இனக் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி: நாடு பிளவுபடுமென மஹிந்த தவறான பிரசாரம்

0
778

அதிகாரத்தை மீண்டும் கைப்பற்றுவதற்கு அரசியலமைப்பு தயாரிப்பை பயன்படுத்த வேண்டாம் என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவிடம் கோரிக்கை விடுத்தார்.

அரசியலமைப்பு தயாரிப்பை எதிர்ப்பதாயின் பாராளுமன்றத்தை அரசியலமைப்பு சபையாக மாற்றும் பிரேரணைக்கு எதிராக வாக்களித்திருக்க முடியும். மக்கள் மத்தியில் இனரீதியான குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தினார்.

2018ஆம் ஆண்டு வரவு- செலவுத்திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான இறுதிநாள் விவாதம் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே எதிர்க்கட்சித் தலைவர், முன்னாள் ஜனாதிபதியிடம் இந்தக் கோரிக்கையை முன்வைத்திருந்தார்.

“உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் நடைபெறவுள்ளன. அரசாங்கத்தைத் தோற்கடித்து தேர்தலில் வெல்லவேண்டியதேவை உங்களுக்கு உள்ளது. அது உங்களுடைய அரசியல் செயற்பாடு என்பதால் அது குறித்து எவரும் முறைப்பாடு செய்ய முடியாது. எனினும், இதனை அடைவதற்காக இனங்களுக்கிடையில் பதற்றமொன்றை ஏற்படுத்துவதற்கு முயற்சிக்கின்றீர்கள். இதனாலேயே அரசியலமைப்பு நாட்டை பிரிக்கும் என்ற பிரசாரத்தை முன்னெடுக்கின்றீர்கள். அரசியலமைப்பு தயாரிப்புக்கு எதிர்ப்புதெரிவிப்பதாயின், ஏன் பாராளுமன்றத்துக்கு வந்து பிரேரணைக்கு எதிராக வாக்களிக்கவில்லை” என்றும் கேள்வியெழுப்பினார்.

அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டுமாயின் வேறுவழிகளில் அதனைக் கைப்பற்றுங்கள். அதில் எமக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. அதிகாரத்துக்கு வருவதற்காக அரசியலமைப்பை ஒரு வழியாகப் பயன்படுத்த வேண்டாம் என்றார்.

“மக்களால் மதிக்கப்படும் சிரேஷ்ட தலைவரான நீங்கள் அரசியலமைப்பு தயாரிக்கும் செயற்பாடுகளில் பங்குதாரராக கலந்துகொள்ளவேண்டும் என விரும்புகின்றோம். இதற்கு ஒத்துழைப்பு வழங்குவது உங்களுடைய அடிப்படைக் கடமையாகும். இதிலிருந்து விலகமுடியாது” என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.

தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

அரசியலமைப்பு தொடர்பில் எதிரான கருத்துக்களைக் கேட்க முடிகிறது. இது துரதிஷ்டவசமானது என்பதுடன், இவ்வாறான கருத்துக்கள் நாட்டின் எதிர்கால பொருளாதாரத்துக்கு சாதகமாக அமையாது என்பதை அவர்கள் உணரவேண்டும். அரசியலமைப்பின் கடந்தகால மற்றும் தற்கால அனுபவங்கள் குறித்து நாட்டிலுள்ள சகல மக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதுடன், இது நாட்டில் அக்கறையுடையவர்களின் அடிப்படையாகும்.

இதுவிடயத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ பாராளுமன்றத்திலும், அதற்கு வெளியேயும் எடுத்துள்ள நிலைப்பாடானது சமூகங்களுக்கிடையில் குரோதத்துக்கே வழிவகுக்கும்.

அவர் அதிகாரங்கள் பகிரப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதுடன், அதிகாரங்கள் கொழும்பில் மாத்திரமே இருக்கவேண்டும் எனக் கூறிவருகிறார்.

பதினெட்டாவது திருத்தத்தின் ஊடாக இதனை அவர் நடைமுறைப்படுத்த முயற்சித்திருந்தார். இவ்வாறான செயற்பாடுகள் அதிகாரத்தில் இருக்கும் தரப்பினருக்கே நன்மை பயப்பதாக இருக்கும். அதனால் மக்களுக்கு எந்தவித நன்மையும் ஏற்படாது.

