தமிழரசுக்கட்சி செயலாளருக்கு மட்டக்களப்பு பட்டதாரிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.

0
804

எமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளைச் சுட்டிக்காட்டி ஜனாதிபதி அவர்களுக்கு எழுதிய கடிதத்தினை கிழக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சர் துரைராசசிங்கம் ஐயா ஊடாக ஜனாதிபதிக்கு வழங்கியிருந்தோம். தகுந்த தருணத்தில் அது வழங்கப்பட்டமையினாலேயே ஜனாதிபதி அவர்களினால் இவ்வாறான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன என மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத் தலைவர் எஸ்.சிவகாந்தன் தெரிவித்தார்.

 ஜனாதிபதியின் மட்டக்களப்பு விஜயத்தின் போது வேலையற்ற பட்டதாரிகளின் கடிதத்திற்கு ஜனாதிபதியினால் சாதகமான உத்தரவுகள் கிடைக்கப்பட்ட விடயம் தெடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே இன்றைய தினம் அவர் இதனைத் தெரிவித்தார்.

இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த 2018.03.03ம் திகதியன்று மட்டக்களப்பிற்கு வருகை தந்த எமது நாட்டின் அதிமேதகு ஜனாதிபதி அவர்களிடம் கிழக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவால் எமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை எடுத்துரைப்பதற்குப் பலவழிகளிலும் முயற்சித்திருந்தோம். அம்முயற்சிகள் வீண் போகாமல் வெற்றியினை ஈட்டியது.

இதன்படி எமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளைச் சுட்டிக்காட்டி ஜனாதிபதி அவர்களுக்கு எழுதிய கடிதத்தினை கிழக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சரும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமாகிய துரைராசசிங்கம் ஐயா ஊடாக ஜனாதிபதிக்கு வழங்கியிருந்தோம்.

குறிப்பாக இந்நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் உரையாற்றிக் கொண்டிருக்கும் போது பட்டதாரிகளின் பிரச்சினைகளை ஜனாதிபதிக்குத் தெரியாவண்ணம் மறைக்கும் பாணியிலேயே அவரது உரை அமைந்தது. கிழக்கு மாகாணத்தில் இனி வேலையற்ற பட்டதாரிகள் இல்லை, அவர்களது பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விட்டது என பொய்களைக் கூறிக்கொண்டு அவரது உரை இடம்பெற்றுக் கொண்டிருக்கையில் அவரது கபடத்தனத்தை தோலுரித்துக் காட்டும் முகமாக அச் சந்தர்ப்பத்தில் முன்னாள் அமைச்சரூடாக ஜனாதிபதியின் கரங்களுக்கு எமது முறைப்பாட்டுக் கடிதம் சென்றது.

ஜனாதிபதி தனது உரைக்கு முன்னதாக எமது கடிதத்தினை வாசித்தமையினாலேயே அத்தனையாயிரம் சனத்திரளின் மத்தியில் பொதுச் சேவை ஆணைக்குழுச் செயலாளரைக் கண்டித்து, ஆணைக்குழுவைக் கலைக்கும்படி கட்டளையிட்டார். தொடர்ந்தும் எமது பிரச்சினைகளுக்கு மத்திய அரசின் கீழும், மாகாணங்களிலும் நியமனங்களை ஆறு மாதங்களில் வழங்குவதாகவும் உறுதியளித்தார்.

எமது முறைப்பாட்டக் கடிதத்தினை அன்றைய தினம் இரண்டு வழிகளினூடாக வழங்கியிருப்பினும், துரைராசசிங்கம் ஐயா அவர்கள் தகுந்த தருணத்தில் ஜனாதிபதியின் உரைக்கு முன்னதாக வழங்கியமையினாலேயே ஜனாதிபதி அவர்களினால் இவ்வாறான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.

எனவே எவ்வகையிலும் எமது போராட்டத்திற்கு உதவுபவர்களை நாம் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளோம். எமக்கு தகுந்த சந்தர்ப்பத்தில் உதவிய கிழக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சர் துரைராசசிங்கம் ஐயா அவர்களுக்கு மட்டக்களப்பு வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என்று தெரிவித்தார்.