கொக்கட்டிச்சோலை பிரதான வீதியிலிருந்து மணற்பிட்டி வரையும், வீதியில் மாடுகள்

0
2029
– படுவான் பாலகன் –
வீதியில் நடமாடுவதற்கு பின்னுக்கு இவ்வளவு விளக்கமா?
“வீதியல்ல மாட்டுக்காலைதான்” என குளுவினமடு வீதியில் மாடுகளுக்கு நடுவில் வீதியை கடக்க முடியாமல் அசௌகரியங்களுக்கு மத்தியில் புறுபுறுத்துக் கொண்டு நிற்கின்றார் தில்லையம்பலம். இரண்டு பக்கங்களும் வயல்வெளி நடுவே வீதி,  வீதியும் குழியும், மேடுமாகதான் காட்சியளிக்கின்றது. அருகில் வயல் இருப்பதினால் வீதி என்று சொல்லக்கூடியதாகவுள்ளது. வீதியிலே 50க்கு மேற்பட்ட மாடுகள் உறங்கியும், நின்றும் கொண்டிருக்கின்றன. மணற்பிட்டிப்பகுதியிலிருந்து துவிச்சக்கரவண்டியில் வருகைதந்த தில்லையம்பலம் குளுவினமடு பக்கமாக செல்வதற்கு வீதியில் மாடுகள் நின்றதினால் சத்தமிட்டு துரத்தி தான் செல்வதற்கான முயற்சியை செய்து கொண்டிருந்தார். அப்போதுதான் நானும் அந்த வீதியால் சென்று கொண்டிருந்த போது அவரின் புறுபுறுப்பு எனக்கும் கேட்டது. என்ன அண்ணே புறுபுறுப்பெல்லாம் பலமா இருக்கின்றது? என்றேன். கூறத்தொடங்கினார் தில்லையம்பலம்.
என்னத்த தம்பி சொல்லுற! வீதியால போகமுடியல்ல. வெயில் எறிப்பதற்கு முன்பு வயலுக்குள் போயிற்று வரலாம் என்று வீட்டில் இருந்து புறப்பட்டா கொக்கட்டிச்சோலை பிரதான வீதியிலிருந்து மணற்பிட்டி வரையும், வீதியில் மாடுகள்தான் நிற்கின்றன. மணற்பிட்டியோட மட்டுமல்ல வயல் போகும் வரைக்கும் மாடுகள்தான். அதேபோல மாலையில 5மணிக்கு பிறகு  மண்முனை துறையிருந்து எல்லா பிரதான வீதியிலையும் மாடுகள்தான். வீதியில் சைக்கிள் ஓடுவதென்றால் மிகவும் கஸ்டமாகத்தான் இருக்கின்றது.
மாடுகள் என்ன செய்யும்? அதற்கு வசதியான இடங்களில்தான் நின்றும், நடந்தும் கொள்ளும். மாடுகளின் உரிமையாளர்கள்தான் மாட்டினை பாதுகாக்க வேண்டும். அவர்கள் பாதுகாக்கவில்லையாயின் பிரதேசசபை நடவடிக்கை எடுக்க வேண்டும். பிரதேசசபையும் நடவடிக்கை எடுத்தாலும் திரும்பவும் மாடுகள் வீதியிலாதான் நடமாடுகிறதாம். என்று பிரதேசசபை உத்தியோகத்தர்கள் கூறுகின்றனர். அப்படியெண்ட அரசாங்க பண்ணைகளுக்கு மாடுகளை பிடித்து கொடுக்கிற வேலையை செய்ய வேண்டும் என்று அரசாங்க அதிபர் விவசாய ஆரம்ப கூட்டத்தில் கூறினார்.