அதிகாரத்தில் நேரடியாகப் பங்கெடுப்பதாயின் அதிகாரம் பகிரப்பட வேண்டும். நாட்டை பிளவுபடுத்துவதற்கு முயற்சிகள் எடுக்கப்படுவதாக மஹிந்த ராஜபக்‌ஷ கூறிவருகின்றார். அவருடைய இந்தக் கருத்து பிழையானது என்பதை திட்டவட்டமாகக் கூறுகின்றேன். பிரிக்கப்படாத, ஒற்றுமையான நாட்டை உறுதிப்படுத்தும் வகையில் அரசியலமைப்பு என்பதை நாம் முன்வைத்த யோசனைகளில் பகிரங்கமாக குறிப்பிட்டுள்ளோம்.

அரசியலமைப்பை தயாரித்து பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து, அங்கீகாரத்துடன் சர்வஜன வாக்கெடுப்புக்கு விடப்படும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறியிருந்தார். இவ்வாறான நிலையிலேயே தேசிய அரசாங்கம் தற்பொழுது அரசியலமைப்பு தயாரிக்கும் பணிகளை முன்னெடுத்துள்ளது. அரசியலமைப்பு சபை மற்றும் வழிநடத்தல் குழு அமைக்கப்பட்டு, பொது மக்களின் கருத்துக்களும் பெறப்பட்டு செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இவற்றின் ஊடாக அரசியலமைப்பு வரைபு தயாரிக்கப்பட்டு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டாலும், சர்வஜன வாக்கெடுப்பிலேயே இறுதி முடிவு எடுக்கப்படும். மக்களுக்குத் தெரியாமல் எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்பட விரும்பவில்லை. ஆனால் முன்னாள் ஜனாதிபதி தன்னால் முன்மொழியப்பட்ட விடயத்துக்கு எதிரான நிலைப்பாட்டை தற்பொழுது எடுத்துள்ளார்.

2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் 9ஆம் திகதி முழு பாராளுமன்றத்தையும் அரசியலமைப்பு சபையாக மாற்றும் பிரேரணையொன்று சபையில் நிறைவேற்றப்பட்டது. அரசியலமைப்பை தயாரிக்கும் பணிகள் இதன் மூலம் ஆரம்பமானது.

அரசியலமைப்பு தயாரிப்பு பணிகளுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதாயின் ஏன் பாராளுமன்றத்தில் வந்து அரசியலமைப்பு சபையாக மாற்றும் பிரேரணைக்கு எதிராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ வாக்களிக்கவில்லை.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் நடத்தப்படவுள்ளன. அரசாங்கத்தைத் தோற்கடித்து தேர்தலில் வெல்லவேண்டியுள்ளது. இது உங்களுடைய அரசியல் செயற்பாடு என்பதால் யாரும் அதற்கு எதிராக முறைப்பாடு செய்ய முடியாது. இதனை அடைவதற்காக இனங்களுக்கிடையில் பதற்றமொன்றை ஏற்படுத்துவதற்கு முயற்சிக்கின்றீர்கள். மக்களின் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான வழி இதுவல்ல.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் 2015ஆம் ஆண்டு பிரேரணையொன்று நிறைவேற்றப்பட்டது. அதில் இனப்பிரச்சினைத் தீர்வுக்கு அரசாங்கம் வழங்கிவரும் அர்ப்பணிப்பு மற்றும் முன்னெடுத்திருக்கும் நடவடிக்கைகளை வரவேற்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. நல்லிணக்கத்தை உறுதிப்படுத்தவும், சமாதானத்தை ஏற்படுத்தவும் ஐ.நா மனித உரிமைகளுக்கு வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றுவதற்கு அரசியலமைப்பு ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டியுள்ளன. 2012, 2013, 2014 ஆகிய ஆண்டுகளில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் நிலைமை மோசமாக இருந்ததுடன், இலங்கைக்கு எதிராக பொருளாதார தடைகளைக் கொண்டுவருவதற்கான நிலைமை காணப்பட்டது. அவ்வாறு தடைகள் கொண்டுவரப்பட்டிருந்தால் நாடு நெருக்கடிகளை எதிர்கொண்டிருக்கும். ஆனால் அவ்வாறு நடைபெறவில்லை. ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்ற நாங்கள் நடவடிக்கைகள் எடுக்கக் கூடாதா எனக் கேட்விரும்புகின்றேன்? எம்முடன் ஒத்துழைத்து செயற்படுமாறு கோருகின்றோம்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ 2005ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டுவரை பத்து வருடங்கள் ஆட்சியில் இருந்தார். இதற்கு முன்னர் சந்திரிகா குமாரதுங்க தலைமையிலான அரசாங்கத்திலும் அங்கம் வகித்திருந்தார்.

