ஆரோக்கியம் தரும்  யோகக்கலையும் அதன் பஞ்சபூத முத்திரைகளும்.

0
2057

உலகில் அனைத்து செல்வங்களிலும் ஆரோக்கியமான உடலமைப்பே முதற்செல்வமாகும், இதனைப் பற்றி மனிதன் சிந்திக்காது தொலைந்த தன் ஆரோக்கியத்தை பணச்செலவுடனும் பாரதூரமான பக்கவிழைவுகளை தரக்கூடிய நவீன விஞ்ஞானத்தின் பால் தெடுகின்றனர். மாறாக இவ்வாரோக்கியம் எம்முள்ளேயே புதைந்துகிடக்கின்றது, இதனை  நிவர்த்தி செய்ய நம் முன்னோர்கள் கடைப்பிடித்த பாரிய வழிமுறையே யோகக்கலையாகும், இதனையே நம் சித்தர் பெருமக்கள் வகுத்து தந்துள்ளனர், யோகக்கலையின் ஒரு பிரிவே இம் முத்திரை சிகிச்சை முறையாகும். நிலம் நீர் நெருப்பு காற்று ஆகாயம் என்னும் பஞ்ச பூதங்களை உள்ளடக்கியது இந்த பிரபஞ்சம் , இதில் ஓர் அங்கமாக விளங்கும் நமது உடலும் இந்தப் பஞ்ச பூதங்களால் ஆனவையே. இந்த ஐந்து மூலங்களையும் உடலில் இருந்து பிரிக்க முடியாது காரணம் மனிதரின் சிந்தனைக்கும், செயற்பாட்டிற்கும் இந்த ஐந்து மூலகங்களே காரணமாக உள்ளன. இந்த ஐந்து வகை மூலங்கள் வேறுவிதமாக நிலம், நீர், நெருப்பு, மரம், உலோகங்கள் என சீனப் பாரம்பரிய மருத்துவத்தில் கூறப்படுகிறது.  இந்த ஐந்து வகை மூலங்களும் ஒன்றுக்கொன்று பூரண தொடர்புடையதாக காணப்படுகிறது. இவை எமது உடலின் இயக்கத்திற்கு இன்றியமையாதது , எமது உடலில் பஞ்சபூத சக்தியில் ஏற்படும் சீர் குலைவே உடலில் மற்றும் மனதில் ஏற்படும் மாற்றங்களுக்கும், நோய்களுக்கும் காரணமாகும். இந்த ஐந்து மூலங்களும் உடலில் சமநிலையில் இருந்தால் நமது உடல் மற்றும் மன ஆரோக்கியம் தொடர்ந்து சிறப்பாக அமையும் ஆயுளும் நீடிக்கும். முத்திரைகளின் முக்கியத்துவத்தை திருமந்திரத்தின் பாடல்கள் சிலவற்றில் காணமுடியும், கீழ் காணப்படும் பாடல்களில் சுரபி முத்திரை, யோனி முத்திரைகளின் செய்முறை, பலன்கள் பற்றிக் கூறப்பட்டுள்ளது.

“நண்ணும் சிறுவிரல் நாணாக மூன்றுக்கும்

பின்னிய மார்பிடைப் பேராமல் ஒத்திடும்

சென்னியில் மூன்றுக்கும் சேரவே நின்றிடும்

உன்னி உணர்ந்திடும் ஓவியம் தானே

திருமந்திரம் – (750)

வருத்த மிரண்டும் சிறுவிரல் மாறிப்

பொருத்தி அணிவிரல் கட்டிப் பிடித்து

நெறித்து ஒன்றவைத்து நெடிது நடுவே

பெருத்தவிரல் இரண்டுள் புக்குப் பேசே

திருமந்திரம்  (1094 )

 

 

 

 

 

 

 

 

