வாழைச்சேனை கிண்ணையடியில் தாக்கப்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் க.சுகிதரனின் சம்பவ அறிக்கை

0
649

கோறளைப்பற்று பிரதேச செயலகத்தினால் கிண்ணையடியைச் சேர்ந்த கைலாயப்பிள்ளை பொன்மணி என்பவருக்கு மீள்குடியேற்றத் திட்டத்தினால் வீடு வழங்கப்பட்டுள்ளது. பொன்மணிக்கு சசிகரன், பிரபாகரன், பவாகரன் என மூன்று ஆண் பிள்ளைகளும் சாந்தினி என ஒரு பெண் பிள்ளையும் இருந்தனர். பவாகரனைத் தவிர ஏனைய மூவரும் திருமணம் செய்துள்ளனர். பொன்மணி நோய்வாய்பட்டிருந்த காரணத்தால் பொன்மணியின் சம்மதத்துடன் திருமணம் முடிக்காத பவாகரன், பொன்மணி ஆகிய இருவருடனும் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு பவாகரனிடம் பணம் வழங்கி வீடு கட்டி முடிக்கப்பட்டுள்ளது. வீட்டுக் கட்டுமானப்பணி அரைவாசி முடிவடைந்த நிலையில் சுகயீனம் காரணமாக பொன்மணி இறந்துவிட்டார். வீடு கட்டி முடிக்கப்பட்ட தினத்திலிருந்து சம்பவ தினம் வரை வீடு பூட்டப்பட்ட நிலையிலேயே காணப்பட்டது.

பலமுறை மாவட்டச் செயலகம், வீடு பூர்த்தி செய்தமை பற்றி உரிய பயனாளியை வைத்து புகைப்படம் எடுத்து அனுப்புமாறு கோரியிருந்தபோதும் குறித்த வீட்டின் உரிய பயனாளியை வைத்தது புகைப்படம் எடுத்து அனுப்ப முடியாது போனது. கடந்த ஒரு மாதத்தில் பொன்மணியின் ஒரே மகளான சாந்தினி என்னிடம் இருமுறை வந்து ‘எனது அம்மாவின் வீட்டில் நான் இருக்க’ எனது மூத்த அண்ணா சசிகரன் விடவில்லை. வீட்டைப் பூட்டி திறப்பைக் கொண்டு சென்றுவிட்டார் எனவும் அவருக்கு மூன்று வீடுகள் உள்ளது என்றும் தனக்கு தனது சகோதரர்களால் எவ்வித வீடும் கட்டித்தரப்படவில்லை என்றும் கூறினார். அதற்கு நான் பதிலாக உங்கள் தம்பி பவாகரனை நேரடியாகப் பிரதேச செயலகம் வருகை தந்து உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ஊடாக பிரதேச செயலாளருக்கு எழுத்து மூலமாக அறிவிக்கும்படி கூறினேன். அதன்படி தம்பி பவாகரன், பிரதேச செயலகம் வருகை தந்து உதவித்திட்டமிடல் பணிப்பாளரிடம் எங்களது அக்காவுக்குத்தான் வீடு வழங்க வேண்டும் எனவும் எனது மூத்த அண்ணா சசிகரன் வீடடைப் பூட்டி திறப்பைக் கொண்டு சென்றிருப்பதாகவும் கூறி எழுத்து மூலம் தெரிவித்திருந்தார்.

