ஆலயங்களுக்கு சொந்தமான விவசாய காணிகளில் பழமையைப்பேணி பயிர் செய்கை செய்ய வேண்டும்.

0
536

(படுவான் பாலகன்) மாடுகளை கொண்டு உழவு செய்து, மனிதர்களினால் சூடு வைத்து, மாட்டைக்கொண்டு சூடிமிதித்த காலம் மாறி, அறுவடை இயந்திரத்தினைக் கொண்டு அறுவடை செய்வதும், வீட்டுக்கு பணத்தினை கொண்டு வருவதுமே இன்றைய காலத்தில் நடைபெறுகின்றது, இவை மாற்றமடைந்து பழமைபோன்று விவசாயத்தினை மேற்கொண்டு அறுவடை செய்வதற்கேற்ற செயற்பாடுகளை ஆலயங்களிற்கு சொந்தமான விவசாய காணிகளில் மேற்கொள்ள வேண்டுமென மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் தெட்சணகௌரி தினேஸ் தெரிவித்தார்.

 
முனைக்காடு நாகசக்தி கலை மன்றத்தின் ஏற்பாட்டில், இன்று(15) திங்கட்கிழமை மாலை முனைக்காடு ஸ்ரீ நாகலிங்கேஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற பட்டிப்பொங்கல் விழாவில், கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இதனைக் குறிப்பிட்டார்.
இதன்போது, கோ பூசையும் அதனைத்தொடர்ந்து பட்டிக்காரர்கள் கௌரவிப்பும் நடைபெற்றன. மேலும் பழமையாக படுவான்கரைப்பிரதேசத்திலே வளர்க்கப்பட்டுவந்த மாட்டினங்கள், கோ பூசை, நாட்டு இன மாடுகளினால் கிடைத்த பயன்கள், பட்டிக்காரர்கள் தற்போது எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன. அத்துடன் நாட்டார் பாடல்களும் பாடப்பட்டன.
குறித்த பட்டிப்பொங்கல் நிகழ்வில், களியினால் சுவரும், ஓலையினால் கூரையும் வேயப்பட்ட வீடொன்றும் அமைக்கப்பட்டிருந்ததுடன், வீட்டு வாசலில் சிராம்பி, கலப்பை, வண்டிச்சில், மரைக்கால், வேலைக்காரன் கம்பு என பல விவசாயத்திற்காக பயன்படும் உபகரணங்களும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
கலை மன்றத்தின் தலைவர் ந.சுவாஸ்கரன் தலைமையில் நடைபெற்ற, இந்நிகழ்வில் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் தெட்சணகௌரி தினேஸ், கலாசார உத்தியோகத்தர் எஸ்.ருபேசன், கிராமசேவை உத்தியோகத்தர் இ.சாந்தலிங்கம், பட்டிக்காரர்கள், ஊர்பெரியார்கள், ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.
பிரதேச செயலாளர், இங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில், தற்போதுள்ள சிறுவர்களுக்கு எமது முன்னோர்கள் பாவித்த விவசாய உபகரணங்களைத்தெரியாது. விவசாய செய்கை முறைகளை தெரியாது, இதனால் இவற்றினை எமது இளம்சந்ததிகளுக்கு கடத்துவதற்காக எமது பிரதேசங்களிலே உள்ள ஆலயங்களாவது, தமக்கு சொந்தமான விவசாய காணிகளில் பழமையான விவசாய செய்கையினை, பழமையான விவசாய உபகரணங்களை கொண்டு மேற்கொள்ள வேண்டும். அதேவேளை தற்போது முதியவர்களாக இருக்கின்றவர்களும் தாம் அனுபவத்தில் கற்றுத்தேர்ந்த விடயங்களை இளம்சமூகத்தினருக்கு சொல்லிக்கொடுக்க வேண்டும் என்றார்.