வங்குரோத்து அரசியல் செய்வது கூட்டமைப்பா கணேசமூர்த்தியா ?

0
810

(மயூரன்.ஆ.மலை)

ஏதோ ஒரு வெளி நாட்டில் ஒளிந்து கிடந்த ‘கணேசமூர்த்தி ‘ மீண்டும்இங்கே அரசியல் செய்ய  வழி ஏற்படுத்திக் கொடுத்தது இதே தமிழ் தேசிய கூடமைப்பு தான்

பிரதி அமைச்சரின் பாரபட்சமான செயலுக்கு இவர் வக்காலத்து அறிக்கை விட்டிருகிறாரோ எனவும் எண்ணத் தோன்றுகிறது.

முன்னாள் சிறிலங்கா சுதந்திர கட்சி பிரதி அமைச்சரும் இந்நாள் ஐக்கிய தேசிய கட்சியின் பட்டிருப்பு தொகுதி அமைப்பாளருமான கணேசமூர்த்தி அவர்கள் அண்மையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் தானே  இரண்டு ஒசு சல நிலையங்களை அமைக்க ஏற்பாடு செய்துள்ளதாகவும் தமிழ் தேசிய கூட்டமைப்பு வங்குரோத்து அரசியல் செய்வதாகவும் வெளியிட்டுள்ள அறிக்கை   சுபிட்சத்தில் வெளிவந்த  செய்தி தொடர்பாக, பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் அவர்கள் எமக்கு அனுப்பி வைத்துள்ள மின் அஞ்சல்.

22.03.2018 அன்று பாராளுமன்றத்தில் சுகாதார அமைச்சின் சட்டமூலம் ஒன்றின் மீதான விவாதம் நடைபெற்றபோது , தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பிரதி சுகாதார அமைச்சர் பைசல் காசிம் அவர்களுக்கும் வாக்கு வாதம் இடம் பெற்றதை மக்கள் யாவரும் அறிவர்.இதன் போது மட்டகளப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் அவர்கள் மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையின் குறைபாடுகள் மற்றும் ஏற்கனவே வாக்குறுதியளித்தபடி  மட்டக்களப்பு மாவட்டத்தில் ‘ஒசு சல’ மருந்தகங்கள் அமைக்கப்படாமை பற்றியும் பேசினார். கிழக்கு மாகாண சுகாதார சேவைகளுக்காக நிதி ஒதுக்கீடுகளை செய்யும் போது பிரதி சுகாதார அமைச்சர் பைசல் காசிம் அவர்கள் பாரபட்சம் காட்டுவதையும்  உதாரணங்களுடன் ஸ்ரீநேசன் பாராளுமன்ற உறுப்பினர் சுகாதார அமைச்சருக்கு விளக்க  முற்பட்டபோது பிரதி அமைச்சருக்கும் பாராளுமன்ற உறுப்பினருக்குமிடையில் கடும் வாக்குவாதம் ஆரம்பமானது.

இதன் போது ஸ்ரீநேசன் பாராளுமன்ற உறுப்பினர்,  தாம் பல தடவைகள் மட்டக்களப்பு மாவட்டத்தில்  ஒசுசல அமைப்பது தொடர்பாக கேட்டுக் கொண்ட போதிலும் அவர் தனது மாவட்டத்திலேயே இவற்றை அமைப்பதில் தீவிரமாக இருப்பதையும் சுட்டிக் காட்டியதோடு மத்திய அரசு மற்றும் மாகாண அமைச்சுகளுக்கு கீழுள்ள வைத்தியசாலைகளை அபிவிருத்தி செய்வதிலும் தமிழ் பிரதேச வைத்தியசாலைகள் புறக்கணிக்கப்பட்டுள்ளமை ஆதராங்களுடன் சுட்டிக்காட்டினார் .இவ்வாக்குவாதத்தின்  இடையில் குறுக்கிட்ட சுகாதார அமைச்சர் ராஜித சேனரெட்ன தாம் ‘ஒசு சல’ நிறுவனத்தின் பணிப்பாளரை உடனடியாக மட்டக்களப்புக்கு அனுப்புவதாகவும் அவரோடு சேர்ந்து ஒசு சல மருந்தகம் அமைப்பதற்கான நடவடிக்கைகளை செய்யுமாறும் கிழக்கு மாகாண பிரச்சினைகளை தான் விளங்கிக் கொண்டுள்ளதகவும் எதிர்காலத்தில் உங்களது சுகாதார தேவைகள் தொடர்பாக  தன்னை தொடர்பு கொள்ளுமாறும், தான் உதவுவதாகவும் ஸ்ரீநேசன் பாராளுமன்ற உறுப்பினருக்கு  உறுதியளித்தார்.