முத்திரை என்பதை பூட்டு முறை, கை கூப்புதல், புனிதமன தொளுகை என்றெல்லாம் கூறலாம். இம் முத்திரைகளை பயன்படுத்தி எம்மால் உடலின் பஞ்சபூத சக்தியை ஒழுங்கு படுத்திக்கொள்ள  முடிகிறது இவ்வகை சித்தர்களின் அரிய விஞ்ஞானமே முத்திரை சிகிச்சை முறையாகும். இம் முத்திரை விஞ்ஞானத்தை மருந்தின்றிய மருத்துவம் என்றும் கூறுவர் அதாவது கைகளை மாத்திரம் பயன்படுத்தி நமக்கு நாமே சிகிச்சை அளிக்கக்கூடிய ஒரு ஆச்சரியம் மிக்க சிகிச்சை முறையாகும். இம் முத்திரைகளை பயன்படுத்தி நோய்வாய்ப்பட்ட ஒருவர் தன்னை குணப்படுத்திக் கொள்ளவும், நோயுறாத நபர் தனது உடலை நோய் வராது காத்துக்கொள்ளவும் முடியும். முத்திரை எனப்படுவது எமது கைகளை ஒரு குறித்த நிலையில் பிடித்து எமது உடல் தொழிற்பாட்டையும், மூன்று வகை நாடிகளையும், உடலின் பஞ்ச பூத சக்தியையும், வாசி ஓட்டத்தையும் மாற்றியமைக்கக்கூடிய ஒரு பயிற்சி முறை எனலாம். எமது ஐந்து விரல்களையும் நாம் பஞ்ச பூதங்களுடனும், மூன்று வகை நாடிகளுடனும், ஐம்புலங்களுடனும், ஏழு வகை சக்கரங்களுடனும் ஒப்பிட முடியும். விரல்களுக்கும் பஞ்ச பூதங்களுக்குமான தொடர்பு ( பெருவிரல் – நெருப்பு, சுட்டு விரல் – காற்று, நடுவிரல் – ஆகாயம், மோதிரவிரல் – நிலம், சுண்டுவிரல் – நீர் ) .விரல்களுக்கும் மூன்று வகை நாடிகளுக்குமான தொடர்பு  (பெருவிரல் – வாதநாடி, சுட்டு விரல் , நடுவிரல் – பித்தநாடி, மோதிரவிரல் ,சுண்டுவிரல் – சிலேற்பனநாடி /கபம்), விரல்களுக்கும் ஐம்புலங்களுக்குமான தொடர்பு ( பெருவிரல் – கண் , சுட்டு விரல் – மூக்கு , நடுவிரல் – காது , மோதிரவிரல் – தோல் , சுண்டுவிரல் – நாக்கு ), விரல்களுக்கும் ஏழு வகை சக்கரங்களுக்குமான – தொடர்பு  ( பெருவிரல் – மணிபூரகம், சுட்டு விரல் – அநாகதம், நடுவிரல் – விசுப்தி, மோதிரவிரல் – மூலாதாரம், சுண்டுவிரல் – சுவாதிஸ்ரானம் ) போன்றவற்றை குறிப்பிடலாம் ஆனால் இங்கு  ஆக்ஞை , துரியம் போன்ற சக்கரங்களை விரல்களைக் கொண்டு ஒப்பிட முடியாது.

 

முத்திரை முறையானது யேகக்கலை, பரதக்கலை, பாரம்பரிய தற்காப்புக்கலைகள், சமய ஆகம கிரியை முறைகள், விக்கிரகங்கள் மற்றும் சிற்பக்கலை, வர்மக்கலை போன்றவற்றிலும் பரவலகப் பயன் படுத்தப்படுகின்றன. முத்திரையின் பயன்பாடானது இந்தியா , திபேத் , சீனா , ஜப்பான் , இந்தோனேசியா  மற்றும் இன்னும் சிலநாடுகளிலும் காணப்ப்படுகின்றன, அத்தோடு எகிப்த்திய வரலாற்றிலும் இம்முத்திரைகள் இடம்பெற்றமைகான சான்றுகள் உள்ளன, எடுத்துக்காட்டாக எகிப்திய பிறமிட் கல்லறை சுவர்கள், சிற்பங்கள்,எகிப்த்திய ஆட்சியாளர்களின் உருவங்கள், ஏனைய கலை வேலைப்பாடுகள் போன்றவற்றை சுட்டிக்காட்டலாம்.

