-மட்டக்களப்பில் ஜனாதிபதி பங்குபற்றும் -பாரிய பாரிசவாத நடை பாரிசவாதத் தடை- நடை பவனி.

0
880

-அதிரதன்-

யாரும் கவலையில்லாமல் இருக்க முடியாத நோயாகத்தான் பாரிசவாதத்தை வைத்தியர்கள் குறிப்பிடுகிறார்கள். பக்கவாதம் அல்லது பாரிசவாதம் என்பது மூளைக்குக் குருதியைக் கொண்டு செல்லும் குழாய்களில் தடை ஏற்படுவதனால் மூளைக்குக் குருதி செல்வது தடைப்பட்டு மூளையின் செயற்பாடுகள் மிகவிரைவாக இழக்கப்படுவதைக் குறிக்கும் குருதி உறைதல், குழலியக்குருதியுறைமை போன்றவற்றால் அல்லது குருதிப்பெருக்கினால் குருதி வழங்கல் குறைவடையும்போது இது நிகழக்கூடும்.

மூளைக்கு செல்லும் குருதியின் அளவு குறையும்போது மூளையின் உயிரணுக்களுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களும், பிராண வாயுவும் கிடைக்காமல் போவதினால் பாதிக்கப்படும் மூளையின் பகுதி செயற்பட முடியாமல் போய், உடலின் ஒரு பக்கத்திலுள்ள ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட உடல் உறுப்புக்கள் இயங்க முடியாமல் போகிறது. அத்துடன், புரிந்துகொள்ள முடியாமை, ஒழுங்காகப் பேசமுடியாமை, பார்வைப் புலத்தின் ஒரு பகுதியைப் பார்க்க முடியாதிருத்தல் போன்றவையும் ஏற்படலாம்.

பக்கவாதம் நிரந்தரமான நரம்புச் சிதைவை ஏற்படுத்துவதுடன் இறப்பும் நிகழலாம். ஐக்கிய அமெரிக்கா, ஐரோப்பா போன்ற பகுதிகளில் வளர்ந்தவர்களில் ஏற்படும் ஊனத்துக்கான முன்னணிக் காரணம் இதுவாகும். ஐக்கிய இராச்சியத்தில் இறப்புக்கான காரணிகளில் இது மாரடைப்புக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் உள்ளது. உலக அளவிலும் இறப்புக்கான காரணிகளுள் இது இரண்டாவதாக இருப்பதுடன், விரைவில் இது முதல் இடத்துக்கு வரக்கூடும் எனவும் கருதப்படுகிறது.

பக்கவாதத்துக்கான இடர் காரணிகளில் சில பாரம்பரியத்தால் ஏற்படுவனவாகவும், இயற்கை செயல்முறைகளால் ஏற்படுவனவாகவும் இருக்கின்றன. அப்படியானவற்றை நாம் கட்டுப்படுத்தவோ, மாற்றியமைக்கவோ முடியாது. வேறு சில இடர் காரணிகள் வாழ்க்கை முறை, மற்றும் சூழல் போன்ற நம்மால் கட்டுப்படுத்தக் கூடிய, அல்லது மாற்றக் கூடிய காரணிகளாக இருக்கின்றன. அவற்றை தகுந்த உடல்நலப் பாதுகாப்பு முறைகளால் நாம் மாற்றியமைக்கலாம்.

உலகில் மூன்றாவது நிலையிலுள்ள உயிர் கொல்லி நோய்களில் ஒன்றாகவும், அங்கவீனத்திற்கான முதலாவது நிலையிலுமுள்ளதுமான பாரிசவாதம் என்கிற நோய் தெரியாமலேயே மனிதனை ஆட்கொண்டிருக்கிறது. எனவே அடுத்தவரை பற்றிச் சிந்திப்பதனை விடவும் நம்மை நாமே பார்த்துப் பராமரித்துக் கொள்வோம்.

