மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் முழுமையான கல்வி அபிவிருத்தியை பெறமுடியாத நிலை

0
575

(படுவான் பாலகன்)  மாணவர்களின் தேர்ச்சி அடைவு குறைவாக உள்ளதினாலும்,  மாணவர்களின் பாடசாலை வரவில் தளம்பல்கள் ஏற்படுவதினாலும், பெற்றோர் மாணவர்களின் கல்வியில் பூரண பங்கினை செலுத்த தவறுகின்றமையினாலும் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் முழுமையான கல்வி அபிவிருத்தியினை பெற முடியாத நிலையேற்பட்டிருக்கின்றது. என மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய பிரதிக்கல்விப் பணிப்பாளர் எஸ்.ஹரிகரராஜ் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொக்கட்டிச்சோலை இராமகிருஸ்ணமிசன் வித்தியாலயத்தில் நேற்று(14) மாலை நடைபெற்ற மாணவர் பாராளுமன்ற அமர்வினை பார்வையிட்டதன் பின்பு கருத்து தெரிவிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டார்.

இதன்போது தொடர்ந்தும் குறிப்பிட்ட பிரதிக்கல்விப் பணிப்பாளர்,

சபை நடவடிக்கையின் போது, மாணவர்கள் தங்களது திறமைகளை மிகச்சிறப்பாக வெளிப்படுத்தியிருந்தனர். இவர்களது பேச்சாற்றல் கேட்பதற்கு மிகவும் சிறப்பாக இருந்தது. தடுமாற்றம் இன்றி, சிறந்த சொற்பிரயோகத்துடன் சிறப்பாக தாங்கள் சார்ந்த விடயங்களை முன்வைத்தனர். இதன் மூலம் மாணவர்களிடையே இருக்கின்ற திறமை வெளிப்பட்டிருக்கின்றது.

நாட்டிலே சபை நடவடிக்கைகள் நடைபெறுகின்ற போது, செங்கோலை தூக்கிக் கொண்டு ஓடுகின்ற செயற்பாடுகளும் இடம்பெற்றிருக்கின்றமையினை ஊடகங்கள் ஊடாக பார்த்திருக்கின்றோம். இவை ஒழுக்கத்திற்கு முரணாண செயற்பாடுகளாகும். ஆனால் மாணவர்களின் சபை நடவடிக்கையின் போது, சிறப்பான ஒழுக்கப்பண்பினை காணமுடிந்தது. இவ்வாறான பண்பினையே நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும். இவையே நமது சமூகத்திற்கு தேவையானதாகும்.

“நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்” என்று எம்மவர்கள் குறிப்பிடுவார்கள். ஆனால் அக்கருத்தில் உடன்படமுடியாத நிலை தற்காலத்தில் ஏற்பட்டிருக்கின்றது. இதற்கு காரணம் பல்கலைக்கழகங்களிலே வகுப்பு இடைநிறுத்தம், மாணவர் துன்புறுத்தல், ஆர்ப்பாட்டங்கள் என பல்வேறு செயற்பாடுகள் இடம்பெறுகின்றன. இதனால் பல்கலைக்கழகத்தினை நல்லதொரு குடும்பத்திற்கு ஒப்பிட முடியாது.  இப்பாடசாலையில் நடைபெற்ற சபையின் நடவடிக்கையினை பார்க்கின்ற போது, இச்சபை நல்லதொரு குடும்பமாக வெளிப்பட்டது.

சிறந்த, ஆளுமையுள்ள, ஒழுக்கப்பண்புள்ள சமூகத்தினை கட்டியெழுப்ப மாணவர்களிடையே இவ்வாறான சிறந்த விதைகளை விதைக்க வேண்டும் என்றார்.