகனத்தை பெற்றுக் கொண்டு சொந்த வாகனம் என்ற நினைப்பில் அதனைத் திருத்தி அமைக்க முடியாதுதானே? எனவே சிலவேளைகளில் அவரது கட்சியினரே மாற்று முடிவுகளை எடுக்கவும் கூடும். ஏனெனில் ஹாபிஸின் சகோதரரே அந்தக் கட்சியின் தலைவராவார். ஆடாவிட்டாலும் சதை ஆடும் என்பதனையும் இங்கு மறந்து விடக் கூடாது.

மேலும் ஏறாவூரில் 3 ஆசனங்களைப் பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவு அலிசாஹிர் மௌலானாவுக்கு கிடைக்கக் கூடிய வெளித் தோற்றப்பபாடு இதுவரை காணப்பட்டாலும் இப்போது அந்தக் கட்சியும் இரண்டாகப் பிரிவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படும் நிலையில் இதிலும் அலி சாகிர் மௌலானா பெரும்பாலும் பின்னடைவைச் சந்திக்கலாம்.
எனவே, அலி சாகிர் மௌலானா அவர்கள் தன்வசம் 5 ஆசனங்கள். வைத்துள்ள நிலையில் அது அவருக்கு சாதகமாகக் காணப்பட்டாலும் நான் கூறிய காரணங்கள் அவருக்குப் பாதகமாக அமையக் கூடிய வாய்ப்புகளை உருவாக்கவும் கூடும்.

எது எப்படியிருப்பினும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 3 ஆசனங்கள்,தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் ஓர் ஆசனம் பஷீர் சேகு தாவூதின் ஓர் ஆசனம், சுயேட்சையின் (ரஷீத்) ஒரு ஆசனம் ஆகியனவே இன்று ஏறாவூர் நகர சபையின் ஆட்சியைத் தீர்மானிக்கும் சக்திகளாகத் திகழப் போகின்றன. இரண்டு நாட்கள் தானே பொறுத்திருந்து பார்ப்போம்.

– ஏ.எச்.சித்தீக் காரியப்பர்