இரத்த அழுத்தம், சக்கரை நோய், உணவுப் பழக்கவழக்கங்கள், உடற்பயிற்சியின்மை, மன அழுத்தம் போன்ற காரணங்களினால் தான் அதிகம் பாரிசவாதம் ஏற்படுகிறது. பாரிசவாதம் குணப்படுத்த முடியாத நோய் என்றே இதுவரையில் சிந்தனைகள் இருந்து வருகின்றன இருப்பினும் பாரிசவாதம் ஒரு குணப்படுத்தக்கூடிய நோய் என்று மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் நரம்பியல் சிகிச்சைப்பிரிவின் நரம்பியல் நிபுணர் தி. திவாகரன் தெரிவிக்கிறார். இவர் இலங்கை தேசிய பாரிசவாத சங்கத்தின் உறுப்பினராகவும் இருக்கிறார்.

எல்லா வயது மனிதர்களையும் கருத்தில் கொள்கையில், பெண்களை விட ஆண்களுக்கே இந்நோயின் தாக்கம் அதிகமாக உள்ளது. ஆனாலும் நோய்த் தாக்கத்துக்குட்பட்டவர்களில் இறப்பு ஏற்படுவது பெண்களிலேயே அதிகம் என்று கணிப்புகள் தெரிவிக்கின்றன. பெண்களில் பிறப்புத் தடுப்பு மருந்துகள், கர்ப்ப நிலைகள் இதற்குக் காரணமாகும்.

பக்கவாதத்திற்கான அறிகுறிகள் என்பவை பொதுவாகச் சால்ல முடியாவிட்டாலும் பொதுவில் திடீரென சில வினாடிகளிலிருந்து சில நிமிடங்களில் தோன்றுபவையே. முகத் தசைகளில் ஏற்படும் தளர்ச்சி, கையை தூக்க முடியாமல் போதல், அசாதாரணமாக பேசுதல் போன்றவை அறிகுறிகளாக அமைகின்றன. இவையே முதன்மையான அறிகுறிகளுமாகும்.

பேசுதல், நடத்தல், எழுதுதல் போன்ற ஒவ்வொரு நடவடிக்கையும் மூளையிலுள்ள குறிப்பிட்ட தொழிற்பாட்டு மையங்களால் கட்டுப் படுத்தப்படுகின்றது. ஆகவே மூளையின் எந்தப் பகுதிக்கு குருதி வழங்கல் தடைப்படுகிறது என்பதைப் பொறுத்து அறிகுறிகளும் மாறுகின்றன. பொதுவாக பக்கவாதத்தினால், உடலின் ஒரு பக்கமே இவ்வாறு பாதிப்படைகிறது. மூளையின் எப்பகுதி தாக்கத்துக்கு உட்படுகிறதோ, அதற்கு எதிரான உடலின் பக்கமே பாதிப்புக்குள்ளாகிறது. ஆனால் இங்கு கூறப்படும் அறிகுறிகளும், உணர்குறிகளும் வேறு காரணங்களாலும் ஏற்பட சாத்தியங்கள் இருப்பதால், இவை கட்டாயமாக பக்கவாதத்தினால் ஏற்பட்டவையாக இருக்க வேண்டிய அவசியமில்லை.

பாரிசவாதத்தினை கட்டுப்படுத்துதல், பாதிப்பினைக் குறைத்தல் போன்றவற்றினை முக்கியப்படுத்தியதான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் வகையில், சர்வதேச பாரிசவாத அமைப்பின் ஒரு அங்கமாக இலங்கை தேசிய பாரிசவாத சங்கம் செயற்பட்டு வருகிறது. இச் சங்கம் பாரிசவாத தினத்தினையொட்டி நடை பவனிகளை தேசிய ரீதியில் நடத்தி வருகிறது. கடந்த வருடத்தில் ஜனாதிபதியின் பங்குபற்றலுடன் பாரிசவாத நடைபவனி கொழும்பில் நடைபெற்றது. இதுபோன்ற நடைபவனிகள் காலி மாத்தறை, கண்டி போன்ற மாவட்டங்களில் கடந்த வருடங்களில் நடத்தப்பட்டுள்ளது.

