படையினரின் கட்டுப்பாட்டில் நீண்ட காலமாக இருந்த பொன்னாலை – பருத்தித்துறை வீதி மக்களின் பாவனைக்கு

0
532

படையினரின் கட்டுப்பாட்டில் நீண்ட காலமாக இருந்த பொன்னாலை – பருத்தித்துறை வீதி விடுவிக்கப்பட்டு போக்குவரத்து சேவைகளும் இன்றைய தினம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த 1990 ஆம் ஆண்டு முதல் மேற்படி வீதி உள்ளிட்ட பல பிரதேசங்கள் இராணுவத்தின் உயர் பாதுகாப்பு வலயங்காக இருந்து வந்திருந்தன. ஆயினும் கடந்த அரசிலும் தற்​போதைய அரசிலும் அங்கு சில பகுதிகள் விடுவிக்கப்பட்டு மக்களும் மீளக் குடியமர்த்தப்பட்டுள்ளனர்.

ஆயினும் அங்குள்ள மக்களுக்கு மிகவும் அவசியமான அந்த வீதி இதுவரை விடுவிக்கப்படாது படையினரின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது. இதனால் பல கிலோ மீற்றர் தூரம் பயணம் செய்ய வேண்டிய துர்ப்பாக்கிய நிலை அங்குள்ள மக்களுக்கு ஏற்பட்டிருந்தது.

இதனையடுத்து மேற்படி வீதியை விடுவிக்குமாறு தொடர்ச்சியாக பல தரப்பினர்களாலும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்றைய தினம் குறித்த வீதியை பொது மக்களின் பாவனைக்காக படையினரிடம் இருந்து விடுவிப்பதாக யாழ் வந்த ஐனாதிபதி தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து நேற்றைய தினம் வீதி விடுவிக்கப்பட்டுள்ளதுடன் அந்த வீதி ஊடான போக்குவரத்து சேவைகள் அனைத்தும் இன்று காலை 8 மணிக்கு உத்தியோகபுர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன் ஆரம்ப நிகழ்வு மயிலிட்டியில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் யாழ் மாவட்ட அரச அதிபர் என். வேதநாயகன் யாழ். இராணுவத் தளபதி மேஐர் ஜெனரல் தர்சன கெட்டியாராச்சி உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதேவேளை இங்கு உரையாற்றிய யாழ் அரச அதிபர்

மீள்குடியேற்றப்பட்ட மக்களின் கோரிக்கை இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது

ஏற்கனவே இவ்வீதி திறக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிகழ்வு சில காலதாமதங்கள் ஏற்பட்டு நடைபெறுகின்றது.

இப்போது இராணுவத்தளபதியாக இருக்கும் மகேஸ் சேனநாயக்க முன்னர் யாழ்ப்பாண கட்டளைத் தளபதியாக இருக்கும் போது இவ்வீதியை திறப்பது சம்பந்தமாக எம்முடன் கதைத்திருந்தார்.

அந்தவகையில் தற்போது இராணுவத்தளபதியாக இருக்கும் மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாச்சி அவர்களும் இந்த பாதையை திறப்பதற்கு மிகவும் ஆர்வமாக செயற்பட்டிருந்தார். இந்நிலையில் மகேஸ் சேனநாயக்க மற்றும் தர்ஷன ஹெட்டியாச்சி ஆகியோருக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

நேற்று மாலை கூட யாழ்.மாவட்ட கட்டளைத் தளபதி என்னுடன் தொலைபேசியில் கதைத்திருந்தார் ஆரம்பத்தில் போக்குவரத்து சபை பஸ் சேவையை நடைபெறும் பின்னர் படிப்படியமாக மக்களின் தனிப்போக்குவரத்தினை ஏற்படுத்துவோம் என பேசினார். இந்தவகையில் போக்குவரத்துக்காக திறக்கப்படுவது வரவேற்கத் தக்கதொன்று இப்பகுதி பொதுமக்கள் மற்றும் மீள்குடியேற்ற சங்கத்தினரும் எம்மைச் சந்திக்கம் போது முதலில் பலாலியில் மீள்குடியேற்றம் செய்தவர்கள் இங்கு வருவதற்கும் இந்தப் பகுதியில் மீள்குடியேற்றம் அங்கு பயணம் செய்வதற்கு இவ் வீதி திறக்கப்பட வேண்டிய தேவையென்றும் இந்த கோரிக்கை விடுத்தனர்.

இந்த கோரிக்கை இன்று நிறைவேறியிருக்கிறது. அனைவருக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன் என்றார்.