எப்போது பட்டிருப்பு பாலம் நிர்மாணிக்கப்படும்.

0
775

(திலக்ஸ் ரெட்ணம்)   மட்டக்களப்பு மாவட்டத்தின் இருதுருவங்களான படுவான்கரையையும், எழுவாங்கரையையும் இணைக்கும் உறவுப்பாலங்களில் ஒன்றாக விளங்குகின்றது. இப்பாலம் பட்டிருப்பு தேர்தல் தொகுதியின் நாமத்தை தாங்கி நிற்கின்றது. இப்பாலம் கிட்டதட்ட 50 வருடங்களுக்கு மேற்பட்ட வரலாறைக் கொண்டதாக தெரியவருகின்றது. 1956 – 1960 வரையும் பட்டிருப்பு தொகுதி பாராளுமன்ற உறுப்பினராக இருந்த எஸ்.யு.எதிமன்னசிங்கம் அவர்களின் முயற்சியினால் இப்பாலம் அமையப்பெற்றதாக அறியக்கிடக்கிறன்றது.

 
தற்போது இப்பாலத்தின் நடுவே 20 மாதங்களுக்கு மேலாக ஒருபகுதிக்கு தடைகள் இட்டு வாகனங்கள் செல்லமுடியாத அளவு ஒருவழி பாதை போன்று உள்ளது. இதனால் இப்பாலத்தில் விபத்துக்கள் நடைபெறுவதற்கான வாய்ப்புக்களும் உள்ளது. கனரக வாகனங்கள் செல்லுகின்ற போது இப்பாலத்தின் பாதிக்கப்பட்ட பாலத்தின் அருகே நின்றால் பயங்கரமான அதிர்வு ஏற்படுவதை உணரக்கூடியதாக இருக்கின்றது.
இப்பாலம் படுவான்கரை மக்களையும் எழுவான்கரை மக்களையும் இணைக்கும் உறவுப்பாலமாக உள்ளது. படுவான்கரை அதாவது போரதீவுப்பற்று பிரதேசத்திற்கு செல்லுகின்ற அனைத்து மக்களும் இப்பாலத்தினால் பயணிக்கின்றனர். 1989ம் ஆண்டு காலப்பகுதியில் வன்செயலினால் இப்பாலம் உடைக்கப்பட்டது. மக்கள் தோணியின் மூலம் பயணம்செய்துள்ளனர். குண்டுவைத்து தகர்க்கப்பட்ட பகுதி மரத்தினால் புனரமைக்கப்பட்டு பின்னர் முற்றுமுழுதாக போடப்பட்டு விட்டது.
இலங்கையில் அபிவிருத்தி பணிகள் துரித கதியில் இடம்பெற்று கொண்டிருக்கின்றது.

 

யாரோ கஸ்டப்பட்டு கொண்டுவருகின்ற அபிவிருத்தி பணிகள் மற்றும் பாலங்களுக்கும் தங்களால் வருகின்றது என்று அரசியல் செய்து வாக்குவங்கியை நிரப்ப முண்டியடிக்கும் அரசியல்வாதிகள் உள்ள நிலையில் ஏன் இன்னமும் இப்பாலத்தை ஏறெடுத்தும் பார்க்காதுள்ளனர். இப்பாலத்திற்கான மதீப்பீட்டு அறிக்கை சம்பந்தப்பட்ட அலுவலகங்களுக்கு மாவட்ட செயலகம் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் அனுப்பப்பட்டுள்ளது. இப்பாலத்திற்கான ஒதுக்கீடுகள் சரியானவுடன் ஏட்டிக்குப்போட்டியாக அமைச்சுக்களிற்கும், சம்பந்தப்பட்ட அலுவலகங்களுக்கும் ஏறிஇறங்குவார்கள். இதுதான் இடம்பெற்றது மண்டூர் – குறுமன்வெளி பால அடிக்கல் நாட்டு விழா. மிக விரைவில் உண்மை வெளிவரும்.
இப்பாலம் தொடர்பாக வீதி அபிவிருத்தி அதிகார சபை பிரதம பொறியிலாளரிடம் வினவியபோது, “இப்பாலத்திற்கான மதீப்பீட்டு அறிக்கை தயாரித்து அனுப்பப்பட்டுள்ளதாகவும், அதிகளவிலான நிதி தேவைப்படுகின்றது எனவும், இப்பாலம் கீழ்பகுதி சேதமடைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இப்பாலம் சம்பந்தமான சுவாரஸ்யமான தகவல் ஒன்று “இப்பாலத்தை பட்டிருப்பு தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.யு.எதிமன்னசிங்கம் கொண்டு வந்தார். 1960ம் ஆண்டு தேர்தலில் எதிமன்னசிஙகம் தோற்று சி.மூ.இராசமாணிக்கம் வெற்றி பெற்றார். இவருடைய காலப்பகுதியில் தான் இப்பாலம் திறக்கப்பட இருந்தது. இதனை ஏற்றுக்கொள்ள முடியாத எதிர்மன்னசிங்கம் திறக்கபடவிருந்த நாளில் தன்னுடைய காரில் இப்பாலத்தினூடாக சென்று வந்தார். முதலில் நான்தான் இப்பாலத்தினூடாக சென்றேன் எனும் தொனிப்பொருளின் செயற்பாடுதான் இது.
இப்பிரசித்தி பெற்ற பாலம் எப்போது நிர்மாணிக்கப்படும் என்றும், இதனால் ஆபத்துக்கள் ஏற்படுமோ? என்ற அச்சத்துடனுமே மக்கள் பயணிக்கின்றனர்.