இது போன்றதொரு தேசிய பாரிசவாத நடைபவனி இம்முறை மட்டக்களப்பில் நடைபெறவுள்ளது. பாரிய பாரிசவாத நடை பாரிசவாதத் தடை என்ற தொனிப் பொருளுடன், பாரிசவாதம் தொடர்பான விழிப்புணர்வை கிழக்கின் சகல பாகங்களிலும் ஏற்படுத்தும் நோக்கில் இலங்கையில் பாரிசவாத அமைப்பின் ஏற்பாட்டில் 2018ஆம் ஆண்டுக்கான தேசிய பாரிசவாத நடை பவனி மட்டக்களப்பில் பெப்ரவரி 24ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இவ் நடை பவனி தொடர்பான ஏற்பாடுகளில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான மா.உதயகுமாரின் முழுமையான ஒத்துழைப்புடன் மாவட்ட செயலகத்தின் ஒருங்கிணைப்பில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை நரம்பியல் பிரிவும் ஈடுபட்டுள்ளது. நரம்பியல் பிரிவு வைத்தியர்களான மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை நரம்பியல் மருத்துவர்கள், ஏனை வைத்தியசாலைகளின் வைத்தியர்கள், pரதேச செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளும் இணைந்து செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

இலங்கையில் நரம்பியல்துறையில் வசதிகளைக் கொண்ட தேசிய வைத்தியசாலை, போதனா வைத்தியசாலைகளான கொழும்பு வடக்கு மற்றும் தெற்கு, ஸ்ரீ ஜயவர்த்தனபுர, கண்டி, பேராதனை, கராப்பிட்டிய, யாழ்ப்பாணம், அனுராதபுரம் ஆகிய வைத்தியசாலைகளிலும் மாகாண வைத்தியசாலைகளான குருநாகல், இரத்தினபுரி, பதுளை, களுத்துறை, மாத்தறை ஆகிய வைத்தியசாலைகளிலும், குறிப்பிட்டளவான ஆதார வைத்தியசாலைகளிலும் அத்துடன், பெரிய தனியார் வைத்தியசாலைகளிலும் பாரிசவாத நோய்க்கான சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன.

இருப்பினும், பாரிசவாதம் ஏற்பட்டு 3 மணி நேரங்களுக்குள் ஊசி மருந்து மூலம் வழங்கக்கூடிய உடனடி விசேட சிகிச்சைகள் நாட்டின் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை, கொழும்பு தேசிய வைத்தியசாலை, களுபோவில, கண்டி, ராகம உள்ளிட்ட பிரதான வைத்தியசாலைகளிலேயே வழங்கப்படுகின்றன.

விபத்து ஏற்பட்டால், நெஞ்சு வலி ஏற்பட்டால் வைத்தியசாலைக்குச் சிகிச்சைக்காக கொண்டு செல்வதைப்போல் பாரிசவாதம் ஏற்பட்டாலும் உடனடியாக வைத்தியசாலைக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்ற மனோநிலை அனைவரிடமும் வர வேண்டும்.

பாரிசவாதத்தின் தாக்கத்தினால், ஆவயவங்கள் பாதிக்கப்படல், பேச்சு இழத்தல், உடல் சமநிலையில் பாதிப்பு ஏற்படும். பாரிசவாதத்திலிருந்து விடுபடுவதற்கு நாம் இளவயது முதலே சில முக்கிய விடயங்களில் சிரத்தை காட்டுதல் வேண்டும். இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துதல், புகைப்பிடித்தலைத் தவிர்த்தல், சர்க்கரை வியாதியை பூரண கட்டப்பாட்டுக்குள் வைத்திருத்தல், ஆரோக்கிய மான உணவுப் பழக்க வழக்கங்களைக் கடைப்பிடித்தல், அளவான உடற்பயிற்சி அல்லது நடைப்பயிற்சி, மன அழுத்தத்திலிருந்து விடுபடுதல், மது அருந்ததைத்தவிர்த்தல் ஆகியவற்றைக் கடைப்பிடித்தல் சிறப்பானதாகும்.

இவற்றினையும் மீறி பாரிசவாதம் உங்களைத் தாக்கினால் உடனடியாக முதல் மூன்று மணித்தியாலங்களுக்குள் தகுந்த வைத்தியசாலையை நாடி சிகிச்சை பெற வேண்டும்.

