படிப்போ பயிற்சியோ இல்லை. ‘பிளேற்’ரை வைத்து 500 பிரசவங்களைப்பார்த்த கண்ணகை!

0
1338

வயிரமுத்து துசாந்தன்

“1992 இல், ஒரு ‘பிளேற்’ரை மட்டும் வைத்து என் மகளுக்கு முதல்முறையாக பிரசவம் பாத்தன். அதுக்கு பிறகு 500 பிரசவங்கள் பாத்திற்றன். இதுவர குழந்தைக்கோ தாய்க்கோ எந்தவித ஆபத்தும் வந்ததில்லை.” கூறுகிறார். மட்டக்களப்பு மாவடிமுன்மாரி பகுதியைச் சேர்ந்த பிள்ளையான்தம்பி கண்ணகை. குறைந்த பட்சம் கிராமத்து மருத்துவிச்சியாகக்கூட அவர் பயிற்சி பெற்றதில்லை.
பிள்ளையான்தம்பி கண்ணகைக்கு தற்போது 71 வயது. தனது 13ஆவது வயதில் திருமணம் செய்த இவருக்கு குழந்தைப்பேறு என்பது பெரும் பயத்திற்குரிய ஒன்றாகவே இருந்துள்ளது. அந்தப் பயத்துடனேயே நான்கு பிள்ளைகளைப் பெற்றெடுத்த இவர், மிக இள வயதிலேயே கணவனையும் இழந்துள்ளார். “நோயினால் கணவனையும் இழந்த நான் 1990இல் இடம்பெற்ற கொடிய யுத்தத்தினால் எனது ஊரான துறைநீலாவணையிலிருந்து, கச்சக்கொடிசுவாமிமலை எனும் கிராமத்திலே பின் வாழ்ந்து பனிச்சையடிமுன்மாரி கிராமத்திற்கு இடம்பெயர்ந்தேன். அன்று அந்தக் கிராமமே இடம்பெயர்ந்தது. இன்றுவரை பனிச்சையடிமுன்மாரி கிராமத்தில்தான் வாழ்கிறேன்.” என்கிறார்.
இவருக்கு கல்வி என்பது தரம் இரண்டுடனேயே முடிந்துவிட்டது. ஒரு மகப்பேற்று வைத்திய நிபுணரைப்போல் 500 பிரசவங்களைப் பார்த்த இவர் மகப்பேற்றுக்கு முன் பின் என தாய் சேய் பராமரிப்பிலும் ஈடுபட்டு வந்துள்ளார்.
“முன்பெல்லாம் பிள்ளை பிறக்கும் வரை நிறைய வேலை செய்வார்கள் பெண்கள். குறிப்பாக உரலுக்குள் நெல்லை இட்டு உலக்கையால் நெல்குற்றல், உப்பட்டி அடித்தல், வீட்டில் குனிந்து நிமிர்ந்து அனைத்து வேலைகளையும் செய்வார்கள். இதனால் பிள்ளையும் இலகுவாக பிறக்கும். அவ்வாறு வேலைகள் செய்வதினால்தான் எந்தப்பிரச்சினையும் இல்லாமல் பிள்ளையும் பிறந்தது. இப்ப எல்லாருக்கும் வயித்த வெட்டி குழந்தையை எடுக்கிறாங்க.” என்று கவலை கொள்கிறார். போர் காலங்களில் வைத்திய வசதிகளற்ற நிலையில் இவர்தான் பலருக்கு மருத்துவிச்சியாக இருந்துள்ளார். பிற்பட்ட காலப்பகுதியில் ‘பிறேற்’ இல் இருந்து கத்திரிக்கோலுக்கு மாறியதையும் குறிப்பிடுகிறார்.
“2000ம் ஆண்டில நிறுவனமொன்று பிரசவம் பார்த்தல் தொடர்பான பயிற்சியொன்று தந்தவர்கள். பயிற்சி முடிவில கத்தரிக்கோல், இதயத் துடிப்பு பார்க்கும் கருவி போன்ற சில பொருட்களையும் தந்தாங்க. அதையும் வைச்சு நான் வைத்தியம் பார்தன். அதெல்லாம் கடைசி யுத்தத்தோட காணாமல் போயிற்று. அதுக்குப் பிறகும் நான் ‘பிளேற்’ தான் பாவிச்சன்.” என தொப்புள் கொடியை பிளேற்றால் வெட்டி பிரசவம் பார்த்ததை குறிப்பிட்டார்.
500 பிரசவங்களைப் பார்த்தாலும் இதை இவர் தொழிலாக பணத்திற்கு செய்யவில்லை. “என்னப்போல மற்றவர்களும் இத தொழிலா செய்யல, ஒரு சேவையாத்தான் செய்தநாங்க. ஆன ஒரு வீட்டுக்கு சென்றா அவங்க சிறு அன்பளிப்பு தருவாங்க. வீட்டுக்கு வந்து வாகனத்தில் ஏற்றித்து போவாங்க, முடிந்தவுடன் வாகனத்தில் ஏற்றிக்கொண்டும் விடுவாங்க.” என்று கூறிய இவரிடம் குழந்தைப்பேறு தொடர்பில் அவருக்கிருக்கும் அனுபவங்களைக்கேட்டோம்.