இந்த விவாதத்தின் போது அமைப்பாளர் கணேசமூர்த்தி சொல்வது போல அவரின் முயற்சியால் ஏற்கனவே ‘ஒசு சல’ கிளைகளை மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைக்க நடவடிக்கை எடுக்கப் பட்டமை  தொடர்பாக  அமைச்சரோ பிரதி அமைச்சரோ எந்தக் கருத்தும் சொல்லவில்லை. பிரதி அமைச்சர் இன்னும் இடம் கிடைக்கவில்லை,நீங்கள் தான் அரச கட்டடம்  அல்லது மலிவான வாடகையில் இடம் எடுத்து தர வேண்டும் எனக்  கேட்டார்,அமைச்சரோ தனது பணிப்பாளரை அனுப்புவதாக கூறினார். மாறாக கணேசமூர்த்தி அவர்கள் 22.03.2018 அன்று இடம்பெற்ற பாரளுமன்ற விவாதத்தை பார்க்காமலும் அது பற்றி சரியாக அறியாமலும் ஆக்குரோசப்பட்டு தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு எதிராக  அறிக்கை விட்டிருப்பது  அவரது காழ்ப்புணர்வினையே  காட்டுகிறது.மேலும் பிரதி அமைச்சரின் பாரபட்சமான செயலுக்கு இவர் வக்காலத்து அறிக்கை விட்டிருகிறாரோ எனவும் எண்ணத் தோன்றுகிறது.

மட்டக்களப்பில் என்ன நடந்தாலும் அது தன்னாலேயே நடந்தாக காட்ட அவர் முற்படுவதை நாம் அறிவோம்.மக்களுக்கான அபிவிருத்தியை யார் கொண்டு வந்தாலும், அதனை வரவேற்க கற்றுக்கொள்ள வேண்டும். அதை விடுத்தது, இவ்வாறு அறிக்கை விடுவது அவரது வங்குரோத்து அறிவினையே காட்டும்.ஆனாலும் வழக்கம் போல ‘ஒசு ‘ அமைக்க ஏற்பாடுகள் நடந்ததும், தானே அமைச்சரை கூட்டி வந்து படம் காட்டுவார் என்பது திண்ணம்.புதிய ஜனாதிபதிக்கு ஆதரவு அளித்து ஆட்சியை மாற்றி ஏதோ ஒரு வெளி நாட்டில் ஒளிந்து கிடந்த ‘கணேசமூர்த்தி ‘ மீண்டும்இங்கே அரசியல் செய்ய  வழி ஏற்படுத்திக் கொடுத்தது இதே தமிழ் தேசிய கூடமைப்பு தான் என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும்.அத்தோடு தற்போதய நிலையில் தேசிய கட்சிகள் பாராளுமன்றில் பெரும்பான்மையை நிலைநாட்ட இறுதி ஆயுதமாக தமிழ் தேசிய கூட்டமைப்பையே நம்பியிருகின்றன.அது விளங்காமல் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு எதிராக அறிக்கை விட்டு தனது இருப்பை தானே தொலைக்க முயற்சி செய்கின்றாரோ என எண்ணத் தோன்றுகின்றது. எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.