பாராளுமன்றத்தில் ஸ்ரீநேசன் எம் பி ,பிரதி சுகாதார அமைச்சர் பைசல் காசிம்  கடும் வாக்கு வாதம்

0
742

ஒசு சல மருந்து விற்பனை நிலையங்களை மட்டகளப்பில் அமைக்க உடன் நடவடிக்கை

கிழக்கு மாகாணத்திலுள்ள தமிழ் பிரதேச வைத்தியசாலைகள் அபிவிருத்தி செய்யபடுவதில் சுகாதார அமைச்சு சரியான நிதி பங்கீடு வழங்குவதில்லை என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் அவர்கள் இன்று பாராளுமன்ற விவாதம் ஒன்றின் போது தெரிவித்தார்.இதற்கு காரணமாக இருப்பவர் பிரதி சுகாதார அமைச்சர் பைசல் காசிம் அவர்களே எனவும், அவர்   குற்றம் சாட்டினார்.

ஒசு சல மருந்து விற்பனை நிலையங்களை மட்டக்களப்பு மாவட்டத்திலும் அமைக்க பல தடவைகளில் தாம் கேட்டுக் கொண்ட போதிலும் பிரதி அமைச்சர் அவற்றை தனது மாவட்டத்திலேயே அமைத்து வருவதாகவும், இதுவரை ஒன்றையேனும் மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைக்க முன் வரவில்லை எனவும்  பிரதி சுகாதார அமைச்சர் பைசல் காசிம் அவர்களை நோக்கி கூறினார். பிரதி சுகாதார அமைச்சர் மட்டகளப்பு மாவட்ட மக்களுக்கு நோய் ஏதும் வருவதில்லை என நினைத்து தான், ஒசு சல அமைக்காமல் காலத்தை கடத்துகிறாரோ எனவும் கேட்டார்.

மட்டக்களப்பு வைத்தியசாலையில் போதிய வைத்திய நிபுணர்கள்,மற்றும் ஆளணியினர் இல்லாமல் இருப்பதாகவும் கிழக்கு மாகாண சபையின் கீழுள்ள வைத்தியசாலைகளை அபிவிருத்தி செய்யும் போது கூட, தமிழ் பிரதேச வைத்தியசாலைகள் அபிவிருத்திக்காக தெரிவு செய்யப்படுவதில் இருந்து தவிர்க்கப் படுகின்றன என்றும் அவர் உரையாற்றினார்.பாராளுமன்ற உறுப்பினரின் உரைக்கு நடுவே குறுக்கிட்ட பிரதி சுகாதார அமைச்சர் பைசல் காசிம் அவர்கள் ,தான் திட்டமிட்டு அவ்வாறு செய்வதில்லை எனவும் அபிவிருத்தியை முன்னெடுக்கும் நிறுவனங்களும் மாகாண சபையுமே இதற்கு முழு பொறுப்பும் என்று கூறியதோடு,பாராளுமன்ற உறுப்பினர் இனவாத கருத்தினை முன்வைப்பதாக சத்தமிட்டார்.

இவ்வேளையில் , சுகாதார அமைச்சர் ராஜித செனரேட்ன அவர்கள் எழும்பி , தான் பிரச்சினையினை புரிந்து கொண்டதாகவும், சுகாதார அமைச்சு தொடர்பான பிரச்சினைகளை தனக்கு அறிவிக்குமாறும்,ஒசு சல மருந்து விற்பனை நிலையங்களை மட்டகளப்பில் அமைக்க உடன் நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார்.

 

 

 

 

 

 

 

 

[மயூறன் ஆ.மலை] தேசிய மருந்துகள் ஒழுங்கு படுத்தல் அதிகாரச் சட்டம் தொடர்பான விவாதம் பாராளுமன்றத்தில் இன்று (22.03.2018) நடைபெற்ற போது  கிழக்கு மாகாணத்தில் சுகாதார வைத்திய துறைக்கு நிதி ஒதுக்கீடுகள் செய்யப்படும் போது பாரபட்சம் காட்டப் படுவதாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் அவர்கள் குறிப்பிட்டு , பிரதி சுகாதார அமைச்சர் பைசல் காசிம் அவர்களை  குற்றம் சாட்டிய போது இருவருக்கும் சற்று நேரம் வாதப்பிரதிவாதம் ஏற்பட்டது.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைத்தியர் மற்றும் ஆளணியினர்  பற்றாக்குறையினையும்  பிரதி  சுகாதார அமைச்சர் தான் பிரதிநிதித்துவப்படுத்தும் படுத்தும் அம்பாறை மாவட்டத்தில் அதிலும் சில பிரதேசங்களில் உள்ள வைத்தியசாலைகளை மேம்படுத்துவதிலேயே  கவனமாக உள்ளதையும் ‘ஒசு  சல’ மருந்தகங்களில் ஒன்றையேனும் மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைக்காமல் காலம் தாழ்துவதோடு  தனது மாவட்டத்தில் அதிலும் சில குறிப்ப்பிட்ட பிரதேசங்களில் மூன்று ‘ஒசு  சல’ மருந்தகங்களை அமைத்துள்ளதாகவும் குற்றம் சாட்டினார்.மேலும் மத்திய மற்றும் மாகாண வைத்தியசாலைகள் தரமுயர்த்தப்படும் போது தமிழ் பிரதேச வைத்தியசாலைகள் திட்டமிடப்பட்டு புறக்கணிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.இதனால் மீண்டும் இருவருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பிரதி சுகாதார அமைச்சர் பைசல் காசிம் அவர்கள், நீங்கள் இனவாதம் பேசுகிறீர்கள் என சப்தமிட்ட போதிலும் ,நான்  இனவாதம்  பேசவில்லை .உங்களது பாரபட்சமான செயலையே சுட்டிக் காட்டுகிறேன் என்று பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் அவர்கள் தெரிவித்தார்.

இவர்களது வாக்கு வாதத்தின் போது குறுக்கிட்ட சுகாதார அமைச்சர் ராஜித செனரேட்ன அவர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் ‘ஒசு சல’மருந்தகங்களை அமைக்க விரைவில் நடவடிக்கை எடுப்பதாகவும் சுகாதார துறை தொடர்பான பிரச்சனைகளை தனக்கு நேரடியாக தரும் பட்சத்தில் தான் நடவடிக்கை எடுப்பதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் அவர்களிடம் தெரிவித்தார்.