இதற்கமைய 20 வருடங்களாக மஹிந்த ராஜபக்‌ஷ அதிகாரத்தில் இருந்துள்ளார். 2015ஆம் ஆண்டில் ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல் என்பன நடைபெற்றன. இந்த நாட்டிலுள்ள மக்கள் உங்களை மீண்டும் ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யவுமில்லை. உங்களை பிரதமராகவும் தெரிவுசெய்யவில்லை.

2010 ஆண்டு தேர்தலிலும் 2015ஆம் ஆண்டு தேர்தலிலும் நீங்கள் பெற்றுக் கொண்ட வாக்குகளை ஒப்பிட்டுப் பார்க்கையில் உங்களை தெரிவுசெய்ய மக்கள் விரும்பவில்லையென்பது தெளிவாகப் புரிந்தது. மக்களால் வழங்கப்பட்ட இந்த ஆணை மதிக்கப்பட வேண்டும்.

மக்கள் சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாகவும், ஐ.தே.கவைச் சேர்ந்த பிரதமராக ரணில் விக்ரமசிங்கவையும் மக்கள் தெரிவுசெய்துள்ளனர். இரண்டு கட்சிகளும் இணைந்து செயற்பட வேண்டும் என்பதை மக்கள் விரும்புகிறார்கள் என்பதே இதன் அர்த்தமாகும்.

நீங்கள் தலைவர் என்பதுடன் உங்களுடைய தந்தை மீது நாம் மிகுந்த மதிப்பு வைத்துள்ளோம். மறைந்த எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிக்கு சென்றபோது, அவருடன் சேர்ந்து சென்ற ஒரேயொரு அரசியல்வாதி உங்களுடைய தந்தையாராவார். தன்னை பின்தொடர்வது நிழல் என்று நினைத்ததாக பண்டாரநாயக்கவே கூறியிருந்தார். அந்த நாளிலிருந்து உங்கள் தந்தையார் மீது நான் மிகுந்த கௌரவத்தைக் கொண்டிருக்கின்றேன். அந்த மதிப்பை நீங்களும் கொண்டிருக்கவேண்டும் என்றே விரும்புகின்றோம்.

அரசியலமைப்பு தயாரிக்கும் செயற்பாட்டுக்கு நீங்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இது உங்களுடைய அடிப்படைக் கடமையாகும். நீங்கள் இந்தக் கடமையிலிருந்து தவறமுடியாது. நாடு இதனையே எதிர்பார்த்துள்ளது. நாடு மீண்டும் இருண்ட யுகத்துக்குப் போகக் கூடாது என்பதையே மக்கள் விரும்புகின்றனர். நாட்டில் ஒளியைப் பெற்று முன்னோக்கி நகர்ந்து செல்லவேண்டும் என கருதினால் கட்டாயமாக புதிய அரசியலமைப்பொன்றை தயாரிக்கவேண்டும். மக்களை ஒன்றிணைப்பதற்கு இது அவசியமாகும்.

இலங்கை எமது நாடு என்ற உணர்வுடன் சகலரும் ஒற்றுமையாக வாழக்கூடிய உணர்வு வழங்கப்பட வேண்டும். பிரிக்கப்படாத நாட்டுக்குள் நீங்கள் இதனைச் செய்ய வேண்டும்.

சுதந்திரக் கட்சிக்கு நாம் எதிரானவர்கள் அல்ல. எங்களை எதிரானவர்களாக பார்க்க வேண்டாம் என சு.க எம்.பிக்களிடம் கேட்டுக் கொள்கின்றோம்.

கடந்த காலத்தில் சு.கவுக்கு தேர்தல்களில் ஆதரவு வழங்கியுள்ளோம். எனவே அரசியலமைப்பை தயாரிக்கும் பணிகளில் சகலரும் ஒன்றிணைந்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.