நிலநடுக்கத்தில் சிக்கி 400இற்கு அதிகமானவர்கள் உயிரிழப்பு

0
646

ஈரான் – ஈராக் ஆகிய நாடுகளின் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி 400 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதோடு 7,000 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்

ஈரான் மற்றும் ஈராக் நாடுகளின் எல்லையில் ஜக்ரோஸ் மலைப்பிரதேசம் அமைந்துள்ளது.

ஈராக்கின் குர்திஸ்தான் மாகாணத்தின் கிழக்கு நகரான ஹலாப்ஜாவும் இந்த மலைப்பகுதியில் அமைந்த முக்கிய நகராகும்.

இவை அவ்வப்போது நிலநடுக்கத்திற்கு உள்ளாகும் அபாயகர பகுதிகளாகும்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு திடீரென்று இப்பகுதியில் பயங்கர நிலநடுக்கம் பதிவாகியது.

7.3 புள்ளியாக பதிவான இந்த நிலநடுக்கம் சில வினாடிகள் நீடித்ததுடன் நிலநடுக்கத்தின்போது உண்டான அதிர்வலைகள் மத்திய தரைக்கடல் பகுதியிலும், ஈராக் தலைநகர் பாக்தாத்திலும் உணரப்பட்டது.

பாதிப்பிற்குள்ளான பகுதியில் அமைந்துள்ள 2 மருத்துவமனைகளும் முற்றாக சேதம் அடைந்ததால் நிலநடுக்கத்தில் காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஈரானில் மட்டும் 70,000 பேர் வீடுகளை இழந்துள்ளனர்.

ஈரானில் 2003 ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி 26,000 பேர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.