சம்பவ தினத்துக்கு ஒரு வாரத்துக்கு முன்பதாக நான் கடமையில் இருந்த வேளை உரிய வீட்டுக்கு முன்பாக சசிகரனைச் சந்தித்த போது வீட்டினைத் தொடர்ந்து பூட்டிப்போட வேண்டாம். அதன் சாவியைத் தங்கையிடம் கொடுங்கள் அவர்களை குடியிருக்க விடுங்கள் அல்லது நீங்கள் இருங்கள் என்று கூறினேன். அதற்கு அவர் அம்மா எனக்கு உறுதி எழுதித் தந்துவிட்டார் எனக் கூறினார். அதற்குப் பதிலாக நான் மீள்குடியேற்றத் திட்டத்தினால் வழங்கப்படும் வீடுகளை தங்களது உறுதிக்காணிகளிள்; வழங்கப்பட்டாலும் அவற்றை விற்கவோ கைமாற்றம் செய்யவோ முடியாது அரசாங்கம் தரும் 8 இலட்சம் ரூபா பெறுமதியான வீடுகளை விற்பனை செய்ய முடியாது. இதனை உங்கள் அம்மாவும் சரி வேறு யாரும் சரி விற்க முடியாது. வீட்டுக் கட்டுமானப்பணியின் அரைவாசியில் விற்பனை செய்யப்பட்டால் நாங்கள் எவ்;வாறு புதிதாகக் கொள்வனவு செய்யப்பட்டவர்  அல்லது கைமாற்றியவரிடம் வீட்டைப் பூர்த்தியாக்குமாறு சொல்வது, அவர்களுக்கு எவ்வாறு காசு வழங்குவது என பல பிரச்சினைகள் உள்ளதால் விற்க முடியாது எனக் கூறினேன். வசிப்பதற்கு வீடு இல்லை என அரசாங்கத்திடம் கேட்டுப் பெற்றுவிட்டு அதனை விற்பனை செய்ய முடியாது எனவும் கூறினேன். அத்தடன் அவரிடம் உங்களுக்கு 3 வீடுகள் உள்ளது எனவும் கிண்ணையடியில் உங்கள் சொந்தப் பணத்தில் கட்டியவீடு ஒன்று பூட்டிய நிலையில் உள்ளது. ஒரே தருணத்தில் 4 வீடுகளிலும் குடியிருக்க முடியாது.உங்களுக்கு சிறுபிள்ளைகள் தான் உள்ளனர் என்றும், பூட்டிய வீட்டினை யாராவது கொலை மற்றும் பாலியல் துஷ்பிரயோகத்துக்குப் பயன்படுத்தினால், கிராம உத்தியோகத்தருக்கும், அபிவிருத்தி உத்தியோகத்தருக்கும், கிராத்துக்கும்தான் அவப்பெயர் வரும் என அறிவுரை கூறினேன்.

தொடர்ந்து குறித்த சசிகரன் வசிக்கும் அயல்க் கிராமமான கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலகப் பிரிவின் முருக்கன்தீவு கிராம உத்தியோகத்தர் குரு அவர்களைத் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தங்களது பிரிவில் வசிக்கும் சசிகரன் என்பவருக்கு கிண்ணையடியில் பூட்டப்பட்ட நிலையில் வீடு ஒன்று உள்ளது என்றும் அவர் தற்போது வசிப்பது உலக வங்கியினால் மானியமாக மாமியாருக்குக் கொடுக்கப்பட்ட வீட்டினைச் சீதனமாகப் பெற்று வசிப்பதுடன் தற்போது மீள்குடியேற்றத்திட்டத்தில் புதிய வீடொன்று வழங்கி அது பூர்த்தியாகும் தருவாயில் உள்ளது என்றும் எனவே அவரிடம் கைவசம் 3 வீடு இருப்பதனால் நான்கு வீட்டிலும் ஒரே தருணத்தில் குடியிருக்க முடியாது என்றும், அவரை இருக்கச் சொல்லுங்கள் அல்லது அவரது தங்கையை இருக்கும்படி சொல்லுங்கள் எனக் கூறினேன். இன்னும் மாவட்டச் செயலகத்துக்கு உரிய பயனாளியை வைத்து புகைப்படம் எடுத்து அனுப்ப முடியாதுள்ளது என்றும் கடமையைச் செய்வதில் கடினமாக உள்ளது என்றும் கூறினேன். அவர் சசிகரனிடம் கூறுவதாகக் கூறினார்.

மீண்டும் சம்பவ தினத்திற்கு இரண்டு தினம் முன்பாக சசிதரன் அவர்களை சந்தித்தபோது எதிர்வரும் வியாழக்கிழமை 26.10.2017 அம்மா எழுதிய உறுதியை எடுத்துக் கொண்டு வாருங்கள் நானும், கிராம உத்தியோகத்தரும் வருகின்றோம் தங்கையும், தம்பியும் வருவார்கள் கதைத்துப்பேசி நல்லதொரு தீர்வு காண்போம் என அவரிடம் கூறினேன், ஆம் என பதில் கூறிச் சென்றார்.

