மாவட்டத்தில் முதலிடத்தினைப் பெற்ற வேலைத்திட்டத்தினை தேசியமட்ட குழு பார்வை.

0
881

(படுவான் பாலகன்) “துருணு சிரம சக்தி” ஊருக்கு ஒரு கோடி வேலைத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலிடத்தினைப்பெற்ற, மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட அம்பிளாந்துறையில் அமைக்கப்பட்ட அரங்கினை தேசியமட்ட குழு இன்று(02) சனிக்கிழமை பார்வையிட்டனர்.
அம்பிளாந்துறை பாரதி இளைஞர் கழகத்தினால், பிரதேச இளைஞர் சேவை உத்தியோகத்தர் அ.தயாசீலன் வழிகாட்டலில் மேற்கொள்ளப்பட்ட, விளையாட்டு மைதானத்திற்கு அரங்கு அமைத்தல் வேலைத்திட்டம் மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலிடத்தினைப் பெற்று தேசிய மட்டத்திற்கு தெரிவாகியுள்ளது. இதனை பார்வையிட்டு தேசிய மட்டத்திற்கான இடத்தினை தெரிவு செய்யும் பொருட்டு, தேசிய இளைஞர் சேவை மன்ற பணிப்பாளர் ஜெகத் அதிகாரி, மாகாண பணிப்பாளர் சிசிர குமார, மாவட்ட உதவிப்பணிப்பாளர் எஸ்.அமீர் உள்ளிட்ட குழுவினர் அரங்கினை பார்வையிட்டதுடன், இது தொடர்பிலான ஆவணங்களையும் பரீசிலனை செய்ததுடன், இளைஞர் கழக நிருவாக அங்கத்தவர்களுடனும் உரையாடினர்.
துருணு சிரம சக்தி வேலைத்திட்டத்தின் கீழ், அம்பிளாந்துறை பாரதி இளைஞர் கழகத்திற்கு ஒருஇலட்சத்து ஐம்பதினாயிரம் ரூபாய் பணம் தேசிய இளைஞர் சேவை மன்றத்தினால் வழங்கப்பட்டிருந்தது. அப்பணத்துடனும் கிராம மக்களின் பங்களிப்புடனும் பத்து இலட்சத்து 35ஆயிரம் ரூபாய் செலவில் விளையாட்டு மைதானத்திற்கான அரங்கினை, அம்பிளாந்துறை பாரதி இளைஞர் கழகத்தினர் அமைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.