இந்திய வீட்டுத்திட்டத்தின் 3ஆவது கட்டம் இந்திய வெளிவிவகார அமைச்சினாரால் மட்டக்களப்பில் அங்குரார்ப்பணம்.

0
560

மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான 3ஆவது கட்ட இந்திய வீட்டுத்திட்டம் வெள்ளிக்கிழமை மாலை மட்டக்களப்பு வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கரடிப்பூவல் கிராமத்தில் இந்திய வெளிவிவகார அமைச்சின் மேலதிக செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் செய்திருந்த இந்திய அதிகாரிகள் குழுவினர் தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் மாதிரிக் கிராமத்திட்டத்தினைப் பார்வையிட்டனர். அதனையடுத்து மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான மாணிக்கம் உதயகுமார் தலைமையில் நடைபெற்ற இந்திய வீட்டுத்திட்டம் தொடர்பான கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
அதனையடுத்து 3ஆவது கட்ட இந்திய வீட்டுத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் பிரதேச செயலாளர் பிரிவில் ஒன்றான வவுணதீவுப் பிரதேசத்திற்கு விஜயம் செய்து வீடுகளுக்கு அடிக்கல் நட்டு வைத்தனர். அதனையடுத்து இந்திய சேவா நிறுவனத்தின் உதவியில் செயற்பட்டு வரும் சேவா பெண்கள் அமைப்பினரைச் சந்தித்தனர்.
இந்த இந்திய அதிகாரிகள் குழுவில், புதுடில்லியிலுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சின் மேலதிக செயலாளரும் நிதியியல் ஆலோசகருமான கலாநிதி சுமீத் ஜெராத் தலைமையில் அபிவிருத்தி மற்றும் கட்டுமானத் துறையின் ஆலோசகர் பங்கஸ் குமார் சிங், பதவி நிலைச் செயலாளர் கலாநிதி எம்.சிவகுரு, கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் அபிவிருத்திப்பிரிவு கவுன்சிலர் டி.சி.மஞ்சுநாத், பொருளாதார வர்த்தகப்பிரிவு முதல் செயலாளர் சுஜா மேனன் ஆகியோர் அடங்கியிருந்தனர்.
மாவட்ட செயலாளர் மாணிக்கம் உதயகுமார் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன், போரதீவு பற்று பிரதேச செயலாளர் செல்வி ஆர்.ராகுலநாயகி, மண்முனை மேற்கு பதில் பிரதேச செயலாளர் எஸ்.ராஜ்பாபு, மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் திருமதி தெடசணகௌரி தினேஸ், ஹபிராட் கியூமானிற்றியின் தேசிய பணிப்பாளர் எஸ்.மகேந்திரன், சிரேஸ்ட திட்ட முகாமையாளர் ருயான் மற்றும் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
இக் கூட்டத்தின் போது, தற்போது நடைபெற்று வரும் இந்திய வீட்டுத்திட்டத்தின் 2ஆவது கட்டமான 270 வீடுகளின் கட்டுமான வேலைகள் தொடர்பிலும், 3ஆவது கட்டத்தின் செயற்பாட்டு நிறைவுபடுத்தல் காலம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
அடிக்கல் நாட்டும் நிகழ்வில், மண்முனை மேற்கு பதில் பிரதேச செயலாளர் எஸ்.ராஜ்பாபு, மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன், உதவித்திட்டமிடல் பணிப்பாளர் ரி.நிர்மல்ராஜ், கிராம சேவையாளர்கள், மற்றும் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
அடிக்கல் நடப்பட்டதன் பின்னர், பயனாளிகளுடன் புதுடில்லியிலுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சின் மேலதிக செயலாளரும் நிதியியல் ஆலோசகருமான கலாநிதி சுமீத் ஜெராத் குழுவினர் கலந்துரையாடலையும் நடத்தினர்.
இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்ட 5000 இந்திய வீட்டுத்திட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 2871 வீடுகள் பூரணமாகவும் வெற்றிகரமாகவும் அமைக்கப்பட்டன. அதன் முழுமையான வெற்றியையடுத்து மேலதிகமாக 270 வீடுகள் இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்டன. அதனையடுத்து ஏனைய மாவட்டங்களுக்கு வழங்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படாது விடுபட்ட வீடுகளான 131 வீடுகளையும் மட்டக்களப்பு மாவட்டத்துக்கு வழங்குதல் என்ற அடிப்படையில் தற்போது 3ஆவது கட்டம் இந்திய வீட்டுத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.