சம்பவ தினம்

புதிய வீட்டிற்கு நானும் கிராம உத்தியோகத்தரும் சென்றிருந்தோம். அங்கு சசிகரன், தங்கை சாந்தினி, சசிகரனின் அம்மாவின் தங்கை திசநாயகி, சசிகரனின் ஒன்றுவிட்ட மச்சான் சேந்திரன். சசிகரனின் மகன் தர்சன் ஆகியோர் வந்திருந்தனர். பவாகரன் தனியார் நிறுவனத்தில் தொழில் புரிவதன் காரணமாக அன்றைய தினம் விடுமுறை எடுக்க முடியவில்லை என்று தொலைபேசி மூலம் தெரிவித்திருந்தார். பிரபாகரன் கொழும்பில் தொழில் புரிகின்றார் அவரும் வரவில்லை. வீட்டிலுள்ள மண்டபத்தின் கதிரையில் நாங்கள் அமர்ந்து கொண்டோம். அப்போது நான் பொன்மணி யார்? என்று கேட்டேன். அம்மா என பதில் கிடைத்தது. பவாகரன் யார் எனக் கேட்டேன், தம்பி என பதில் கிடைத்தது? நாங்கள் பொன்மணி, பவாகரன் ஆகிய இருவரிடமும் ஒப்பந்தம் செய்தோம். அதன்படி வீடு கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த வீட்டினைத் தொடர்ந்து பூட்டிப்போட முடியாது. காரணம் உள்ளகக் கணக்காய்வு?, பொதுக்கணக்காய்வு உத்தியோகத்தர் வருகை தந்தால், அரச நிதி 8 இலட்சம் ரூபாய் வீண் விரயமாக்கப்பட்டுள்ளது என எழுதிவிடுவார். அது என்னையும் கிராம உத்தியோகத்தரையும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கும் பதவிக்கும் ஆபத்தை விளைவிக்கும் எனவே வீட்டில் யாராவது வசிக்க வேண்டும் எனவும் கூறினேன்.

இந்த வீட்டுக்கு மேலதிகக் காசு யார் போட்டது என எங்களுக்குத் தெரியாது. ஒரே ஒரு பெண் சகோதரி இருப்பதாலும், அவர் தூர்ந்துபோன பழைய வீட்டில் வசிப்பதாலும் சகோதரர்களால் வீடு கட்டிக்கொடுக்காத காரணத்தாலும் அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள இந்த வீட்டினை அவருக்குக் கொடுப்பது நல்லது என கூறியபோது, சசிகரன் அவர்கள் நான் காசுபோட்டுக் கட்டியுள்ளேன் என்றும், எனக்கு அம்மா உறுதி எழுதித் தந்துவிட்டார் எனவும் கூறினார். உடனே கிராம உத்தியோகத்தர் உறுதியை வாங்கிப் பரீட்சித்துப் பார்த்த போது உறுதி பதிவு செய்யப்படாமலும் அத்துடன் கைலாயப்பிள்ளை, பொன்மணி ஆகிய இருவருக்கும் சீதனமாக எழுதிய உறுதி பிள்ளைகள் எல்லோரும் கையொப்பமிடாமல் எழுதியிருந்த காரணத்தால், இது முறையான உறுதி இல்லை எனவும் கூறினார்.

