ஒரே தேச உணர்வுடன் ஒரே கொடியின் கீழ் தடைகளை உடைத்தெறிந்து தாய்நாட்டின் வளர்ச்சிக்காக பங்களிக்கத் தயாராகுவோம் – மட்டு. அரசாங்க அதிபர்

0
605

 

எமது தேசபிதாக்களின் தியாகத்துக்கும், தொடர்ந்து வந்த முன்னோடிகளின் முயற்சிகளுக்கும் நாட்டுக்குக்கிடைத்த சுதந்திரத்துக்கும் நாம் பெருமை சேர்க்கும் வகையில் நாம் அனைவரும் ஒரே தேசம் என்ற எண்ணக்கருவுடன் ஒரே கொடியின் கீழ் எம்மைச் சூழ்ந்துள்ள எல்லாத் தடைகளையும் உடைத்தெறிந்தவர்களாக எமது தாய்நாட்டின் உயர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் பங்களிக்க திட சங்கல்ப்பம் கொள்ள வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார் தெரிவித்தார்.

இலங்கையின் 70ஆவது தேசிய சுதந்திர தினத்தின் மட்டக்கள்பு மாவட்டத்துக்கான நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை (04) காலை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார் தலைமையில் மட்டக்களப்பு வெபர் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

இச் சுதந்திர தின நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

நேற்றைய தினம் சரியாக காலை 9 மணிக்கு தேசியக்கொடியேற்றலுடன் ஆரம்பமான தேசிய சுதந்திர தின நிகழ்வில், தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் தேசிய கீதம் இசைக்கப்பட்டு நாட்டுக்காக உயிர் நீத்த போர் வீரர்களுக்காக மரியாதை செலுத்தப்பட்டது.

அதனையடுத்து பாடசாலை மாணவர்கள், பொலிஸ், மற்றும் கலாசார அணியினரின் அணி வகுப்பு மரியாதையையடுத்து அரசாங்க அதிபரின் சுதந்திரதின உரை இடம்பெற்றது.

மாவட்ட அரசாங்க அதிபரின் உரையினையடுத்து ஆரோக்கியமான நாட்டைக் கட்டியெழுப்புதல் என்ற தொனிப்பொருளுக்கமைவாக யோகா பயிற்சிக்கண்காட்சி ஒன்று நடைபெற்றது.

இந்த சுதந்திர தின நிகழ்வுகளில் திணைக்கங்களின் தலைவர்கள், முப்படைகளினையும் சேர்ந்த உயர் அதிகாரிகள், படைவீரர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், பாடசாலை மாணவர்கள், பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இங்கு உரையாற்றிய மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார்,

