மதத்தின் பெயரால்… 23 வருடங்கள்! இன்னும் என்னை உறவாக ஏற்றதில்லை.!

0
1287

“சின்ன வயசில இருந்து, எதுக்கும் கடவுளே எண்டு கும்பிட்டுக்கொண்டிருந்தனான். ஒருகட்டத்தில் இந்த சமயங்கள் எல்லாம் எல்லாம் என்னதுக்கு? எங்களை வாழவே விடாத சமாயம் எதுக்கு தேவை எண்டெல்லாம் யோசிச்சன்.” என்கிறார் 37 வயதான கே.வி. அக்சலாநிருஸ்ணி அதிகாரி.
கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த அக்சலாநிருஸ்ணி பௌத்த மதத்தைச் சேர்ந்தவரை காதலித்து திருமணம் செய்தவர். தாம் மனதால் விரும்பும் மதம், தமது காதலுக்கு தடையாக நின்ற கதையை கூறினார். “ஆடைத் தொழிற்சாலையலில் பொதி செய்யும் பிரிவில் நானும், விநியோகப் பிரிவில் அவரும் பணியாற்றினோம். 3வருடங்களாக எங்கள் காதலை வீட்டுக்குத் தெரியாமல் மறைத்து வந்தோம். காரணம் மதத்தைக் காரணம் காட்டி எம்மைப் பிரித்து விடுவார்கள் என்று அஞ்சினோம். ஒருகட்டத்தில் என் வீட்டாருக்கு தெரியவந்தது. “நீ வேலைக்கு போகத் தேவையில்லை வீட்டில் நில்” என்று அப்பாவும் அம்மாவும் என்னை வீட்டுக்குள்ளேயே வைத்துவிட்டனர். ஒரு வகையில் அது வீட்டுக்காவல் போன்றதுதான். வேளியில் செல்வதானால் அவர்களுடன்தான் செல்லவேண்டும். அப்பதான் ஏன் இந்த மதப்பிரிவினைகள்? மதமே வேண்டாம் என எண்ணத் தோன்றியது. ஒரு ஞாயிற்றுக்கிழமை என்னைக் கிறிஸ்தவ தேவாலயத்திற்கு அனுப்பி வைத்தனர். அன்று திருப்பலி பூஜை நடந்துகொண்டிருந்தது. ஒரு சிறுமி என்னைச் சுரண்டி, உங்களை ஒருவர் அழைத்துவரச்சொன்னார். குறித்த ஒரு இடத்தைச் சொல்லி அந்த இடத்திற்கு போங்கள் என்று சொல்லிவிட்டுச் சென்றுவிட்டாள். ஆங்கே என் காதலன். ஏனக்கு அழுகை அழுகையாக வந்தது. ஏங்கள் வீட்டு நிலையை சொன்னேன்.
“ சரி… வாரது வரட்டும் நாங்கள் இருவரும் நாளையே பதிவுத்திருமணம் செய்வோம்”என்று கூறி அழைத்தார்.அவ்வாறே யாருக்கும் தெரியாமல் நண்பர்களின் உதவியுடன் பதிவுத்திருமணம் செய்துகொண்டோம். அதையும் வீட்டுக்குத் தெரியாமல் மறைத்து வைத்தோம். உள்மனதில் எனக்கு மிகுந்த கவலையும் இருந்தது. நான் வீட்டுக்கு மூத்த பிள்ளை. ஒரேயொரு பெண்பிள்ளை. அம்மா அப்பாக்கு எவ்வளவு கவலையாக இருக்கும் என எண்ணி அழுதேன். ஆனால் அவர்கள் மதத்தைக் காரணம் காட்டி கடைசிவரை சம்மதிக்கவே இல்லை. அப்போதுதான் வீட்டைவிட்டு இருவரும் வெளியேறினோம்.