இலங்கையின் பிரதான வைத்தியசாலைகளில் குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பாரிசவாதத்திற்கான உடன் சிகிச்சை மருத்துவ வசதிகள் கடந்த ஒன்றரை வருடகாலமாக தினமும் 24 மணிநேரமும் காத்திருக்கிறது. இவ் வைத்தியசாலையின் நரம்பியல் பிரிவின் ஒருங்கிணைப்பில் இதன் சகல பொது வைத்திய நிபுணர்களும் அவசர சேவைப் பிரிவினரும் இதர வைத்தியசாலை ஆளணியினர் அனைவரும் இச் சேவைக்காக எந் நேரமும் தயார் நிலையில் உள்ளனர்.

எனினும் இச்சேவையைப் பெற பாரிசவாதம் தாக்கி முதல் மூன்று மணித்தியாத்தினுள் வைத்தியசாலையை அடைய வேண்டும். மட்டக்களப்பில் வேறு எந்த வைத்தியசாலையை அடைந்தாலும் கூட உடனடியாக போதனா வைத்தியசாலைக்கு அனுப்புவதற்கு அம்புலன்ஸ் வண்டிகள் தயார் நிலையில் உள்ளன.

ஆறு மணி நேரத்தில் வைத்தியசாலையை நாடினால் பூரணமாகக் குணம் பெறுவது கடினம். ஆனால் அப்பொழுது கூட, வீட்டில் இருப்பதனை விடவும் மிகக்கூடியளவுக்கு வைத்தியசாலைக்கு செல்வதனால் குணம்பெறுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன.

பெரும்பாலான அரச வைத்தியசாலைகளிலுள்ள பாரிசவாதத்துக்குப்பின்னராக சிகிச்சை வசதிகளில் உயற்பயிற்சி பேச்சுப் பயிற்சி, தொழில் சிகிச்சை, சமூக சேவையாளர்களின் உதவிகள் என்பவன வழங்கப்படுகின்றன. அத்துடன், பொது வைத்திய நிபுணர்கள்கள் ஊடாக ஏன் பாரிசவாதம் ஏற்பட்டது என்பதனைக் கண்டறிந்து மீண்டும் ஏற்படாமல் இருக்கத்தக்க ஆலோசனைகளையும் வழங்குகிறார்கள்.

குறிப்பாக மட்டக்களப்பில் வாழைச்சேனை தள வைத்தியசாலையின் ~காருண்யா~ எனும் பெயரில் உள்ள பாரிசவாதத்துக்குப்பின்னரான புனர்வாழ்வு நிலையத்தில் இச்சேவைகள் அனைத்தும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை நரம்பியல்பிரிவுடன் ஒருங்கிணைக்கப்படடு இதுவரை 130ற்கு மேற்பட்டவர்களுக்கு பயனளித்துள்ளது. அவசர பாரிசவாதச் சிகிச்சை மூலம் ஊசி மருந்து ஏற்றப்பட்டதன் மூலம் 31பேர் பூரண குணமடைந்துள்ளனர்.

பாரிசவாதத்தின் முக்கியத்துவம் கருதி, இலங்கையில் பாரிசவாத அமைப்பானது ஆண்டு தோறும் பாரிசவாத நடைபவனியை நடத்தி வருகிறது. இவ் நடைபவனி முதல் தடவையாக கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பில் பெப்ரவரி 24ஆம் திகதி சனிக்கிழமை ஜனாதிபதியின் பங்குபற்றலுடன் நடைபெறவுள்ளது. கல்லடிப்பால சிறுவர் பூங்காவில் இருந்து ஆரம்பமாகி மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் நிறைவுபெறவுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் சுகாதர அமைச்சர், கிழக்கு மாகாண ஆளுனர், அரசாங்க அதிபர், பிரதேச செயலாளரகள், கிராம அலுவலர்கள், கிழக்கின் அனைத்து வைத்தியசாலை ஆளணியிளனர், பாடசாலை மாணவர்கள், உட்பட 5000க்கும் மேற்பட்ட வர்கள் இவ் வருடத்துக்கான பாரிசவாத நடைபவனியில் பங்கு பெறவுள்ளனர்.

பாடசாலை மாணவர்களின் பாண்டு வாத்திய அணியினரின் இன்னிசைகளும், பிரதேச கலாசார நடனங்களும் இவ் பவனியில் இணையவுள்ளன. இதற்கான ஏற்பாடுகள் மட்டக்களப்பில் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

பாரிய பாரிசவாத நடை பாரிசவாதத் தடை.