த.தே.கூட்டமைப்பு பிளவின் எதிரொலியாக கல்முனைத்தமிழர்கள் சனியன்று கூடுவர்! அம்பாறை மாவட்ட தமிழரின் சிந்தனையில் மாற்றம்!

0
714
தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பிளவு காரணமாக கல்முனைத்தமிழ்மக்கள் எதிர்வரும் சனிக்கிழமையன்று ஒன்றுகூடி ஒரு அணியில் போட்டியிடுவது குறித்து தீர்மானிக்கவுள்ளனர்.
அம்பாறை மாவட்ட தமிழர் மகா சங்கம் இவ்ஏற்பாட்டை மேற்கொண்டுவருகிறது.
கல்முனை மாநகரச சபைக்கு கல்முனைத்தமிழ்மக்கள் சார்பில் ஒரேயொரு அணியை களமிறக்குவது தொடர்பாகவே இக்கூட்டம் கல்முனையில் மகாசங்கத்தலைவர் கே.சந்திரலிங்கம்(முன்னாள் அதிபர்)  தலைமையில் நடைபெறவுள்ளது.
இக்கூட்டத்திற்கு கல்முனை மாகரசபைக்குட்பட்ட சகல தமிழ்க்கிராமங்களையும் சேர்ந்த பொதுஅமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் சகல அரசியற்கட்சிகளின் பிரதிநிதகளையும் அழைக்கவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
சகல கட்சிகளும் சகல அமைப்புகளும் சேர்ந்து ஒரு அணியில் போட்டியிட்டு தமது தமிழ்ப்பிரதிநிதித்துவங்களைக் காப்பாற்றுவது குறித்து கலந்துரையாடப்படவிருக்கிறது.
கல்முனைத்தமிழ்மக்களைப் பொறுத்தவரை இம்முறை தேர்தல் முக்கியத்தவம் வாய்ந்ததாகவுள்ளதால் அவர்கள் இவ்ஏற்பாட்டைச்செய்துள்ளதாக ரெலோ அமைப்பின் உபதலைவர் ஹென்றி மகேந்திரன் தெரிவித்தார்.
இதற்கு முதல் அம்பாறை மாவட்டத்தில் பழம்பெரும் பிரதானகிராமமான வித்தகன் பிறந்த காரைதீவு மண் இத்தகைய தீர்மானமொன்றை நிறைவேற்றி வரலாறு படைத்துள்ளது. அது அந்த மக்களின் சமகால களநிலைவரத்தின் எதிரொலியாக தமது இருப்பைக்காப்பாற்ற எடுத்த தீர்க்கதரிசனமான தீர்மானமாகும். அது நியாயமானது. அவர்களது தீர்மானத்திற்கு எமது கட்சி குறுக்கே நிற்காது.
இனிவரும் நாட்களில் அதேபாணியில் திருக்கோவில் ஆலையடிவேம்பு நாவிதன்வெளிப்பிரதேச மக்களும் இவ்வாறான முயற்சியீலீடுபடலாமென எதிர்பார்க்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
தேசிய மற்றும் தமிழ்க்கட்சிகளின் அசமந்தப் போக்கினால் அம்பாறை மாவட்டத் தமிழ் மக்களின் சிந்தனைப்போக்கில் மாற்றமேற்பட்டுவருவதை அவதானிக்கக்ககூடியதாயுள்ளது.
பொதுவாக கட்சிகள் அம்பாறைமாவட்டத் தமிழர்களை புறந்தள்ளி அல்லது கணக்கெடுக்காது நடாத்துவதும் தேர்தல்காலத்தில் மட்டும் முகாமிடுவதும் கிராமங்களுள் நடமாடுவதும் மக்கள் மத்தியில் சலிப்பையும் வெறுப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
தேர்தல் என்றால் மட்டுமே மக்களைத்திரும்பிப்பார்ப்பது என்ற சித்தாந்தம் இனி தமிழ்மக்கள் மத்தியில் அரங்கேறாது என்பதற்கு இச்சிந்தனை மாற்றம் பிரதிபலிக்கின்றது.