தை 28, கொக்கட்டிச்சோலை படுகொலை நாள்

0
1024

இலங்கை நாட்டின் தமிழ் பகுதிகளில் இரத்த கறை படிந்த நாட்களின் நினைவுகளை இன்றும் அம்மக்கள் மறக்கவில்லையென்பதனை வருடாந்தம் நடைபெறும் படுகொலை நினைவு தினங்கள் வெளிப்படுத்தி நிற்கின்றன. மட்டக்களப்பு மாவட்டத்தின் நகரின் தெற்கே அமைந்துள்ள பெரும்நிலப் பகுதியாக கொக்கட்டிச்சோலை பகுதி உள்ளது. இங்குதான் கொக்கட்டி மரத்திலிருந்து குருதி பாய்ந்தது. அந்த இடத்தில்தான் லிங்கம் வெளிப்பட்டது. அவ்வாறு வெளிப்பட்ட இடம்தான் கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரமாக புகழ்பெற்றுள்ளது. அதே மண்ணில்தான், 1987ம் ஆண்டு தை மாதம் 28ம் திகதி மனித இரத்தக்கறை ஓடியதாகவும், கொக்கட்டிச்சோலை பிரதேசமே கண்ணீரால் நனைந்தாகவும் கூறப்படுகின்றது.

மகிழடித்தீவு சந்திக்கு அண்மையில் நிறுவப்பட்டிருந்த இறால்பண்ணையில், இப்பகுதியினைச் சேர்ந்த மக்கள் பலர் தொழில்புரிந்திருக்கின்றனர். இவ்வாறு பழமைபோன்று வேலைக்காக காலைப்பொழுதில் சென்ற 1987 தை 28ல், வழமைக்கு மாறாக வெடிச்சத்தங்கள் கேட்டிருக்கின்றன. இதனால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். தம்பகுதிக்கு இராணுவத்தினர் வந்ததினை அவதானித்த அப்பகுதி மக்களும், இறால்பண்ணைக்கு வேலைக்கு சென்றதுடன், வெள்ளைக்காரனின் பண்ணையென்பதினால் பாதுகாப்பு கிடைக்கும் என்ற எண்ணத்திலும் பண்ணையில் அம்மக்கள் தஞ்சம்புகுந்துள்ளனர். ஆனால், அவர்களின் எண்ணம் நிறைவாகவில்லை. பண்ணையிலே வேலை செய்தவர்களும், பண்ணையினை சுற்றியுள்ள பகுதியிலிருந்த ஆண்களும் அழைக்கப்பட்டு மகிழடித்தீவு சந்தியிலே வைத்து சுட்டுபடுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

கொக்கட்டிச்சோலை படுகொலை என அழைக்கப்படும், இப்படுகொலையில் 80க்கு மேற்பட்டவர்களின் உயிர்கள் பறிறெடுக்கப்பட்டுள்ளன. இச்சம்பவத்தில் அகப்பட்டு உயிர்தப்பிய ஒருசிலரும் இன்றும் மனவிரக்தியுடன், நினைவினை மீட்டிப்பார்த்து வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இவ்வாறான படுகொலையில் அகப்பட்டவர்கள் முதலைக்குடா, முனைக்காடு, மகிழடித்தீவு, அம்பிளாந்துறை போன்ற பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கதொன்று.

படுகொலையினால், பிரதேசமே சோகமானதுடன், அன்றைய கரிநாள் உருவாக்கிய வடுவாக இன்றும் விதவைகளாக பல பெண்கள் மண்ணிலே வாழ்ந்துகொண்டிருப்பதேயாகும். கொல்லப்பட்டவர்களின் உடலங்கங்கள் எங்கு புதைக்கப்பட்டதென்பது தெரியாமலே கொல்லப்பட்டுள்ளவர்களின் உறவுகள் வாழ்ந்துகொண்டிருக்கின்ற நிலையில், இவர்களின் நினைவாக மகிழடித்தீவு பிரதான சந்தியில் 2002ம் ஆண்டு நினைவு தூபி அமைக்கப்பட்டது. இந்நினைவுதூபி இப்பகுதியில் நடைபெற்ற யுத்தம் காரணமாக 2007ம் ஆண்டு வஞ்சிக்கப்பட்டு, 2017ம் ஆண்டு மீண்டும் புனரமைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.