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசினுடைய சுதந்திரதினக் கொண்டாட்டத்தினை அதி உத்தம ஜனாதிபதி அவர்கள் காலிமுகத்திடலில் ஆரம்பித்து வைத்து இன்று அங்கு நிகழ்வு நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற அதே வேளையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் மாவட்டத்துக்குரிய இந்த சுதந்திர தினத்தினைக் கொண்டாடக் கிடைத்திருக்கின்றது. இன்று நாம் இன, மத. மொழி வேறுபாடுகளுக்கற்ற இலங்கைத் தாயின் ஒரே பிள்ளைகள் என்ற உறவுடன், எமது தாய் நாட்டின் 70ஆவது சுதந்திரதினத்தைக் கொண்டாடுகின்றோம்.
இற்றைக்கு 7 தசாப்தத்துக்கு முன் இன்றையைப் போன்றொரு நாளில் இலங்கை மண்ணிண் மக்களால் ஆளக்கூடிய சுதந்திரத்தைப் பெற்றுக் கொண்டோம்.
கிறிஸ்துவுக்குப்பின் 1505ஆம் ஆண்டு போர்த்துக்கேயர் இங்கு கால் பதிக்கும் வரை இந் நாடு பிராந்திய மன்னர்களின் ஆட்சிக்குட்பட்டிருந்தது. ஒவ்வொரு ராட்சியமும் ஒவ்வொரு மன்னால் ஆளப்பட்டு வந்தது. போர்த்துக்கேயரின் வருகையைத் தொடர்ந்து ஏகாதிபத்திய வாதிகளின் காலநித்துவ ஆட்சிக்குட்பட்டு தொடர்ச்சியாக 4 நூற்றாண்டுகளுக்கு மேலாகத் தொடர்ந்தது.
1505ஆம் ஆண்டு முதல் 1658ஆம் ஆண்டுவரை போர்த்துக்கேயரும் 1658 முதல் 1796 வரை ஒல்லாந்தரும் 1796 முதல் 1948ஆம் ஆண்டு வரை ஆங்கிலேயருமாக எமது நாட்மை 443ஆண்டுகளாகஆட்சி செய்தனர்.
அன்நியர் ஆட்சிக்காலத்தில் இந்த நாடு பல பாதக சாதக விளைவுகளை அனுபவித்தது. பொருளாதார அபிவிருத்தி கட்டமைப்புகள், போக்குவரத்து வசதி வளர்ச்சி, கல்வி முன்னேற்றம் எனச் சாதகமான விளைவுகளை நாம் கண்டிருப்பினும் எமது நாட்டு மக்கள் அடிமைப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்து வந்தனர். எமது நாட்டு வளங்கள் சூறையாடப்பட்டன. பொருளாதாரம் சுரண்டப்பட்டது. ஈன மத பேதமாக மக்கள் பிரித்தாளப்பட்டனர். எங்களிடமிருந்த ஒற்றுமை சீர்குலைந்தது.
காலனித்துவ ஆட்சியில் ஏதோ ஒரு வகையில் அடிமைப்பட்டதாக மக்கள் உணர்ந்தனர். பொருளாதாரமும் எமது சுதந்திரமும் பறிக்கப்பட்டிருந்த உணர்வு மக்கள் மத்தியிலும் சமூகத் தலைவர்கள் மத்தியிலும் வலுப்பெற்றது.
சுதந்திர இயக்கம் தோற்றம் பெற்றது. இந்நாடு சுதந்திரக்காற்றை சுவாசிக்க வேண்டும் என்ற உணர்வும் தேசப்பற்றும் ஒரே நாடு என்ற எண்ணமும் மேலிட்டது. எமது நாட்டின் தே பிதாக்கள் தொடர்ச்சியாக மேற்கொண்ட முயற்சியின் பயனாக நாட்டுக்குச் சுதந்திரத்தை மீட்டுக் கொடுத்தனர்.
இன மத, மொழி வேறுபாடுகளின்றி எல்லோரும் ஒரு குலமாக எமது முன்னோர்கள் செயற்பட்டதனாலேயே நாம் இன்று எமது நாட்டின் 70ஆவது சுதந்திரத்தைக் கொண்டாடக் கிடைத்தது.
இந்த வகையில் நாட்டுக்காக தம்மைத்தியாகம் செய்த தேச பிதாக்களை நன்றியுணர்வுடன் நினைவு கூறிகிறோம். இந்த ஆண்டின் சுதந்திர தினத் தொனிப்பொருளும் அதுவேயாகும். ஒரே தேசம்.
விடுதலை பெற்றபோது நம்மிடையே ஒற்றுமை நிலவியது. அத்துடன், நாட்டின் பொருளாதாரம் சமூக முன்னேற்றம் போன்றவற்றில் ஏனைய ஆசிய நாடுகளில் ஜப்பானுக்கு அடுத்தபடியாக நாம் முன்நிலையில் இருந்தோம். எனினும், சுதந்திரத்தின் பின் சுயநல அரசியல் செயற்பாடுகளால் நாட்டு மக்களிடையே இன, மத, மொழி ரீதியான காழ்ப்புணர்ச்சிகள் ஏற்படுத்தப்பட்டன.
