13 ஆண்டு கடந்தும் சுகிர்தராஜனின் படுகொலைக்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்படவில்லை – கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியம்

0
479

ஊடக தர்மத்தை காப்பாற்றுவதற்காக, உண்மையை உலகிற்கு கொண்டு சென்றதால் படுகொலை செய்யப்பட்ட திருகோணமலை ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் 13 ஆவது ஆண்டிலும் அவரது படுகொலைக்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்படவில்லையென கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

கடந்த 2006ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 24ம் திகதி திருகோணமலையில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்ட சுப்பிரமணியம் சுகிர்தராஜனின் படுகொலை தொடர்பிலும் நினைவு தினத்தையொட்டியும் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே கிழக்கு மாகாண ஊடக வியலாளர் ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கையியேலே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தமிழ் சமூகத்தின் ஊடகப்போராளியாக செயற்பட்ட சுகிர்தராஜனின் இழப்புக் குறித்த செய்திகள் அப்போது ஏற்பட்ட கடுமையான யுத்த சூழ்நிலை காரணமாக பெரிதாக கவனம்செலுத்தப்படவில்லை என்பதோடு பின்நாட்களில் அதுகுறித்து கவனம் செலுத்தப்படாமல் போனமையானது வேதனையானதே. இது இப்போதும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

மிதுசா(17), சதுர்சன்(15) என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையான சுகிர்தராஜன் தனது குடும்பத்தின் எதிர்காலத்திற்காக எதையுமே சேர்த்துவைக்கவில்லை. ஊடகத்துறையில் பணியாற்றி உயிர்நீர்த்த பல ஊடகவியலாளர்கள் குடும்பங்கள் இன்றும் பல்வேறு துன்பங்களை சுமந்துகொண்டே வாழ்கின்றனர் என்பது அனைவரும் அறிந்ததே.

இந்த வகையில் தனது 36 வயதில் இன்னும் பல சாதனைகளை புரியவேண்டிய தருணத்தில் தனது சின்னஞ்சிறு குழந்தைகள் இரண்டையும் இளவயது மனைவியையும் விட்டு சுகிர்தராஜன் இந்த மண்ணைவிட்டு பிரிந்து சென்ற துயரம் அந்தக் குடும்பத்தை இன்னும் வாட்டிவதைத்துக்கொண்டே இருக்கின்றது. மேலும், 13 வருடங்கள் கடந்தாலும் சுகிர்தராஜனின் இழப்பு தமிழ் ஊடகசமூகத்திற்கு மட்டுமல்ல அவரின் குடும்பத்திற்கும் பேரிழப்பாகும்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் குருமண்வெளியில் பிறந்து அம்பாறை மாவட்டத்தின் வீரமுனயை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சுப்பிரமணியம் சுகிர்தராஜன் தொழில் நிமிர்த்தமாக திருமலையில் தங்கியிருந்த நேரத்தில் கடந்த 2006ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 24ம் திகதி இனம் தெரியாத நபர்களினால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

துறைமுக அதிகாரசபையின் ஊழியராகக் கடமையாற்றிக் கொண்டிருந்த சுகிர்தராஜன் திருகோணமலையில் இருந்து சுடரொளி, உதயன் ஆகிய பத்திரிகைகளின் திருகோணமலை நிருபராகக் கடமையாற்றிய சுகிர்தராஜன் வீரகேசரி, மெற்ரோ நியூஸ் ஆகியவற்றில் செய்திகளையும், அரசியல் கட்டுரைகளையும் எழுதிவந்தார்.

வீரகேசரியில் எஸ்.எஸ்.ஆர், மனோ, ரஹ்மான் ஆகிய பெயர்களிலும் மெற்ரோ நியூஸ் பத்திரிகையில் ஈழவன் என்ற பெயரிலும் அரசியல் விடயங்களை எழுதி வந்தார்.

இந்த நிலையில் கடந்த 2006 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் திருகோணமலையில் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியிருந்த ஐந்து மாணவர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டியிருந்தார் ஊடகவியலாளர் சுகிர்தராஜன்.

அன்று இருந்த பொலிஸ் அதிகாரிகள் குறித்த ஐந்து மாணவர்களின் இறப்புக்கு கைக்குண்டு தாக்குதலே காரணம் எனக் கூறி விசாரணையை திசைதிருப்ப முயற்சி செய்த நேரத்தில் ஊடகவியலாளர் சுகிர்தராஜன் மிகவும் துணிச்சலுடன் செயற்பட்டு சுட்டுகொல்லப்பட்ட மாணவர்களின் சூட்டுக்காயங்களை நுட்பமாக புகைப்படமெடுத்து குறித்த மாணவர்கள் தலையில் துப்பாக்கியால் சுடப்பட்டே இறந்துள்ளனர். அவர்களின் தலையில் உள்ள காயங்கள் கைக்குண்டு தாக்குதலால் ஏற்பட்டவை அல்ல அது துப்பாக்கி குண்டுகளால் ஏற்படுத்தப்பட்டவை என்பதை உலகிற்கு வெளிக்காட்டியிருந்தார்.

சுகிர்தராஜனின் குறித்த செய்தி அரசாங்கத்திற்கு சர்வதேச ரீதியில் பாரிய அழுத்தத்தை கொடுத்ததுடன் அது ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணைக்கும் உள்வாங்கப்பட்டிருந்தது. இந்த செய்தியே அன்று சுகிர்தராஜன் சுட்டுக்கொல்லப்படக் காரணமாக அமைந்திருந்தது என கூறப்படுகிறது.

நடந்தவைகளை மறைத்து வைத்துக் கொண்டே குற்றவாளிகளைப்பாதுகாப்பது எந்தவகையில் நியாயம் என்பதுவே இப்போதைய கேள்வி. நல்லாட்சி அரசாங்கம் சர்வதேசத்தின் பார்வையில் சிறந்ததொரு செயற்பாட்டாளராகக் காண்பிக்க வெண்டுமெனில் சுகிர்தராஜன் மாத்திரமல்ல இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களள் அனைவரதும் படுகொலைகள் குறித்து விசாரணைகளை நடத்தி விரைந்த தீர்வாக குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டும்.

24.012018