மகிழடித்தீவு கிராமத்தினை இயற்கை பசளை தயாரிப்பு கிராமமாக பிரகடனப்படுத்த நடவடிக்கை

0
1121

(படுவான் பாலகன்) கொக்கட்டிச்சோலை விவசாய திணைக்களப் பிரிவிற்குட்பட்ட மகிழடித்தீவு கிராமத்தினை இயற்கை பசளை தயாரிப்பு கிராமமாக மாற்றுவதற்கான செயற்பாடுகளை நாம் முன்னெடுத்து வருகின்றோம் என கிழக்கு மாகாண விவசாய திணைக்கள பிரதிப் பணிப்பாளர் எம். பரமேஸ்வரன் குறிப்பிட்டார்.

மகிழடித்தீவு கிராமத்தில் இயற்கை விவசாயத்தினை மேற்கொள்ளும் 32பயனாளிகளுக்கு, இயற்கை பசளை தயாரிப்பதற்கான இரும்புக்கூடு வழங்கி வைக்கும் நிகழ்வும், இயற்கை முறையில் பசளை தயாரிப்பது தொடர்பிலான செய்முறைப் பயிற்சியும் இன்று(13) திங்கட்கிழமை மகிழடித்தீவில் வழங்கப்பட்ட போதே இதனைக் தெரிவித்தார்.

மட்டக்களப்பு விவசாய திணைக்களமும், கொக்கட்டிச்சோலை விவசாய திணைக்களமும் இணைந்து இந்நிகழ்வினை ஒழுங்குபடுத்தியிருந்தனர்.

இதன் போது, மாகாண பிரதிப் பணிப்பாளர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,

 

இயற்கை முறையிலான விவசாயத்திற்கே தற்போதைய சூழலில் கேள்வி ஏற்பட்டுள்ளது. அதேவேளை இயற்கை விவசாயத்தின் மூலமாக பெறப்படும் உற்பத்திகளும் உடலுக்கு ஆரோக்கியத்தினை கொடுக்கத்தக்கவை. அதேபோன்று இயற்கையிலே கிடைக்கத்தக்க இலைவகைளில் ஒன்றையாவது ஒவ்வொரு நாளும் உண்ண பழகிக் கொள்ள வேண்டும்.  இலைவகைகளுக்குள்ளும் பல சத்துக்கள் அடங்கியிருக்கின்றன. இவற்றினை நாம் கடைகளில் பெற்றுக்கொள்ளத் தேவையில்லை. எமது வீடுகளிலே நட்டு அதன் உற்பத்தியினை பெற்றுக்கொள்ள வேண்டும். இயற்கை விவசாயத்தினை ஊக்குவிப்பதற்காக நாம் பல்வேறு செயற்பாடுகளையும் மேற்கொண்டு வருகின்றோம். இது தொடர்பில் ஏதும் தேவைகள் இருப்பின் எம்மிடம் குறிப்பிடலாம். அவற்றினை பெற்றுத்தருவதற்கான சகல முயற்சிகளையும் மேற்கொள்வோம். தற்போது 32பயனாளிகளுக்கு இயற்கை பசளை செய்வதற்கான தூண்டுதலினை வழங்கியிருக்கின்றோம். இதேபோல இந்த கிராமத்தில் உள்ள அனைவரும் இயற்கை பசளை தயாரிக்க வேண்டும். அதற்கான முயற்சிகளையும் மேற்கொள்கின்றோம் என்றார்.

குறித்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்த விவசாயிகளினால், இயற்கை முறையிலான விவசாயத்தினை மேற்கொள்வது தொடர்பிலான பயிற்சிகளையும் தமக்கு வழங்குமாறு இதன் போது கேட்டுக்கொண்டனர். இதற்கமைய அப்பயிற்சியினை வழங்குவதற்கான நடவடிக்கையை எடுப்பதாகவும் பிரதி பணிப்பாளர் கூறினார்.