பல இன பல கலாச்சாரங்களை நம் நாடு தழுவியிருந்தது. பல்ஆயிரக்கணக்கான இன்னுயிர்கள் காவு கொள்ளப்பட்டன. பொருளாதாரம் சமூக முன்னேற்றம் என்பவற்றில் ஏனைய ஆசிய நாடுகள் முன்னேற்றம் கண்டன. எமது முன்னோர் பேணிக்காத்த மனித நேயம், மக்கள் பண்பு, ஒற்றுமை, கலாச்சாரம் என்பன சீரழிக்கப்பட்டன. எவ்வாறாயினும் அந்நிலைகளிலிரந்து படிப்படியாக நீங்கி எமது நாட்டின் சுதந்திர தினத்தினை ஒரே தேசம் என்ற வகையில் கொண்டாவதற்குச் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. தமிழ், சிங்கள, முஸ்லிம் , பறங்கியர் என பேதமற்றவகையில், ஒரே கொடியின் கீழ் நாம் ஒன்றிணைந்திருக்கின்றோம்.
இன்று நாம் அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளுக்கு மத்தியில் சிறுவர் இளைஞர்களுக்கு இலவசக்கல்வியை வழங்குகின்ற, இலவச சுகாதாரத்தை வழங்குகின்ற நீண்ட ஆயுட் காலத்தைக் கொண்ட சுட்டிகளைக் காட்டுகின்ற நாடுகளுடன் ஒன்றிணைந்த வகையில் பெருமை கொள்ளலாம்.
மனிதன் சுதந்திரமானப்பிறக்கின்றார். ஆனால் வாழும்போது சங்கிலிகளால் பிணைக்கப்பட்டே காணப்படுகின்றான் என்ற ரூசோவின் கருத்துகமைய நாம் இன்று கூட பல விடயங்களுக்கு அடிமைப்பட்டவர்களாகவே காணப்படுகின்றோம். நாம் பெற்ற சுதந்திரத்தை முழுமையாக அனுபவிப்பதற்கு அவை தடையாக விளங்குகின்றன. போதைப்பொருள்களுக்கு அடிமையாதல், லஞ்சம், ஊழல் என்பவற்றால் எமது நாட்டு வளங்கள் பாழ் படுத்தப்படுதல் எமது சிறுவர்களையும் பெண்களையும் துஸ்பிரயோகம் செய்தல், மேலைத்தேய மோகத்தால் எமது உயர்வான கலாச்சாரத்தைச் சீரளித்தல், சுற்றங்களுக்குப் பாதிப்பினை ஏற்படுத்தல் நாம் பெற்ற சுதந்திரத்தை அஸ்தமனமாக்கிவிடலாம்.
அத்துடன், இந்த சுதந்திரத்தையும், நாட்டையும், எதிர்கால சந்தத்தியினருக்கு அவ்வாறே நம்மால் கையளிக்க முடியாமல் போகலாம். இன்றைய எமது அரசு இவற்றுக்கெதிராக பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. இத்திட்டங்களின் ஊடாக பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும் முற்படுகிறது. பொருளாதார முன்னேற்றம், உட்கட்டுமான அபிவிருத்தி, புதுப்பிக்கததக்க சக்தி வளங்களின் உருவாக்கம், கல்வி, சுகாதாரம், கைத்தொழில் சுற்றுலா என பல்வேறு துறைகளிலும் அரசு செயற்பட்டு வருகின்றது. இன்று கீழ் மத்திய வருமானம் கொண்ட நாடு என்ற நிலையில் நிலையில் இருந்து கீழ் உயர் மட்ட வருமானம் கொண்ட நாடாக மாறுவதற்கு எங்களுடைய அரசு முயற்சித்துக் கொண்டிருக்கிறது.
இச்சந்தர்ப்பத்தில் நாம் அனைவரும் ஒரே தேசம் என்ற எண்ணக்கருவுடன் ஒரே கொடியின் கீழ் எம்மைச் சூழ்ந்துள்ள எல்லாத் தடைகளையும் உடைத்தெறிந்தவர்களாக எமது தாய்நாட்டின் உயர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் பங்களிக்க திட சங்கல்ப்பம் கொள்ள வேண்டும். அப்போது தான் எமது தேசபிதாக்களின் தியாகத்துக்கும், தொடர்ந்து வந்த முன்னோடிகளின் முயற்சிகளுக்கும் நாட்டுக்குக்கிடைத்த சுதந்திரத்துக்கும் நாம் பெருமை சேர்க்க முடியும்.