இடைக்கால அறிக்கையை ஏற்றுக்கொண்டார்கள் என்பதனை பறைசாற்ற உள்ளுராட்சி தேர்தலை சில தமிழ்கட்சிகள் பயன்படுத்துகின்றன.

0
708

இலங்கை அரசாங்கத்திற்கு அருவருடிகளாக செயற்படுகின்ற சில தமிழ் கட்சிகள், நாங்கள் வாக்களித்தால், சர்வதேச ரீதியாகவும், தேசிய ரீதியாகவும், இடைக்கால அறிக்கையை மக்கள் ஏற்றுக்கொண்டார்கள் என்பதனை பறைசாற்ற காத்துக்கொண்டிருக்கின்றனர். என கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் இரா.துரைரெட்ணம் தெரிவித்தார்.
தமிழர் விடுதலைக் கூட்டணியின், கிளைக்காரியலமொன்றை இன்று(13) சனிக்கிழமை கொக்கட்டிச்சோலை பிரதான வீதியில், திறந்து வைத்ததன் பின்பு இதனைக் குறிப்பிட்டார்.
மண்முனை தென்மேற்கு பிரதேச சபைக்காக, தமிழர் விடுதலைக் கூட்டணியில், கொக்கட்டிச்சோலை வட்டாரத்தில் போட்டியிடும் பி.தேவநேசன் தலைமையில், நடைபெற்ற இந்நிகழ்வில், ஏனைய வட்டாரங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வேட்பாளர்களும், ஆதரவாளர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
இங்கு, தொடர்ந்தும் உரையாற்றிய மாகாணசபை உறுப்பினர்,
கடந்த காலங்களில் இந்தப்பிரதேசத்தில் பல கட்சிகள் போட்டியிட முடியாத நிலை இருந்தன. ஆனால் 2018ம் ஆண்டு உள்ளுராட்சி தேர்தலில் 12குழுக்கள் போட்டியிடுகின்றன. கடந்த காலங்களில் ஏனைய இனங்களை மாகாணசபையிலும், பாராளுமன்றத்திலும் இருக்க வைப்பதற்காக போட்டியிட்டு வெற்றிவாகையை தாரைவாரிக்கொடுத்த கட்சிகளும் இதில் போட்டியிடுகின்றன. தற்போதைய உள்ளுராட்சி தேர்தலை பொறுத்தவரை தமிழ்தேசிய கூட்டமைப்புக்கும் எமக்கும் ஏற்பட்ட கொள்கை ரீதியான முரண்பாட்டினால் பிரிந்து கேட்க வேண்டிய நிலைக்கு நிர்பந்திக்கப்பட்டோம்.
படுவான்கரையை பொறுத்தரையில் இதிலிருக்கின்ற ஒவ்வொரு குடும்பங்களும். கடந்த முப்பது, முப்பத்திரண்டு வருடங்களாக தமிழ் மக்களுக்கான போராட்டத்திற்கு உயிரை கொடுத்தவர்கள். உரிமையா? சலுகையா? என்ற அடிப்படையில் குறிப்பாக இந்த மண் படுவான்கரை மண், போராட்டங்களை வாழவைத்த மண். பல தியாகங்களை உருவாக்கிய மண், தியாக புருசர்களை உருவாக்கிய மண். நாங்கள் இந்த போராட்டத்தினை அடகு வைத்து, இடைக்கால அறிக்கையை ஏற்றுக்கொண்ட சக்திகளுக்கு வாக்களிக்கப் போகின்றோமா? அல்லது நாங்கள் செய்த தியாகம், நாங்கள் செய்த அர்ப்பணிப்பு, விடாமுயற்சியுடனான செயற்பாடுகள், மண்ணுக்கு உரமூட்டியவர்கள் என்ற அடிப்படையில், இடைக்கால அறிக்கையை ஏற்றுக் கொள்ளவில்லை எனக்கூறப்போகின்றோமா?. இன்றைய அரசியல் சூழலில், இலங்கை அரசாங்கத்திற்கு அருவருடிகளாக செயற்படுகின்ற சில தமிழ் கட்சிகள், நாங்கள் வாக்களித்தால், சர்வதேச ரீதியாகவும், தேசிய ரீதியாகவும், இடைக்கால அறிக்கையை மக்கள் ஏற்றுக்கொண்டார்கள் என்பதனை பறைசாற்ற காத்துக்கொண்டிருக்கின்றனர். விடுதலைக்காக உரமிட்ட இந்த மண் மக்கள், அவர்களுக்கு வாக்களிக்கப் போகின்றோமா? சலுகைகளை இந்த மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை, இடைக்கால அறிக்கையை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதனை நிருபிப்பதற்காக வாக்களிக்கப்போகின்றோமா? என்பதனை சிந்திக்க வேண்டும்.
தமிழ்தேசிய கூட்டமைப்புடன், இடைக்கால அறிக்கையை ஏற்றுக்கொள்ளவில்லை. சுய ஆட்சி அடிப்படையில், நிரந்தர தீர்வு தொடர்பில் இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடாத்தப்பட வேண்டுமென சுரேஸ் பிரேமசந்திரன் கூறியிருந்தார். இதனை செவிடன் காதில் ஊதிய சங்குபோன்று எடுத்துக்கொண்டு, இலங்கை அரசாங்கத்துடன் கூட்டுச்சேர்ந்து, பேசாமல் இருக்கின்ற கட்சிகள், விலைபோகின்ற கட்சிகள் இடைக்கால அறிக்கையை ஏற்றுக்கொண்டதாக வாக்களிக்க கூறுகின்றனர். என்றார்.