உணவுக்காக யானையுடன் போராடும் விவசாயிகள்

0
498

(படுவான் பாலகன்) மட்டக்களப்பு, படுவான்கரைப்பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள, பெரும்போக விவசாய செய்கையினை யானையிடமிருந்து காப்பாற்றுவதில் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக விவசாயிகள் கவலை வெளியிடுகின்றனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தின், உன்னிச்சை, கண்டியநாறு, தாந்தாமலை, பன்சேனை, வெல்லாவெளி போன்ற பகுதிகளில் உள்ள விவசாய செய்கையினை யானைகள் உண்டு வருவதினால் தமது தொழிலில் நஸ்டத்தினை எதிர்நோக்கும் நிலையேற்பட்டுள்தாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
தமது பயிர்களை, யானையிடமிருந்து காப்பாற்றுவதற்காக, இரவு வேளைகளில் கண்விழிந்திருந்து, மிகுந்த அச்சத்தின் மத்தியில் யானைகளை தமது பயிர்களுக்குள் விடாது, துரத்துகின்றபோதும் யானைகள் தம்மை விரட்டி பயிர்களை உண்டு செல்வதாக வேதனையுடன் விவசாயிகள் குறிப்பிட்டனர்.
விவசாய செய்கை ஆரம்பிக்கப்பட்டு, அறுவடைக்கு தயாராகி வருகின்ற நிலையிலேயே யானைகளின் தொல்லை அதிகரித்துள்ளதாகவும் விவசாயிகள் கூறுகின்றனர்.
கடந்த காலங்கில் யானையினால், பல்வேறு விவசாயிகள் பாதிக்கப்பட்டும், உயிரிழந்தும் உள்ள நிலையிலும், தமது உயிர் அச்சத்துடனையே தமது வாழ்வாதாரத்திற்காக விவசாயத்தினை மேற்கொண்டு வருவதாகவும் கூறினர். அரசாங்கத்தினால், யானையில் இருந்து பாதுகாப்பதற்காக மின் வேலிகள் அமைக்கப்பட்டும், அதனைக்கடந்தும் யானைகள் தமது பிரதேசத்திற்குள் உள்நுழைவதாகவும் குறிப்பிடும் விவசாயிகள், புதிய வருடத்திலாவது யானைகளிலிருந்து தம்மையும், விவசாய செய்கைகளையும் பாதுகாத்துக் கொள்வதற்கேற்ற வழிவகைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டுமெனவும் கூறினர்.