பத்து நாட்கள் நாங்களோ எமது நண்பர்களோ ஊரில் இல்லை… ஊரே அல்லோ கல்லோப்பட்டது. எனது வீட்டார் அவரது வீட்டிற்குச் சென்று சண்டை பிடிக்க அவர்களும் சண்டை பிடிக்க என்று ஏழு நாட்களும் கடந்து விட்ட நிலையில்… எனது மாமா ஒருவரின் தலையீட்டால் பதினைந்து நாட்கள்களின் பின் இரு வீட்டாரும் சாமாதானமாகினர். நாங்கள் திரும்பவும் ஊருக்குள் வந்தபோது மீண்டும் ஒரு பூதம் கிளம்பியது. மாப்பிள்ளை மதம் மாறுவதா? பெண் மதம் மாறுவதா? இருவரும் தங்கள் தங்கள் மதத்தில் இருந்துகொண்டு வாழ்க்கையை ஆரம்பிக்கலாம் எண்டு யோசிச்ச எங்களை இருவீட்டாரும் குழப்பி விட்டனர். திருமணச்சடங்கை எந்த மதத்தில் நடத்துவது என்று ஒரே சண்டை. எனது காதலன்தான் “நான் கிறிஸ்தவனாகிறேன்” என்று சொல்லி இந்தப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
பின்னர் மகன் பிறந்த போது மீண்டும் பெயர் வைப்பதில் இருந்து எந்த மதத்தில் படிக்க விடுவது வரை இரு வீட்டாரின் தலையீடும் இருந்தது. வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் மதமும் மதத்தின் பெயரால் பெரியவர்களும் படுத்திய பாடு வாழ்க்கையையே வெறுக்கப்பண்ணிற்று.

 

“எனது மகனை ஆரம்பத்தில் 
அரச பாடசாலையில் 
இணைத்துக்கொள்ளும் 
போது மதம் பற்றிய 
பிரச்சினையொன்று பெரிதாக எழுந்தது. 
அதற்காக நாங்கள் அவனை 
சர்வதேச பாடசாலையில் சேர்த்தோம்

ஆன இப்ப நாம் விகாரைக்கும் செல்வோம் தேவாலயத்திற்கும் செல்வோம். வீட்டிலும் இரண்டு படங்களையும் வைத்து வணங்குகிறோம். படிப்பிற்காக மகனை கிறிஸ்தவத்தில்தான் சேர்த்தோம்.”
என்று மதம் படுத்திய பாட்டை விபரித்தார் அக்சலாநிருஸ்ணி.
இருமத சடங்கு சம்பிரதாயங்களில் நீங்கள் எப்படி பங்குபற்றுகிறீர்கள்? அதில் வந்த பிரச்சினைகள் எவை என அவரிடம் கேட்டபோது,
“என் கணவர் கிறிஸ்தவ பாடசாலையில் தங்கியிருந்து படித்தவராகையால், கிறிஸ்தவ மத விவகாரங்கள் அவருக்கு நிறையவே தெரிந்திருந்தது. அதனால் பெரிய பிரச்சினைகள் இல்லை. ஆனால், என்னால் அவர்களுடைய உறவினர்களுடன் ஒட்டிக்கொள்ள முடியவில்லை. அவரது அம்மா, சகோதரிமார்தான் கொஞ்சம் கொஞ்சமாக அவர்களது பழக்கவழக்கங்களை எனக்கு எடுத்துக்கூறி பழக்கினார்கள். எனக்கு அவர்களுடைய குடும்பத்துடன் ஒட்டுவதற்கு 5 வருடகால அவகாசம் தேவைப்பட்டது.”
வேற்று மதத்தினர் அல்லது இனத்தினர் அயலவர்களாக இருந்தாலும் அவர்களது கலை கலாசாரங்களைத் n;தரிந்துகொள்வதில் யாரும் அக்கறை காட்டுவதில்லை. தாம் சார்ந்த மதமும் தாம் சார்ந்த இனமும்தான் உயர்வானது என்பது பலரதும் எண்ணப்பாங்கு. இதனால்தான் திருமணம் என்று வரும்போது
இவர்கள் இப்படி இருக்கையில் சிலாபத்தைச் சேர்ந்த உதயபாஸ்கரன் ராஜேஸ்வரி இப்படிக் கூறுகிறார்.
“நான் தமிழ் இனம் இந்து மதம். அவர் முஸ்லீம். இவருடைய தந்தையும் என்னுடைய தந்தையும் நானறிந்த காலத்தில் இருந்தே நல்ல நண்பர்கள். நாளடைவில் அவர்களது குடும்ப நண்பர்களாக நாம் மாறினோம். இருவீட்டாரினது கொண்டாட்டங்களில் இருவீட்டினரும் குடும்ப சகிதமே கலந்து கொள்வோம். இதனால் சிறுவயதில் இருந்தே நாங்கள் இருவரும் நல்ல நண்பர்களாக இருந்தோம். பின்னர் அதுவே காதலாக மாறியது. இருவீட்டாரும் தங்களது குடும்ப அங்கத்தவர்களைவிடவும் உறவு பாராட்டியமையால் எமது காதலுக்கு பெரிய தடை அமையும் என்று நாங்கள் நினைக்கவில்லை. ஆனால் நம் காதல் வீட்டாருக்கு தெரியவந்தபோது, என்னை என் வீட்டடார் கண்டிக்கத் தொடங்கினர். படிப்படியாக இருவீட்டாரினதும் விழாக்களில் கொண்டாட்டங்களில் கலந்து கொள்வது படிப்படியாக குறைந்தது. இரு குடும்பத்தினரும் நாளடைவில் கதைப்பதையும் நிறுத்திக்கொண்டனர். என்வீட்டார் எனக்கு வேறிடத்தில் திருமணம் செய்ய நிச்சயித்துவிட்டனர்.