 

முத்திரைகளை ஆண், பெண் பால் வேறுபாடு இன்றி, வயது வேறுபாடு இன்றி எவரும் இம்முத்திரைகளை பயன்படுத்தி தமது உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள முடியும். இவை உடலின் நரம்பு மண்டலத்தையும் முக்கிய சுரப்பிகளையும் சரிவர இயங்கச் செய்கின்றது, அதுமட்டுமன்றி முத்திரைகள் ஆண்மீகத்தின் திறவுகோலாகவும் காணப்படுகின்றன. முத்திரை பயிற்சியின் போது கவனிக்கவேண்டிய விடயங்கள் பின்வருமாறு ; எந்த ஒரு முத்திரையும் 48 நிமிடங்களுக்கு அதிகமாக செய்யக் கூடாது, முத்திரை பயிற்சி செய்கையில் எமது இரு பாதங்களும் பூமியில் படாத வண்ணம் உட்கார வேண்டும்  ( அதாவது பத்மாசனம், சித்தாசனம், சுகாசனம் போன்ற முறைகளில் உட்கார முடியும் ), நிலத்தில் நேரடியாக உட்காராமல் பொருத்தமான விரிப்புகளை விரித்தே இப்பயிற்சிகளை செய்யவேண்டும் , தரையில் உட்கார கடினமானவர்கள் கதிரையில் அமர்ந்து செய்யலாம் , ஆனால் தமது கால்களுக்கு அடியில் ஒரு விரிப்பை விரிப்பது முக்கியமாகும். காலையிலும் மாலையிலும் இப்பயிற்சியில் ஈடுபடமுடியும் எனினும் அதிகாலை வேளையில் காலைக்கடன்களை முடித்த பின்னர் வெறும் வயிற்றில் செய்வது அதிக பலனைத் தரும், உணவு உண்டு குறைந்தது நான்கு மணி நேரம் களித்தே இம்முத்திரை பயிற்சியில் ஈடுபட வேண்டும். முத்திரை பயிற்சியின் போது ஆளமான சுவாசத்தில் இருப்பது நல்லது . உடல் உஷ்ணத்தை அதிகரிக்கும் முத்திரைகளை செய்யும் முன் சிறிது நீர் அருந்தி பயிற்சியில் ஈடுபடுவது சிறந்தது, முத்திரை செய்யும் காலங்களில் நீர் அதிகமாகக் குடிப்பதால்,  கழிவுகள்  எளிதில் வெளியேற்றப்படுகின்றன. சில முத்திரைகள் உடனடியாக பலனை தரும் ஆனால் சிலமுத்திரைகள் தொடர்ந்த பயிற்சியின் பின்னரே பலனை தரும் எனவே பொறுமையுடன் தினசரி பயிற்சியில் ஈடுபடுவதால் பலனை பெறுவது சாத்தியம். சில முத்திரை பயிற்சியின் போது ஒவ்வாமை போல் தோன்றினால் அம்முத்திரை செய்வதை நிறுத்தவும். முத்திரை பயிற்சியின் போது அதிகமாக எமது உள் அவயவங்கள், நரம்பு மண்டலம், சுரப்பிகள் முதலானவைகளே பலனடைகின்றன, எனவே இவற்றில் ஏற்படும் மாற்றங்களை ஆரம்பத்தில் எம்மால் உணர முடியாவிட்டாலும் நாள் செல்ல முத்திரைகளின் மகத்துவத்தை கண்டிப்பாக உணர முடியும்.

