96 பேரும் தன்னுடன் வாருங்கள் நாளைக்கென்றாலும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு தயாராக உள்ளேன்.

0
735

2015 ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையிலான ஐக்கிய மக்கள் சுத்திரக் கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் 96 பேரும் தன்னுடன் ஒரே அணியில் இருப்பார்களேயானால் நாளைக்கென்றாலும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு தயாராக உள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்தை அமைப்பதாயின் ஒன்றிணையத் தயார் என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு பிரிவினர் வேறு கட்சி ஒன்றை அமைத்துக்கொண்டு கூறி வரும் விடயங்கள் பற்றி குறிப்பிட்ட ஜனாதிபதி, அக்கட்சியை கைவிட்டு ஸ்ரீ லங்கா சதந்திரக் கட்சியுடன் ஒன்றிணைய முன் வருமாறு தான் அவர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுப்பதாக தெரிவித்தார்.

இன்று (27) பிற்பகல் இரத்தினபுரி பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

தனது உடலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் இரத்தமும் ஊழல் மோசடி மற்றும் குடும்ப ஆதிக்கத்திற்கு எதிரான இரத்தமுமே இருப்பதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

இன்று நான் நடவடிக்கை எடுத்து வருவது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அல்லது ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிராக அல்ல ஊழல் மோசடிக்கும் குடும்ப ஆதிக்கத்திற்கும் எதிராகவேயாகும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

ஸ்ரீ லங்கன் விமான சேவை மற்றும் மிஹின் எயார் விமான சேவை ஆகியவற்றில் இடம்பெற்ற ஊழல் மோசடி குறித்து கண்டறிவதற்கு புதிய ஆணைக்குழுவொன்றை அடுத்த வாரம் வர்த்தமானி மூலம் அறிவிக்க இருப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

குற்றமிழைப்பவர்களுக்கு தண்டனை பெற்றுக்கொடுப்பதைப்போன்று மனிதர்களினால் தவறு ஏற்படாத வகையில் நிறுவனக் கட்டமைப்பை ஏற்படுத்துவது தனது நோக்கமாகுமென குறிப்பிட்ட ஜனாதிபதி, இதற்காக எதிர்வரும் பெப்ரவரி 10 ஆம் திகதி இடம்பெறும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை பலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் குறிப்பிட்டார்.

இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிடும் அபேட்சகர்களின் வெற்றியை உறுதிப்படுத்துவதற்காக ஜனாதிபதி அவர்களின் தலைமையில் நாடளாவிய ரீதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் மக்கள் சந்திப்பு தொடரில் இரத்தினபுரி மாவட்ட மக்கள் சந்திப்பு பெரும் எண்ணிக்கையான மக்களின் பங்குபற்றுதலுடன் இன்று இடம்பெற்றது.

நீண்டகாலமாக ஐக்கிய தேசியக் கட்சியில் முன்னின்று செயற்பட்ட இரத்தினபுரி மாவட்ட பிரதேச அரசியல் தலைவர்கள், தொழில்வல்லுனர்கள், சமூக சேவையாளர்கள், இளைஞர் கழக தலைவர்கள், ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் நிகழ்ச்சித்திட்டங்களுக்கு  ஆதரவு தெரிவித்து ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து கொண்டனர்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் அமைச்சர் ஜோன் செனவிரத்ன, எஸ்.பி.திசாநாயக்க, பியசிறி விஜேநாயக்க, வீரகுமார திசாநாயக்க, அனுருத்த பொல்கம்பொல ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்