தவறான தகவல்களை தமிழ் மக்களிடம் கூறி அரசியல் நடத்த வேண்டாம்.

0
645

தவறான தகவல்களை தமிழ் மக்களிடம் கூறி அரசியல் பிழைப்பு நடத்த வேண்டாமென, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் திரு. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களை, தமிழர் விடுதலைக் கூட்டணி கேட்டுக்கொள்கின்றது. பிற கட்சிகளை விமர்சனம் செய்யும் போது கொஞ்சமாவது வரலாறு அல்லது அக்கட்சியின் நிகழ்வுகளை தெரிந்து கொண்டு விமர்சனம் செய்ய வேண்டும். அரசியல் காழ்ப்புணர்ச்சிக்காக அப்பட்டமான பொய்களை அவிழ்த்துவிடக் கூடாது.
தமிழர் விடுதலைக் கூட்டணி வருடாந்தம் நடாத்தும் ஒவ்வொரு மாநாட்டிலும் ஒற்றையாட்சி மூலம் இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண முடியாது, என்பதனை ஒரு தீர்மானமாக எடுத்து வலியுறுத்தி வந்துள்ளது. அதுமட்டுமல்லாது இனப்பிரச்சினை தீர்விற்கு இந்திய அரசியலமைப்பிற்கு ஒத்த ஒரு முறைமையையே வலியுறுத்தி ஒவ்வொரு மாநாட்டிலும் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இது சம்மந்தமாக பல தரப்பினருடன் விடுதலைப் புலிகளின் காலத்திலேயே, பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வந்தது. இவைகள் அனைத்தும் அந்த காலகட்டத்தில் பல ஊடகங்களில் செய்திகளாக வெளி வந்துள்ளன.
எல்லாவற்றிற்கும் மேலாக யுத்தம் நடந்தால், மக்களும் விடுதலைப் புலிகளும் அழிவை சந்திக்க நேரிடும் எனவும், பேச்சுவார்த்தையில் ஈடுபடுமாறும் விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் பல கடிதங்களை எழுதி கேட்டுக்கொண்டோம். ஆனால் சம்மந்தப்பட்ட தரப்பினர் எவரும் எமது கோரிக்கைகளுக்கு செவிசாய்க்கவில்லை. மாறாக 40,000 சவப்பெட்டிகளை வடக்கில் இருந்து அனுப்புவோம் என பாராளுமன்றத்திலேயே வீர வசனம் பேசி விடுதலைப் புலிகளை தூண்டிவிட்டு, பின்னர் யுத்தம் மூண்டவுடன் தங்களது தொலைபேசி அழைப்புகளைக் கூட தற்காலிகமாக செயலிழக்க செய்துவிட்டு, இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் பதுங்கிக் கொண்டனர். முள்ளிவாய்க்காலில் சிக்கிக் கொண்ட மக்களைக் காப்பாற்றுமாறு சகல தரப்பினருக்கும் நாம் வேண்டுகோள் விடுத்தோம். தங்கள் நெஞ்சை தொட்டு சொல்லட்டும், இவர்கள் நினைத்திருந்தால் நிச்சயமாக அந்த மக்களை காப்பாற்றி இருக்க முடியாதா?
யுத்தம் முடியும் வரை எங்கிருந்தார்கள், என்ன செயதார்கள் என்பது யாருக்கும் தெரியாத ரகசியம். இப்படிப்பட்ட அரசியல் செய்து தமிழ் மக்களை முள்ளிவாய்க்கால் கொலைக் களத்திற்கு அழைத்துச் சென்ற கஜேந்திரகுமார் குழுவினர், கொள்கைகளையும் இலட்சியங்களையும் பற்றி பேசுவது வேடிக்கையாக உள்ளது. தவறுகளை உணர்ந்து, சரித்திரங்களை தெரிந்து கொண்டு, கடந்தகால அனுபவங்களை ஒரு பாடமாக ஏற்றுக் கொண்டு, தமிழ் மக்களின் அபிலாசைகளையும், எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்ய எங்களுடன் இணைந்து, தன்னலம் கருதாது செயற்படவருமாறு அன்புடன் அழைக்கின்றோம்.