 

அந்த வகையில் இன்றைய பகுதியில் முதலாவதாக பஞ்சபூத முத்திரைகளைப் பற்றிப் பார்ப்போம், எமது உடல் பஞ்ச பூதங்களால் ஆக்கப்பட்டது என்பதை முன்பே பார்த்துள்ளோம், இவ் ஐந்து மூலங்களையும் எமது ஐந்து விரல்களை பயன் படுத்தி மாற்றியமைக்கப் பயன்படும் ஊடகமே முத்திரைகளாகும். எம்மால் உடலில் பஞ்ச பூத சக்தியை இம்முத்திரைகளை பயன்படுத்தி அதிகரிக்கவோ, குறைகவோ முடியும். இவ்வாறு அதிகரிப்பதை – “வர்த்தக்” எனவும், குறைப்பதை  – “நாஷக்” எனவும் கூறலாம். ஐந்து பஞ்ச பூத சக்திகளை அதிகரித்தல் , குறைத்தல் அடிப்படையில் பஞ்சபூத முத்திரைகளை முத்திரைகளை பத்து வகையாகப் பிரிக்கலாம், அவற்றின் செயன்முறை மற்றும் பலங்கள் பற்றிப் பார்க்கின்ற போது,

 

 

 

 

  1. சின் முத்திரை (ஞான முத்திரை )

இது  உடலில் காற்று எனும் பஞ்சபூத சக்தியை கூட்டும் முத்திரையாகும், சுட்டு விரல் நுனியையும் பெருவிரல் நுனியையும் ஒன்றுடனொன்று தொட்டுக்கொண்டு ஏனைய மூன்று விரல்களையும் நீமிர்ந்தவண்ணம் பிடிக்க வேண்டும். இம்முத்திரையை ஆகாயத்தை நோக்கி வைக்கும் போது ஞான முத்திரை எனவும், பூமியை நோக்கி வைக்கும் போது சின் முத்திரை எனவும் கூறப்படுகிறது. ஞாபகசக்தி அதிகரிக்கும், மூளையின் செயற்பாடு அதிகரிக்கும், கிரகிக்கும் தன்மயைக் கூட்டும், மன ஒருமைப்பாடு அதிகரிக்கும், தூக்கமின்மையை நீக்கும், மன அழுத்தம், கோபம், பதட்டம் முதலானவற்றை கட்டுபாட்டுக்குள் கொண்டுவருகிறது , நரம்பியல், மூளை சம்பந்தமான நோய்களைக் குணப்படுத்துகிறது, மனதிற்கு அமைதியைத் தருகிறது. இது மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ள ஒரு முத்திரையாகும். ஏனைய முத்திரைகளைப் போலன்றி  இம் முத்திரையை யாரும் எப்பொழுதும் எவ்வளவு நேரத்துக்கும் செய்யமுடியும்.

  1. வாயு முத்திரை.

இது உடலில் காற்று எனும் பஞ்சபூத சக்தியை குறைக்கும் முத்திரையாகும், ஆள்காட்டி விரலை கட்டைவிரலின் அடியில் வைத்து அழுத்தி ஏனைய மூன்று விரல்களையும் நிமிர்த்தி பிடிக்கவும். மூட்டுவலி, மூட்டு வாதம், இரத்த ஓட்டக் குறைபாடு, முக நரம்பு செயலிழப்பு, வாயுத்தொந்தரவு, சமிபாட்டுக் கோளாறு என்பவற்றிற்கு இம்முத்திரை தீர்வாக அமைகிறது. இம் முத்திரையை குறிப்பிட்ட நெரத்துக்கு அதிகமாக பிடிக்கக் கூடாது, காரணம் உடலில் தேவையற்ற வாயுக்களை இம்முத்திரை வெளியேற்றும் எனினும் அதிகமாகப் பிடிக்க உடலிலிருந்து பயனுள்ள வாயுக்களும் வெளியேறலாம்

 