அப்போது நான் அரசாங்கப் பாடசாலையொன்றில் ஆசிரியராகப் பணியாற்றி வந்தேன். ஒரு நாள் வழமைபோல் பாடசாலை விட்டு வரும் போது, இவரும் இவரது நண்பர்கள் சிலரும் வானில் வந்து இறங்கினார்கள்.
“ உன்னுடைய மனதில் என்ன எண்ணம்? ஏன்மீது நம்பிக்கை உள்ளதா? ஏன்னுடன் வாழ நீ தயாரா?” ஏன வினாவினார். “ எனக்கு திருமணம் என்றால் அது உங்களுடன் மட்டும்தான்” என்றேன்.
“ சரி வா வானில் ஏறு” என கூற நானும் அவருடன் போய்வி;ட்டேன். இருவருமே சென்று பதிவுத்திருமணம் செய்துகொண்டோம். இதை அறிந்த இருவீட்டாரின் பகையும் முற்றியது. கோபத்தில் உச்சத்தில், என்னுடைய அண்ணா என்னுடைய கல்வித்தகைமை சான்றுகள் என்னுடைய உடமை, புகைப்படங்களை என்று நான் அந்த வீட்டில் வாழ்ந்த தடயமே இ;ல்லாது எல்லாவற்றையும் போட்டு எரித்துவிட்டான்… எனது வேதனை சொல்லிப் புரியாது. அப்ப இந்த மதங்கள் மீது கோபம் கோபமாக வந்தது. இரண்டு வருசமா இரண்டு வீட்டிலும் எந்த பேச்சுவார்த்தையும் இல்லை. அதன் பின் குழந்தை கிடைத்தது. குழந்தையைக் கூட்டிக்கொண்டு சென்றால் எங்களது வீட்டார் மன்னிப்பார்கள் என்று எதிர்பார்த்தோம். அவ்வாறு செய்தோம். வீட்டு வாசலில் வைத்து என்னுடைய அம்மா சொன்னார், “பேரனுடன் நீ மட்டும் உள்ளே வா…!”
அவர் வீட்டுக்குச் சென்றோம். அங்கும் அதே பதில்தான். தேனாக பாலாக பழகிய இரு குடும்பமும்; இன்று முகம்பார்த்து பேசுவதில்லை. இரண்டு வீடுகளும் இதுவரை எம்மை ஒன்றாக அனுமதித்ததும் இல்லை. என்றாவது இது மாறாதா என காத்திருக்கிறோம்.” என்று கவலைப்பட்டார் உதயபாஸ்கரன் ராஜேஸ்வரி முகமட்டில்சாத்.(48 வயது)

“உங்கள் வீட்டில் அவரையும் அவர் வீட்டில் உங்களையும் சேர்க்காததற்கு மதம்தான் முக்கிய காரணம் என்று எண்ணுகிறீர்களா? “ என்ற அவரிடம் கேட்டோம்.
“ஆம் முழுக்காரணமும் மதம்தான்”
“அப்போ மகனை எந்த மதத்தில் சேர்த்தீர்கள்” என கேட்டபோது,
“எனது மகனை ஆரம்பத்தில் அரச பாடசாலையில் இணைத்துக்கொள்ளும் போது மதம் பற்றிய பிரச்சினையொன்று பெரிதாக எழுந்தது. அதற்காக நாங்கள் அவனை சர்வதேச பாடசாலையில் சேர்த்தோம். இரண்டு மதம் சார்ந்த கல்வியையும் அவனுக்கு போதித்துள்ளோம். அவன் தீர்மானம் எடுக்கட்டும். தனக்கு மாதம் வேண்டுமா? எந்த மதம் வேண்டும்? என்பதை” என்று கூறும் ராஜேஸ்வரியிடம் தெளிவான சிந்தனை தெரிந்தது.