வயிற்றில் இருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என்று உங்களால் அறிந்துகொள்ள முடியுமாமே அது எப்படி? என்று கேட்க, “பிள்ளை வயிற்றில் உண்டாகி ஏழு மாதத்தில வயிற்ற பார்த்தே ஆண் பிள்ளையா? பெண்பிள்ளையா? என்று சொல்லுவம். வயிறு தட்டையாக இருந்தா பெண் பிள்ளையென்றும், வயிறு கூராக இருந்தா ஆண்பிள்ளை என்றும் சொல்லுவம். அதேபோல நிலத்தில் இருந்த நிறைமாதப் பெண் கையூன்றி எழும்புவதை கொண்டும் என்ன பிள்ளையென்றும் சொல்லுவம். வலது கையூன்றி எழும்பினா ஆண் பிள்ளை, இடது கையூன்றி எழும்பினா பெண் பிள்ளை என்றும் சொல்லுவம்.” என மிக சரளமாக கூறுகிறார். தூயின் வயிற்றில் கரு உண்டாகி இருப்பதை தாயின் கைநாடித்துடிப்பை வைத்துக் கூறும் இவர், குழந்தை எப்போது பிறக்கும் என்பதையும் கணக்கிட்டுக் கூறுவாராம். ஆண் பிள்ளையா பெண்பிள்ளையா என்று கண்டறிந்த பின் பெண்பிள்ளை எப்போதும் 09மாதம் 09நாளில் பிறக்கும், ஆண்பிள்ளை 10மாதத்திலும் பிறக்கும், சிலநேரம் 11மாதத்திலும் பிறக்கும். என்ற கணக்கைச் சொல்வார்களாம்.
இது மட்டுமல்லாமல் தாய்சேய் பராமரிப்பில் இயற்கை வைத்திய முறைகளைக் கையாள்கிறார். இந்த வைத்திய முறைகளை இவர் எங்கும் வரன்முறையாகக் கற்றதில்லை, அனுபவத்தினூடகவே செய்துவந்துள்ளார்.
“பிள்ளை பிறப்பதற்கு முதல் பிள்ளை இலகுவாக பிறக்கிறத்துக்காக ‘கருமாரி குளிசை’ கொடுப்பம். இது நாட்டு வைத்தியர்கள் செய்து வைத்திருப்பாங்க. அவங்கிட்ட வாங்கி கொடுப்பம். குழந்தை பிறந்ததன் பின் வருகின்ற சுவாதநோய் வராமல் இருக்க, பிள்ளை பிறந்ததில் இருந்து 12நாள் வரைக்கும் தாய்க்கு ‘சுவாதபொடி’ மருந்து கொடுப்பம். அதேபோல ‘சட்டிக்காயம்’ என்ற மருந்தும் தேனோடு கலந்து குழந்தை பிறந்தது இருந்து 12நாள்வரை தாய்க்கு கொடுப்போம். அதேபோல கொச்சிக்காய், கொத்தமல்லி, பெருஞ்சீரகம், சின்னசீரகம், ஓமம், மிளகு, மஞ்சள் எல்லாவற்றையும் இடித்து தூளாக்கி வெள்ளவெங்காயம் இட்டு அரைத்து “மிளகு தண்ணீர்” என்ற பெயரில் 12நாளைக்கு கொடுப்பம். இவை எல்லாமே தாய்கு பிள்ளைப்பேற்றால் வந்த உள்புண்கள் ஆறவும் பால் சுரக்கவும், குழந்தைக்கான நோய் எதிர்ப்பு சக்திக்காகவும் கொடுக்கப்படுகிறது.” என்கிறார் இந்த மருத்துவிச்சி.
‘பிள்ளை பிறந்து 12நாளில் தாய் வீட்டு வேலைகளைச் செய்ய ஆரம்பிக்கணும்’ என்று கூறும் கண்ணகை இப்போதெல்லாம் பிரசவம் பார்ப்பதை நிறுத்திவிட்டார். இப்போதெல்லாம் பிரசவத்தில் தாய்க்கும் பிள்ளளைக்கும் பிரச்சினைகள் அதிகம், அதோட இப்ப எனக்கும் கண் தெரியிறதும் குறைவா போயிற்று அதனாலையும், வைத்தியசாலைகள் வந்ததாலையும் நான் பிரசவம் பார்க்கிறதில்ல.” என்கிறார் கண்ணகை.