  1. ஆகாஸ் முத்திரை

உடலில் ஆகாயம் எனும் பஞ்சபூத சக்தியை அதிகரிக்கும் முத்திரையாகும். நடுவிரல் நுனியால் பெருவிரல் நுனியை அழுத்தமாகத் தொட்டு

ஏனைய மூன்று விரல்களையும் வளையாது நிமிர்த்தி பிடிக்கவும். காது, எலும்பு சம்பந்தப்பட்ட குறைபாடுகளை  குணப்படுத்துகிறது, அத்தோடு தூக்கமின்மயையும், இதயம் தொடர்பான பிரச்சினைகளை குணப்படுத்துகின்றது.

 

 

  1. சூன்ய முத்திரை

உடலில் ஆகாயம் எனும் பஞ்சபூத சக்தியை குறைக்கும் முத்திரையாகும், நடுவிரலை கட்டைவிரலின் அடியில் வைத்து அழுத்தி ஏனைய மூன்று விரல்களையும் நிமிர்த்தி பிடிக்கவும். அதிகமான தூக்கத்தை கட்டுப்படுத்துகிறது, காதில் ஏற்படும் வலி உணர்வை குணப்படுத்துகிறது, கேட்டல் குறைபாடு என்பவற்றை நிவர்த்தி செய்கிறது, தொண்டை சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை குணப்படுத்துகின்றது.

 

  1. பிரித்வி முத்திரை

உடலில் நிலம் (மண் ) எனும் பஞ்சபூத சக்தியை அதிகரிக்கும் முத்திரையாகும், மோதிரவிரல் நுனியால் பெருவிரல் நுனியை அழுத்தமாகத் தொட்டு ஏனைய மூன்று விரல்களையும் வளையாது நிமிர்த்தி பிடிக்கவும். எந்தவித உடல் சோர்வினையும் நீக்கும், உடல் பலவீனமானவர்களுக்கு நிறையைக் கூட்டும், தோலினை பளபளப்பாக வைத்திருக்க உதவுவதோடு அழகிய தோற்றத்தையும் தருகிறது, ஜீரண சக்தியை கூட்டுகிறது.

 

  1. சூர்ய முத்திரை

உடலில் நிலம் (மண்) எனும் பஞ்சபூத சக்தியை குறைக்கும் முத்திரையாகும், மோதிரவிரலை கட்டைவிரலின் அடியில் வைத்து அழுத்தி ஏனைய மூன்று விரல்களையும் நிமிர்த்தி பிடிக்கவும். உடலில் கொழுப்பைக் கரைத்து நிறையைச் சீர் படுத்த உதவும், பதட்டத்தைப் போக்கும், அதிக பசியை கட்டுப்படுத்துகிறது, உணவுக்கட்டுப்பாட்டில் (DIET) இருப்பவர்களுக்கு உதவுகிறது, தைரோய்ட் சுரப்பியின் மையத்தை தூண்டும் மற்றும் சமிபாட்டுக் கோளாறுகளைத் தீர்த்து மன அழுத்தத்தையும் குறைகின்றது.

  1. வருண முத்திரை

உடலில் நீர் எனும் பஞ்சபூத சக்தியை அதிகரிக்கும் முத்திரையாகும், சுண்டுவிரல் நுனியால் பெருவிரல் நுனியை அழுத்தமாகத் தொட்டு ஏனைய மூன்று விரல்களையும் வளையாது நிமிர்த்தி பிடிக்கவும். இது  உடலின் நீர் சமநிலையை பேணுகிறது, இரத்தம் சுத்தமாகவும் தோல் நோய்கள் குணமாகவும், தோல் மிருதுவாக மாறவும் உதவுகிறது,நீர்ப் பற்றாக்குறையால் வரும் நோய்களையும் குணப்படுத்த உதவும், இரைப்பை-குடல் அழற்சியால் ஏற்படும் வலியைத் தடுக்கின்றது மற்றும் தோல் சம்பந்தமான நோய்களைக் குணமாக்க உதவுவதோடு முகப்பொலிவை கூட்டுகிறது, வெயில் காலங்களில் வெளியில் செல்பவர்களுக்கு மிகவும் உதவக் கூடிய ஒரு முத்திரை வகையாக இது காணப்படுகின்றது.