இருவீட்டாரும் இதுவரை இவர்களை ஏற்றுக்கொள்ளாத நிலையில் இன்னும் நம்பிக்கையுடன் காத்திருக்கும் ராஜேஸ்வரியிடம் “ எந்தனை வருடமாக நீங்கள் காத்திருக்கிறீர்கள்? மகனுக்கு இப்போ எத்தனை வயது? “ என கேள்விகளை அடுக்கினோம்,
ஒரு விரக்திச் சிரிப்புடன் “எனது மகனுக்கு 21 வயதாகிறது. இரு வீட்டாரின் தீர்மானத்திலும் எந்த மாற்றமும் இல்லை. திருமணத்தின் பின்னர், இதுவரையில் நான் அவரது வீட்டுக்குச் சென்றதும் இல்லை, மாமா மாமி உறவு பாராட்டியதும் இல்லை. அதேபோல், எங்கள் வீட்டிலும் அவரை சேர்த்ததும் இல்லை. அங்க போனால் கணவரும் மகனும் போவர்கள். அதேபோல் என்னுடைய வீட்டிற்கு நானும் எனது மகனும் செல்வோம். 23 வருடங்களாக இப்படித்தான் நடக்கிறது. ஆனாலும் நான் நம்பிக்கையுடன் இருக்கிறேன். ஏன்பாவாவது எங்கள் மூவரையும் ஒன்றாக இவர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்று.” என்று கூறிமுடித்தபோது நாம் ஆச்சரியத்தில் நின்றோம். இந்தனை வருடங்களாக மதத்தின்பெயரால் உறவை வெறுத்து நிற்க முடிகிறதா? ஆச்சரியம் தான். ஆனால் உண்மை! திருமண உறவில் மதம் வகிக்கும் பங்கு மிகப்பெரிதாக இருக்கிறது.
இதே வேளை நிலுகா புஸ்பகுமாரவிதானகே (39 வயது) வேறு ஒரு வித்தியாசமான தன் கதையைக் கூறுகிறார்.
“நான் பௌத்த மதத்தைச் சேர்ந்தவள். எனது கணவர் இந்து மதத்தைச் சேர்ந்தவர். எங்களது சொந்த ஊர் களுத்துறை. எங்களது காதலுக்கு ஆரம்பத்தில் எனது அம்மாவையும் அவருடைய அம்மாவையும் தவிர உறவினர்கள், சகோதரர்கள் என்று அனைவரும் எதிர்த்தனர். இத்தனை எதிர்ப்பினையும் தாண்டி எங்களது திருமணத்தை எனது அம்மாவும் இவரது நண்பர்களும் செய்து வைத்தனர். நண்பர்களின் பண உதவியுடன்தான் எங்கள் திருமணமே நடந்தது. அவர் தொண்டர் ஆசியரியராக இருந்தார். எங்கள் வீட்டுக்கு யாரும் வருவதில்லை. எனது அம்மா மட்டுமே வந்துபோவார். அந்த ஒரு ஆறுதல் மடடுமே எங்கள் இருவருக்கும் இருந்தது. மகள் பிறந்து அவளுக்கும் 3 வயதாகியது. யாருமே உறவினர் என்று எங்கள் வீட்டுக்கு வரவே இல்லை. எங்களையும் அவர்கள் அழைப்பதில்லை. நாங்கள் வேறு வேறு மதமாக இருந்ததால் எங்களுக்கு இந்தத்த தண்டனை. கவலையாகத்தான் இருந்தது.
ஒரு நாள் பத்திரிகை வாசிக்கும் போதுதான் எதேர்ச்சையாக பார்த்தேன் நீதிமன்ற முதலி வேலைக்கு ஆட்சேர்ப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தது. உடனே அதற்கு விண்ணப்பித்துவிட்டு வந்து இவரிடம் சொல்னேன். படித்து சித்தியடைந்தார். பின்னர் இவருக்கு சிலாபத்தில அந்த வேலை கிடைத்தது. இந்த பணிக்கு வந்ததின் பின்னர் என்னுடைய உறவினர்கள் மத்தியிலும் அயலவர்களிடமும் இருந்தும் எங்களுக்கு கொஞ்சம் கொஞ்சம் மதிப்பு வந்தது. எங்களுடைய வீட்டிற்கு வராதவர்கள் கூட அழையா விருந்தாளிகளாக வந்து சென்றனர். பதவிக்கும் அந்தஸ்த்துக்கும் பணத்துக்கும் முன்னால் சாதி, மத பேதம் இல்லாமல் போய்விட்டது.” பெருமிதத்துடன்சொல்கிறார் தனது அனுபவத்தை நிலுகா புஸ்பகுமாரவிதானகே.
மதங்களை மனிதர்கள் உருவாக்கினார்கள். இப்போ மனிதர்களை மதங்கள் வழிநடத்துகின்றன. வேற்று மதத்தினருடன் என்னதான் நட்பு பாராட்டினாலும், திருமணம் என்று வந்துவிட்டால் எட்டிநிற்கும் பலர்தான் இங்குள்ளனர்.