ஐ.நாவுக்கான அமெரிக்கத் தூதரகத்தில், முக்கிய அதிகாரிகளுடன் எம்.ஏ.சுமந்திரன்

0
835

இலங்கையில் இடம்​பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றச்சாட்டுகள் தொடர்பான பொறுப்புக்கூறல் விடயத்திலிருந்து தவறியுள்ள இலங்கை மீது, உலகளாவிய நியாயாதிக்கத்தை அழுத்த, அமெரிக்க தலைமையேற்க வேண்டுமென வலியுறுத்துவதற்காக, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், அமெரிக்காவுக்குப் பயணமாகியுள்ளார்.

இதன்போது, ஜெனீவா தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் தவறுமிடத்து, அதனை நடைமுறைப்படுத்துவதற்கான மாற்றுவழிகளை முன்னெடுக்குமாறும், அமெரிக்கத் தரப்பினரிடம், சுமந்திரன் எம்.பி, கோரவுள்ளார்.

இதற்காக, சனிக்கிழமை (17) அதிகாலை, அமெரிக்காவின் நியூயோர்க் நோக்கிய பயணத்தை, சுமந்திரன் எம்.பி பயணித்ததாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஊடகப் பிரிவினர் உறுதிப்படுத்தினர்.

முன்னதாக, மேற்கண்ட விடயம் தொடர்பில் கருத்துத் தெரிவித்திருந்த சுமந்திரன், இலங்கை, பொறுப்புக் கூறல் விடயத்தில் எதுவும் செய்யவில்லை என்றும் இதனால், இந்த விவகாரத்தை அடுத்த கட்டத்துக்கு நகர்த்துவதற்காக, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர், இலங்கை மீது உலகளாவிய நியாயாதிக்கத்தை அழுத்துவதற்கு, உறுப்பு நாடுகளைத் தான் ஊக்குவிக்கவுள்ளதாவும் தெரிவித்திருந்தார்.

சில நாடுகளில், வேறு நாடுகளின் போர்க் குற்றவாளிகளைக் கைது செய்து விசாரிக்கவும் தண்டனை வழங்கவும், சட்ட ஏற்பாடுகள் உள்ளன. அதனை, அந்தந்த நாடுகள் செயற்படுத்த வேண்டுமென்றும் தெரிவித்திருந்த சுமந்திரன், இதுவே ஆணையாளர் வலியுறுத்தும் உலகளாவிய நியாயாதிக்கமெனவும் இதனை, ஐ.நா. மனித உரிமைகள் சபையினால் நேரடியாகச் செயற்படுத்த முடியாதென்றும், அதற்காகத்தான், அதனைச் செய்வதற்கு, அமெரிக்க தலைமையேற்க வேண்டுமெனக் கோரவுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

போர்க் குற்றவாளிகளைத் தண்டிப்பதற்கான சட்ட ஏற்பாடுகள் உள்ள ஏனைய நாடுகளும், அதனைச் செயற்படுத்துவதற்கு ஊக்குவிக்க வேண்டும். அதனையே தான் வலியுறுத்தவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

கனேடிய தமிழ் காங்கிரஸ் ,அமெரிக்க தமிழர் அரசியற் செயலவை, உலகத் தமிழர் பேரவை ஆகியவற்றின் அங்கத்தவர்களுடன் அவுஸ்ரேலியாவைச் சேர்ந்த தமிழர் பிரதிநிதியும் சுமந்திரனுடன் அமெரிக்காவில் இணைந்துகொண்டு அமெரிக்க இராஜாங்கத்திணைக்க அதிகாரிகளுடனான சந்திப்பில் பங்கேற்கவுள்ளனர்.

நியூயோர்க் நகரில் அமைந்துள்ள ஐ.நாவுக்கான அமெரிக்கத் தூதரகத்தில், முக்கிய அதிகாரிகளுடன், இன்று திங்கட்கிழமை, பேச்சுவார்த்தைகள் இடம்பெறவுள்ளன. ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்கத் தூதுவர் நிக்கி ஹாலே உட்பட முக்கிய அதிகாரிகளுடன், சுமந்திரன் தலைமையிலான புலம்பெயர் தமிழர் குழுவினர், முக்கியமான பேச்சுவார்த்தைகளை நடத்துவரென எதிர்பார்க்கப்படுகின்றது.

நியூயோர்க்கில் சந்திப்புக்களை முடித்துக்கொண்டு, வொஷிங்டன் புறப்பட்டுச் செல்லும் சுமந்திரன் தலைமையிலான தமிழர் தரப்பினர், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில், தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவிச் செயலர் அலிஸ் வெல்ஸ்சுடன், நாளை செவ்வாய்க்கிழமை, பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.

இந்தச் சந்திப்புக்களின் போது ஜெனீவா தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் தவறும் இடத்து அதனை நடைமுறைப்படுத்துவதற்கான மாற்றுவழிகளை முன்னெடுக்குமாறு அமெரிக்கத் தரப்பினரிடம் சுமந்திரன் தலைமையிலான தமிழர் தரப்பினர் வலியுறுத்தவுள்ளனர்.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில், இலங்கை தொடர்பாக 2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை, இலங்கை அரசாங்கம் முழுமையாக நடைமுறைப்படுத்தத் தவறியுள்ளது.

இந்தத் தீர்மானம் நடைமுறைப்படுத்தப்படும் விதம் குறித்து, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் அல் ஹுஸைன், எதிர்வரும் 21ஆம் திகதி புதன்கிழமையன்று, பேரவையில் வாய்மொழி அறிக்கையை சமர்ப்பிக்கவுள்ளார்.