  1. வருண் ஷாமக் முத்திரை

உடலில் நீர் எனும் பஞ்சபூத சக்தியை குறைக்கும் முத்திரையாகும், சுண்டுவிரலை கட்டைவிரலின் அடியில் வைத்து அழுத்தி ஏனைய மூன்று விரல்களையும் நிமிர்த்தி பிடித்து இதனை செயற்படுத்த முடியும்.இம்முத்திரையானது வயிறு எரிவை குணப்படுத்துவதோடு முகம்,கை,கால் என்பவற்றில் ஏற்படும் வீக்கங்களை குறைகிறது, உடலில் நீர் அதிகரிப்பால் எற்படும் நோய்களை குணப்படுத்தி தடிமல், மூக்கில் நீர் வடிதல் போன்றவற்றிலிருந்து விடுபட பொருத்தமான முத்திரையாகவுள்ளது.

 

  1. அக்னி வர்த்தக் (மேரு) முத்திரை

உடலில் நெருப்பு எனும் பஞ்சபூத சக்தியை அதிகரிக்கும் முத்திரையாகும், பெருவிரலை மேல் நோக்கி நிமிர்த்திய வண்ணம் பிடித்து ஏனைய விரல்களை மடக்கி முஷ்டியை ஆக்கிக் கொள்வதன் மூலம் இதனை செய்ய முடியும் இதனால் குளிரினால் ஏற்படும் நடுக்கத்தை குறைத்து காய்ச்சலின் நிவாரணியாக அமைகின்றது, உடல் பலவீனத்தை இல்லாது செய்வதோடு குளிர் காலனியையின் போது மிகவும் உகந்த முத்திரையாகவும் கொள்ளப்படுகின்றது.

  1. ஆதி முத்திரை (சக்தி முத்திரை )

உடலில் நெருப்பு எனும் பஞ்சபூத சக்தியை குறைக்கும் முத்திரையாகும், உள்ளங்கையில் பெருவிரலை மடக்கி வைத்து ஏனைய விரல்களால் பெருவிரல் தெரியாவண்ணம் மூடிக்கொள்ளவும். இது உஷ்ண சம்பந்தப்பட்ட வியாதிகளை குணப்படுத்துகிறது, கோபத்தை கட்டுப்படுத்தி உடல் சக்தியை அதிகரிக்கிறது அத்தோடு உடலை உறுதியாக்கி உஷ்ணமான சூழ்நிலையில் மிகவும் உதவும் ஒரு முத்திரையாகும், விளையாட்டு வீரர்களுக்கு நன்மை பயக்கும் முத்திரையாகவும் இது காணப்படுகின்றது.

 

இம்முத்திரையை பத்மாசனத்திலோ, வச்ராசனத்திலோ அல்லது சுக ஆசனத்திலோ (சம்மணம்) அமா்ந்து கொண்டு இரு கைகளிலும் முத்திரையை அமைத்து  தொடையின் மேல் வைத்து சுவாசத்தை சீராக பேண வேண்டும் . கவனத்தை முத்திரை மற்றும் சுவாசத்தில் மீது செலுத்த முழுப்பயனையும் பெறலாம், இம்முத்திரைகளை 5-15 மிமிடங்களுக்கு காலை மாலை இரு வேளை செய்வதால் போதியளவு பலனைப் பெற முடியும். இவ் அரிய வகை முத்திரைகளை நாமும் நமது வாழ்வில் பயன்படுத்தி ஆரோக்கிய வாழ்விற்கு அடித்தளம் அமைப்போம்.

 

அமரசிங்கம் குமணன்

மட்டக்களப்பு