சமூகப்பணிக்காக மாணிக்கப்போடி அறக்கட்டளை அங்குராப்பணம்

0
1038

(படுவான் பாலகன்) மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்வியில் முன்னேறுவதற்கு உதவிவேண்டி நிற்கும் மாணவர்களுக்கு உதவி செய்யும் நோக்கில் மாணிக்கப்போடி அறக்கட்டளை எனும் அமைப்பு இன்று(01) வெள்ளிக்கிழமை அங்குராப்பணம் செய்து வைக்கப்பட்டது.
முனைக்காடு, உக்டா சமூகவள நிலையத்தில், இவ்வமைப்பின் ஸ்தாபகர் மா.குமாரசாமி தலைமையில் நடைபெற்ற அங்குராப்பண நிகழ்வில், அமைப்பின் சின்னத்தினை பிரதம அதிதியாக கலந்து கொண்டிருந்த மாணிக்கப்போடி குடும்பத்தின் இளைய குடும்ப உறுப்பினரான அன்னாரது பேரன் றஜீவ் என்ற சிறுவன் திறந்து வைத்தார்.
இவ்வமைப்பானது முனைக்காடு கிராமத்தில் வசித்த மாணிக்கப்போடி என்பவரது ஞாபகார்த்தமாக அன்னாரது குடும்பத்தினரால் ஆரம்பிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
அங்குராப்பண நிகழ்வின் போது, பல்கலைக்கழகத்திற்காக தெரிவு செய்யப்பட்ட மாணவர் ஒருவருக்கு மாதாந்த கொடுப்பனவும், ஆங்கில கற்கைநெறிக்காக சிறுதொகைப்பணமும், முனைக்காடு விவேகானந்த வித்தியாலத்திற்கு கற்பித்தல் உபகரணமும், கடல்கடந்த முனையின் கரங்கள் அமைப்பிற்கு 50கதிரைகளும் வழங்கி வைக்கப்பட்டன. மேலும், தரம் 5புலமைப்பரிசில் பரீட்சையில் மாணவர்கள் சித்தியடைவதற்கு காரணமாகவிருந்து கற்பித்த முனைக்காடு பாடசாலைகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் மூவருக்கு நினைவுச்சின்னங்களும், வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில், கல்விசார் அதிகாரிகள், சமூகசேவையாளர்களும் கலந்து கொண்டிருந்தனர்.