மனதில் உறுதியிருந்தால், சாதிக்க தவறுவதில்லை

0
1187

இருகைகள் இன்றி பிறந்தாலும் சாதித்து காட்டிய டிலாணி!

 

– வயிரமுத்து துசாந்தன் –

சுயம்பு லிங்கமாய் வீற்றிருக்கும் கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் முன்பாக நீண்டு கொண்டு செல்லும் பிரதான வீதியினூடாக செல்கையில்,  ஆங்காங்கு வீடுகளும், மேட்டு நிலங்களும் காணப்பட்ட குருந்தையடிமுன்மாரி கிராமத்தினை அடைந்தேன். அங்கே, கிறவல் போன்ற நிறத்தில் தகரக்கூரையும், களிமண்ணால் ஆன சுவரையும் கொண்ட வீடொன்று காணப்பட்டது. அவ்வீட்டின் பகுதிகளை சுற்றி அரசசார்பற்ற நிறுவனங்களினால் வழங்கப்பட்ட கல்வீடுகளும் காட்சி கொடுத்தன. வீடு அமைந்துள்ள பகுதிக்கு பாதுகாப்பு வழங்கும் பொருட்டு கம்புகளை கொண்டு அமைக்கப்பட்ட வேலியும் அமைக்கப்பட்டிருந்தது.

 

தகரக்கூரையும், களிமண்ணால் ஆன சுவரையும் கொண்ட வளவினுள்ளே உட்சென்ற போது, என் கண்களில் இருந்து கண்ணீர் என்னையறியாமலே சொட்டன விழுந்தது. என்ன பேசுவதுதென்றே தெரியாமல் வாய்தடுமாறியது. கண்களை கசக்கிக் கொண்டு வீட்டினையும் எட்டிப்பார்த்தேன், மனகுளிர ஆரம்பித்தது. மூன்று விருதுகள் வீட்டுக்குள்ளே இருந்தன. 2017ம் ஆண்டில் வழங்கப்பட்ட கலைஞர் கௌரவம், 2013ல் வழங்கப்பட்ட இளங்கரக்குயில் விருது, 2012ல் வழங்கப்பட்ட மக்கள் கலை முதுசொம். இதற்க்கு சொந்தக்காரர் யாரென பக்கத்தில் நின்ற அம்மாவை வினாவினேன், அப்போது, மகள் டிலாணிதான் இதற்கெல்லாம் உறவுக்காரர் என்றார். இன்னமும் மகிழ்ச்சி மேலோங்கியது. உண்மையில் டிலாணி ஒரு கரகக்குயில்தான், இது போதாது இன்னமும் பல விருது வழங்கி இருக்க வேண்டுமென்ற சிந்தனையும் என்னுள் எழுந்தது. ஏன்? இவ்வாறு கூறுகின்றேன் என்று எல்லோரும் யோசிக்கலாம். நான் சொல்வதை கேட்டால் நீங்களும் வியந்து நிற்கத்தான் செய்வீர்கள்!

இறைவன் படைப்புக்களில் மனிதர்கள் எல்லோரும் ஒன்றுதான் என்றாலும், ஒவ்வொரு மனிதனும் ஏதோ ஒரு வகையில் ஒவ்வொரு குறைபாட்டுடனையே பிறந்துவிடுகின்றான். இறைவனும் டிலாணியை இரு கைகளும் இல்லாதவளாக 1992.09.23ம் ஆண்டு குணரெத்தினம்; குணேஸ்வரி ஆகியோருக்கு இரண்டாவது பிள்ளையாக படைத்துவிட்டான். அவளும் பிறந்து வளர்ந்து சுயசிந்திக்க தலைப்பட்ட வேளை ஏன் பிறந்தேன்?, ஏன் என்னை இவ்வாறு இறைவன் படைத்துவிட்டான்? என்ற கவலையும், பிறப்பின் வெறுப்பும் இவளுடன் இருக்காமல்விடவில்லை. ஆனாலும் அவை தொடரவுமில்லை. எல்லோரும் ஏதோ ஒரு குறையுடன்தான் பிறந்திருக்கின்றனர் என்ற யதார்த்தத்தினை புரிந்துகொண்டதாக கூறுகின்றாள்.

 

கைகள் இன்றி பிறந்தாலும் கல்வி கற்கத்தவறவில்லை. தன்னுடன் பிறந்த சக நண்பர்களுடன் கொல்லநுலை விவேகானந்த வித்தியாலயத்திலே தரம் 10வரை கல்வி கற்றதாக கூறுகின்றாள். கையின்றி எவ்வாறு எழுதிப் படித்திருக்க முடியும் என்ற யோசனை ஏற்படலாம்? எனக்கு அவ்விடத்தில் டிலாணி கூறும்போது, ஏற்பட்டது. உடனே டிலாணியுடன் வினாவினேன் தனது கால்களினாலே எழுதியதாக கூறினாள், அதனைக் கேட்ட போது சந்தோசமும், வியப்பும் என்னுள்ளே ஏற்பட்டன. கால்களினால் எழுதுவதனை பார்க்க வேண்டுமென்ற அவாவும் எனக்கு தோன்றியது. கால்களால் எழுதிக்காட்டுவீர்களாக என்று கேட்ட போது? மறுப்பின்றி ஆர்வத்துடன் எழுதிக்காட்டினாள். எழுதுகின்ற வேகமும், எழுத்தின் அழகும் என்னை மிகவும் வியப்பாக்கியது. கைகள் இருந்தும் எழுத்தினை அழகாக எழுதமுடியாத பலருள்ளும் டிலாணியின் செயற்பாடுபிரமிக்க வைத்ததொன்றுதான்.
வீட்டிலே தாய், தந்தையுடள் வாழ்ந்து கொண்டிருக்கும் டிலாணி, கரகப்பாடல்களையும், நாட்டார் பாடல்களையும் படிப்பதிலும் மிகவும் கெட்டிக்காரி. இந்த கெட்டிதனத்தினால்தான் விருதுகளுக்கும் சொந்தாரக்காரியாகிருக்கின்றாள். கூலிவேலை செய்து தனது தந்தை தன்னைப் பார்த்துக் கொண்டிருப்பதாக கூறுகின்றாள். இதனால் என்னவோ, தான் சுயமாக உழைத்து சம்பாதிக்க வேண்டுமென்ற ஆசையும் இவளுக்கு இல்லாமல் இல்லை. இதனால்தான் சுயதொழிலையும் செய்து கொண்டு, தனது சம்பாத்தியத்திலும் வாழ்ந்து கொண்டிருப்பதாக பெருமையாக கூறுகின்றாள். வசதிகள் இருந்தும், உடல் அங்கங்கள் ஒழுங்காக இருந்தும் கற்க, சாதிக்க தவறும் பலருள்ளும் டிலாணி போன்றோர்கள் பல படிகளை கடந்து உயர்ந்து நிற்கின்றனர் என்பதே நிதர்சனம்.