கிரான் பிரதேசத்தில் உப பொலிஸ் நிலையம் உறுதி

0
508

மட்டக்களப்பு கிரான் பிரதேசத்தில் உப பொலிஸ் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி

கிரான் பிரதேச செயலாளர் பிரிவின் புலிபாய்ந்தகல் பிரதேசத்தை அண்டியதாக சப் பொலிஸ் நிலையம் அமைக்கப்படவேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கையை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் பாராளுமன்ற உறுப்பினர் ஜீ.சிறிநேசன் உறுதியளித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் கோரளைப்பற்று தெற்கு வாகனேரி, புணானை, தரவை, வடமுனை, சிறிய நீர்ப்பாசனத் திட்டங்களுக்கான கூட்டம் கிரான் கோரகல்லிமடு ரெஜி மண்டபத்தில் நேற்றைய தினம் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.

இக்கூட்டத்திலேயே இதனை அவர் தெரிவித்தார்.

கோரளைப்பற்று தெற்கு பிரதேச செயலாளர் கே.ராஜ்பாபுவின் வரவேற்புடன் நடைபெற்ற இப்பிரதேச செயலாளர் பிரிவின் சிறுபோகச் செய்கைக்கான ஆரம்பக் கூட்டத்தை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார் தலைமைதாங்கினார்.

இதன் போது மேய்ச்சல்தரைப்பிரச்சினை, கால்நடைப்பிரச்சினை, யானைப்பிரச்சினைகள், வனவளம், மணல் அகழ்வு உள்ளிட்ட விடயங்களும் விவசாயிகளது பிரச்சினைகள், விவசாயிகளுக்கான மேம்பாட்டுத்திட்டங்கள், நீர்ப்பாசனம், நெல் கொள்வனவு, உரம் வழங்கல் என பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டன.

இக் கூட்டத்தின் போது, தமது பிரதேசத்தில் நடைபெறுகின்ற சட்டவிரோத மரக்கடத்தல், கால்நடைகள் கடத்தப்படுதல் போன்ற சட்டவிரேத நடடிவக்கைகளைத் தடுப்பதற்குரிய நடவடிக்கையினை பொலிசார் மேற்கொள்ளவேண்டும். அத்துடன், ஆரம்பக்கூட்டங்களில் பொலிசார் கலந்து கொள்ள வேண்டும். இக் கூட்டத்திற்கும் அவர்கள் வருகை தரவில்லை. அத்துடன் உப பொலிஸ் நிலையம் ஒன்றை புலிபாய்ந்தகல் சந்தியில் அமைக்க வேண்டும் என நீண்டகாலமாக கோரி வருகிறோம். ஆனால் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்று விவசாயிகள் தெரிவித்தனர்.

அதற்குப் பதிலளித்த பாராளுமன்ற உறுப்பினர் ஜீ;.சிறிநேசன் மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர் ஆகியோர் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் அது தொடர்பில் சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருடன் கலந்துரையாடுவதாகவும் தெரிவித்தனர்.

கோரளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலாளர் பிரிவில், கிரான் கமநல சேவைகள் நிலையத்தின் கீழ் உள்ள சிறிய நீர்ப்பாசனக்குளங்களின் கீழ் 2081 ஏக்கர் செய்கைபண்ணப்படவுள்ளது.வாழைச்சேனை கமநல சேவைகள் நிலையத்தின் கீழ் உள்ள சிறிய நீர்ப்பாசனக்கண்டங்களில் 295 ஏக்கரும், புனானைத்திட்டத்தின் கீழ் 4590 ஏக்கரும், தரவைக் குளத்தின் கீழ் 110 ஏக்கரும், மியாங்கல் குளத்தின் கழழு; 870 ஏக்கரும், வாகனேரித்திட்டத்தின் கீழ் 8456 ஏக்கரும் செய்கைபண்ணப்படவுள்ளதாகத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இக் கூட்டத்தில் விவசாயத்திணைக்களம், நீர்ப்பாசனத்திணைக்களம். மத்தி , மாகாணம், தேசிய உரச் செயலகம், கமநல அபிவிருத்தித்திணைக்களம், விதை மற்றும் நடுகைப் பொருட்கள் அபிவிருத்தி நிலையம், விதை அத்தாட்சிப்படுத்தல் சேவைகள் நிலையம், கால்நடை உற்பத்தி சுகாதாரத்திணைக்களம், விவசாய கமநலக் காப்புறுதி சபை, வளவளத்திணைக்களம், வங்கிகளின் பிரதிநிதிகள், வன ஜீவராசிகள் திணைக்களம் உள்ளிட்ட விவசாய் சார் திணைக்களங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.