2018 ஆம் ஆண்டில் சர்வதேச தரத்திலான புதிய கடவுச்சீட்டு

0
702

புதிய கடவுச்சீட்டுக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக குடிவரவு குடியகழ்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் எம் என் ரணசிங்க தெரிவித்தார்.

இந்த கடவுச்சீட்டு சிவில் விமானசேவைகள் அமைப்பின் தரத்திற்கு அமைவாக சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் தயாரிப்பதற்காக அங்கீகாரத்தை அமைச்சரவை வழங்கியுள்ளது..
2018ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் விநியோகிக்கக்கூடியதாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார். புதிய கடவுச்சீட்டை அச்சிடுவதற்கு அமைச்சரவையினால் பியகம சுதந்திர வர்த்தக வலயத்தில் அமைந்துள்ள தோமஸ் ரிலாறு என்ற பிரிட்டிஷ் நிறுவனம் தெரிவுசெய்யப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்.
தற்பொழுது புதிய கடவுச்சீட்டை விநியோகிப்பதற்கான ஆரம்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதுதொடர்பான அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் அதனை அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படும். இதனைத்தொடர்ந்து அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்ட பின்னர் புதிய கடவுச்சீட்டை அச்சிடுவதற்கான பணி ஆரம்பிக்கப்படும் என்றும் திரு ரணசிங்க எமது செய்திப்பிரிவிற்கு தெரிவித்தார்.

கடவுச்சீட்டு தொடர்பான முக்கிய தகவல்கள்
வயது பேதம் இன்றி அனைத்து கடவுச்சீட்டு விண்ணப்பதாரர்களும் “K RV 35A”வடிவ விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டியது கட்டாயமாகும்.
16 வயதிற்கு மேற்பட்ட அனைத்து விண்ணப்பதாரர்களினதும் கைரேகை பிரதான அலுவலகம் மற்றும் கிளை அலுவலகங்களில் பெற்றுக் கொள்ளப்படுகின்றது.
வெளிநாட்டு தூதரகங்கள் ஊடாக கடவுச்சீட்டு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கை ரேகை மற்றும் டிஜிட்டல் புகைப்படம் வழங்காமல் கடவுச்சீட்டு பெற்றுக் கொள்ள முடியும்.
பெற்றோரின் கடவுச்சீட்டுக்காக பிள்ளைகளை அனுமதிப்பது இனிமேலும் செல்லுப்படியாகாது. பிள்ளைகளுக்காக தனியாக கடவுச்சீட்டு பெற்றுக் கொள்ள வேண்டும்.
60 வயதுக்கு குறைவான எந்தவொரு நபருக்கும் அவசர சான்றிதழ்கள் வெளியிடப்படாது.
கடவுச்சீட்டுக்கான புகைப்படங்களை திணைக்களத்திற்கு வழங்கும் முறை
திணைக்களத்தினால் அங்கீகரிக்கப்பட்ட புகைப்பட நிலையங்களில் உங்கள் புகைப்படத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.
உங்கள் புகைப்படங்கள், புகைப்பட நிலையங்கள் மூலம் எங்கள் திணைக்களத்தின் தரவுத்தளத்திற்கு அனுப்பப்படுகின்ற நிலையில், அங்கு ஒரு ரசீது உங்களுக்கு வழங்கப்படும். கடவுச்சீட்டு விண்ணப்பத்திற்கான அச்சிடப்பட்ட புகைப்படங்கள் தேவையில்லை.
இந்த ரசீது, கடவுச்சீட்டு விண்ணப்பம் மற்றும் பிற தேவையான ஆவணங்களுடன் திணைக்களத்தின் தலைமை அலுவலகம் அல்லது கிளை அலுவலகத்திற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
இது தொடர்பான மேலதிக தகவல்களை பெற்றுகொள்வதற்கு 1962 அல்லது 011 532 9200 / 001 532 9175 என்ற இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ள முடியும்.
இலங்கையின் குடிமக்கள் எவரும் கடவுச்சீட்டினை பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.