மாடுகள் என்றால்? செல்வம் என்று அர்த்தம் அதனால்தான் அன்றிலிருந்து இன்றுவரைக்கும் படுவான்கரைப்பகுதியில் உள்ள பலர் மாடுகளை வைத்திருக்கின்றனர். இம்மாடுகளை எல்லா இடங்களிலும் விவசாய செய்கை காலங்களில் வளர்க்க முடியாதென்பதற்காகதான் மண்முனை தென்மேற்கு பிரதேசத்தில் மணலேத்தம், வெட்டிபோட்டசேனை, கறுவாச்சோலை, புளுகுணூவை, காத்தமல்லியார்சேனை, பெருவட்டை போன்ற இடங்களை மாடுமேய்பதற்கான இடங்களாக தெரிவுசெய்திருக்கின்றனர். அப்பகுதியில் கொண்டுதான் மாடுகளை மேய்கின்றனர். இதன்போது யானைப்பிரச்சினைகளும் ஏற்படுவது வழமை. யானை தாக்கி இறந்தும் இருக்கின்றனர்.
மாடுகளை உரிமையாளர்கள் தமது கட்டுப்பாட்டின் கீழ் வளர்க்காவிட்டால், மாடுகளை களவாடி செல்லுகின்ற நிலையும் இருக்கின்றன. முன்னெரெல்லாம் நினைத்தமாதிரி படுவான்கரைச் சொத்துக்களை இலகுவாக களவாடி செல்ல முடியாது. படுவான்கரைக்கான போக்குவரத்துக்கள் பெரும்பாலும் நீரைக்கடக்கும் போக்குவரத்தாக அப்போது இருந்தன. இதற்காக படகுகள் பயன்படுத்தப்பட்டன. தற்போது பாலங்களாக மாறியமையினால் வீதிகளில் நிற்கும் மாடுகளை களவாடி செல்கின்ற நிலையும், இரவுவேளையில் மாடுகளை கொண்டு செல்லுகின்ற செயற்பாடுகளும் நடந்தேறுகின்றன. அண்மையில் கூட கொக்கட்டிச்சோலையில் வைத்து  இளைஞர்களால் இரவுவேளையில் கொண்டுசெல்லப்பட்ட மாடுகளும், வாகனங்களும் பிடிக்கப்பட்டு காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டன.
மாடுகள் களவாடப்படுகின்றன. என்று மாட்டு உரிமையாளர்கள் வார்த்தைகளால் சொல்லுகின்றனரே தவிர காவல்துறையினருடன், மாடுகள் களவாடப்படுவதாக முறைப்பாடுகள் செய்யப்படவில்லையென அவர்கள் கூறுகின்றனர். உண்மையில் காவல்துறையினர் கூறுவதுபோன்று, காவல் நிலையத்தில் மாடுகள் களவாடப்படுவதாக, கால்நடை உரிமையாளர்கள் பெரும்பாலானவர்கள் முறைப்பாட்டினை பதிவு செய்வதில்லை. இதற்கான காரணம் என்ன என ஆராய்கின்ற போது, மாடுகள் வைத்திருக்கின்ற பலர், தமது மாடுகளை பதிவு செய்து அதற்கான சான்றிதழை பெற்றுக்கொள்ளவில்லை. இதனால் பிரதேசத்தில் எத்தனை கால்நடைகள் உள்ளன. என்பது குறித்த தகவலை பெற்றுக்கொள்ள முடியாமையினால். உரிய அளவிலான மேய்ச்சல்தரைகளை பெற்றுக்கொள்வதிலும் சிக்கல்கள் உள்ளன. நமது மக்கள் உரிய பதிவுகளை மேற்கொண்டால், பல பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொள்ளலாம். என்றார் தில்லைநாயகம்.
தில்லைநாயகமும் இந்த பிரதேசத்தின் மீது பற்றுக்கொண்டவர். எல்லா இடங்களுக்கும், எல்லா கூட்டங்களுக்கும் சென்று பல விடயங்களை தெரிந்து வைத்திருக்கின்றவர், இதனால்தான் மாடுகள் பற்றியும் பல விடயங்களை அறிந்திருக்கின்றார். உண்மையில், தில்லைநாயகம் கூறுவது போல், பல விடயங்களில் பண்ணையாளர்களும் விழிப்படைய வேண்டும். இல்லையேல் படுவான்கரைச் சொத்துக்கள் சூரையாடப்படுவது நிறுத்தப்படாமல் போகும் நிலையேற்படும்.