தொடர்ந்து சசிகரன் அவர்களிடம் மேலதிகமாக நீங்கள் எவ்வளவு பணம் போட்டீர்கள் என நான் கேட்டபோது அவர், உங்களுக்குத் தெரியும்தானே 66 வீடுகளுக்கு காசு வழங்கியுள்ளீர்கள். அனுபம் இருக்கும்தானே என்று கூறினார். நான் சிரித்தபடி, சுமாராக 150000ஃஸ்ரீ தொடக்கம் 200000ஃஸ்ரீ வரை இடப்பட்டிருக்கலாம் என கூறினேன். அவ்வாறுதான் ஏனையவர்களும் கூறினார்கள் என்று தெரிவித்தேன். இருந்தும் உங்களுக்குச் செலவு குறைந்திருக்கும். வளவில் நின்ற பாலை மரத்தைத்தானே அறுத்து கதவு நிலையாக்கினீர்கள் என நகைச் சுவையாகக் கூறினேன். அப்போது சசிகரனின் ஒன்றுவிட்ட மச்சான் சேந்திரன் நீங்கள் பிழையாக வேலை செய்கின்றீர்கள் என சத்தமிட்டு பிரச்சினையை உண்டுபண்ண சசிகரனின் சித்தி திசநாயகி, நாமெல்லாம் மூன்றாம் நபர். இறந்தவர் என் அக்கா. அவ்வாறு இருந்தும் நான் இவ்விடத்தில் எதுவும் பேசவில்லை. ஏனெனில் அபிவிருத்தி உத்தியோகத்தரும்,கிராம உத்தியோகத்தரும் வருகை தந்துள்ளார்கள். அவர்கள் பிரச்சினையைத் தீர்ப்பார்கள் தயவுசெய்து சத்தம் போட  வேண்டாம்  எனக் கூறினார். அப்போது கதிரையில் இருந்து நான் எழும்பி, சேந்திரன் அவர்களிடமும், சித்தி திசநாயகியிடமும் தயவு செய்து வெளியே செல்லுங்கள் என்று கூறிய போது சேந்திரன் கையை என்மீது வீசி, நான் ஏன் போகவேண்டும் என விசுக்கினார். அது என்மீது பட்டது. அதனை நான் பெரிதும் பொருட்படுத்தவில்லை. அதேகணம் சசிகரன் தனது சித்திக்கு காலால் எட்டி உதைத்தார். சித்தி கதிரையிலிருந்து கீழே விழுந்துவிட்டார். எழும்பிய சித்தியைக் கையால் அடித்தபோது கிராம உத்தியோகத்தர் சசிகரனைப் தடுத்து பிடித்துக் கொண்டு பெண்களுக்கு ஆண்கள் அடிக்கக்கூடாது என கூறினார். அப்போது சசிகரனின் மகன் சித்திக்கு அடிப்பதற்கு பாய்ந்தபோது நான் குறுக்கே நின்று தடுத்தேன். எனக்கு அடிப்பட்டது. உடனே கிராம உத்தியோகத்தர் சசிகரன் அவர்களை விட்டுவிட்டு மகனைப் பிடித்து அடிக்க வேண்டாம். நீ சிறுபிள்ளை அதுவும் உங்களது சித்தி என்று கூறினார். இதனைச் சேந்திரன் தனது கையடக்கத் தொலைபேசியில் ஒளிப்பதிவு செய்துகொண்டிருந்தார். அப்போது நான் அவரிடம் அப்பாவும் மகனும் சித்தியைப் போட்டு அடித்துக் கொல்லப் பார்க்கின்றார்கள். அதனைக் கிராம உத்தியோகத்தர் தடுக்கிறார். அதனை நீங்கள் ஒளிப்பதிவா செய்கின்றீர்கள் என கையை உயர்த்திப் பேசிய போது எனது கையிலிருந்த கோவை (குடைந) அவரது கைத்தொலைபேசியல் பட்டுக் கீழே விழ, சசிகரன் மீண்டும் என்னை ‘உன்னைத்தான் கொல்ல’ வேண்டும் என சத்தமிட்டுக்கொண்டு எனக்குக் கையால் அடித்தார். அடிக்கும்போது நான் கிராம உத்தியோகத்தரிடம் எனக்கு அடிக்கின்றார்கள் என கூற வெளியே செல்லவும் எனக் கூறினார்.

நான் சிறிது தூரம் வெளியில் ஓடி திரும்பிப் பார்த்தபோது, சசிகரன் கல்லை எடுத்து எனக்கு எறிந்தார் அது தலையில் பட்டு இரத்தம் கசிந்தது. மீண்டும் சேந்திரன் கல்லால் எறிந்தார். அதற்கு நான் குனிந்துவிட்டு ஓடினேன். இருவரும் துரத்தி வந்தனர். அப்போது முன்கடை உரிமையாளரான உதயகுமார் நிர்மலா, என்ன சேர் நடந்தது என ஓடி வந்தார். எனக்கு எறிந்துவிட்டார்கள் என கூறினேன். எனது கடைக்குள் ஓடிப்போங்கள் கடைக்குள் வந்து அடிக்க விடமாட்டேன் எனக் கூறி என்னைக் கடைக்குள் போக விட்டுவிட்டு அவர்களைத்  துரத்தினார். அதன் பின்பு நான் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டேன்.

இவ்வாறு சொத்தாசை பிடித்த ஒரு சில நபர்கள் செய்யும் ஈனத்தனமான செயல்களால்தான் அரச உத்தியோகத்தர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள், நீதிபதிகள் ஆகியோர் தாக்குதல்களுக்கு உள்ளாகின்றனர். எனவே எனக்கு நடந்த நிலைமை இனிமேல் எந்தவொரு உத்தியோகத்தருக்கும் இடம்பெறக்கூடாது. இச்சம்பத்துக்குப் பிறகு அதிக நேரம் புத்தகம் படிக்க முடியவில்லை கிட்டப்பார்வை மிகவும் கடினமாக உள்ளது. தலையில் குத்துவலி உள்ளது. நான் உடல்ரீதியாகவும், உளரீதியாகவும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளேன். எனக்கு நல்ல தீர்வு கிடைக்க வேண்டும். ஒரு சிலரின் செயற்பாட்டால் ஒட்டுமொத்த சமூகத்திற்கு ஆற்றவேண்டிய அரசபணிகள் முடங்கிப்போகின்றது. எனவே இதனுடன் தொர்புடைய தரப்பினர் எனக்கு நல்ல தீர்;வு கிடைக்க ஆதரவு நல்க வேண்டும் என அன்பாகவும், பண்பாகவும் வேண்டி நிற்கின்றேன்.

க.சுகிதரன்

அபிவிருத்தி உத்தியோகத்தர்