நான் யாரையும் அச்சுறுத்தியோ பயமுறுத்தியோ எந்த பதவிக்கும் வரவில்லை.

0
577

ஒரு தடவை கூட தெரிவு செய்யப்பட்ட உறுப்பினரை எனது செல்வாக்கினை பயன்படுத்தி பதவி விலகுமாறு பயமுறுத்தியோ அச்சுறுத்தியோ அல்லது தெரிவு செய்யப்பட்ட ஒரு உறுப்பினரை படுகொலைக்கு இரையாக்கி அவரின் குருதியில் பாதம் பதித்து பாராளுமன்றத்திற்கோ மாகாணசபைக்கோ நான் செல்லவில்லை என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைமைக்குழு உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

எனது சகோதரன் கோவிந்தன் கருணாநிதி அவர்களின் மரணம் குறித்தும் அவரது கடந்தகாலம் குறித்தும் எனது விடுதலை இயக்க போராட்ட காலத்தினை தொடர்புபடுத்தி தமது கற்பனைகயை கலந்து அரசியல் விமர்சனம் என்ற பெயரில் என்னை குறிவைத்து தாக்கியுள்ளார்கள்.

நான் அடுத்த மாகாணசபைக்கு போட்டியிடக்கூடாது என்பதே இதன் சாராம்சமாகும்.

குறிப்பாக ஒரு இணையத்தளமும் அதன் பின்னணியில் உள்ள சில அரசியல்வாதிகளும் அவர்களது சில ஆதரவாளர்களும் இந்த நடவடிக்கையின் சூத்திரதாரிகள் என்பது அனைவருக்கும் தெரிந்த பகிரங்க இரகசியம்.

எனது தம்பி ரெலோவில் இணைந்தது நான் ரெலோவில் இணைந்தது,இருவரும் கலந்துரையாடி கூடிக் குலாவி நடந்த விடயமல்ல. எதேச்சையான விடயமாகும். அக்கால அரசியல் களநிலவரம், விடுதலை எழுச்சியின் ஒரு அங்கமே இந்த விடயமாகுமே தவிர இது திட்டமிட்டு நடந்த நிகழ்வல்ல.

அதன் பின்னர் தமிழ் தேசிய விடுதலை இயக்கங்களுக்கிடையே உடன்பாடுகள், முரண்பாடுகள், இயக்களுக்கிடையிலான மோதல்கள், இயக்க ஆதரவாளர்களை அடுத்தவர்களை போட்டுத்தள்ளும் செயற்பாடுகள் எல்லாம் தமிழ் தேசிய விடுதலை போராட்டகாலத்தில் நடந்த அக்கால அவல நிகழ்வுகள்.

இவையாவும் பகிரங்கமானதேயாகும்.

இது ரெலோவுக்கு மட்டும் பொதுவானது அல்ல. தமிழ் தேசிய விடுதலைப்பரப்பில் இருந்த அனைத்து இயக்கங்களுக்கும் பொருந்தும்.

இது தொடர்பில் பின்னைய காலத்தில் சகல இயக்க தலைவர்களும் கவலையடைந்ததும், கவலை தெரிவித்ததும், சில சமயங்களில் நேரடியாகவும் சில சமயங்களில் சூசமாகவும் தெரிவித்தமை கூட வரலாறுகளாகும்.

அக்காலத்தில் நான் கட்டளை தளபதியாகவும் எனது சகோதரன் என் அருகில் இருந்ததாகவும் நான் படுகொலை மனோவியாதியில் இருந்து போட்டுத்தள்ளும் உத்தரவை பிறப்பித்ததாகவும் அபாரமான கற்பனையை அந்த இணையத்தளமும் காட்சிப்படுத்தி காழ்ப்புணர்வினை வாந்தியெடுத்து மகிழ்ந்துள்ளது.

இந்திய இராணுவத்தின் காலம், அதன் பின்னரான காலங்களில் இலங்கை இராணுவத்துடன் பல்வேறு விடுதலை இயக்கங்களில் இருந்து பிரிந்தவர்கள் குழுக்களாக இயங்கியமை கூட பகிரங்கமானதே. அந்த நடவடிக்கைகள் கூட தமிழ் தேசிய விடுதலை வரலாற்றில் விரும்பத்தகாத நடவடிக்கைகளாகவே நான் பார்க்கின்றேன்.

அவற்றிற்கும் எனக்கும் முடிச்சுப்போட்டு மகிழ்வதும் அவற்றிற்காக என்னைப் பழி வாங்குவதும், ஆடிக்கு ஒரு தரம் ஆவணிக்கு ஒரு தரம் தமது இணையத்தளம் மூலமும் தமது முகநூல் மூலமும் பகிர்ந்து மகிழ்வதும் எனது மக்கள் செல்வாக்கு பற்றிய பயப்பிராந்தியின் வெளிபாடுகளே.

ஏனெனில் இவர்களின் கவலைகள் எல்லாம் எதிர்வரும் மாகாணசபை தேர்தலிலோ வேறு எந்த தேர்தல்களிலோ ஜனாவுக்கு நியமனம் வழங்கக்கூடாது என்பதாகும்.

எனது மக்கள் செல்வாக்கு, அரசியல் செயற்பாடு எனது அரசியலுக்கு அப்பாலான சமூகசேவை எல்லாம் இவர்களுக்கு அடிவயிறு கலக்கும் செயற்பாடுகளேயாகும். இந்த இணையத்தளமும் அதன் பின்னணி அரசியல்வாதிகளும் என்னைக் குறிவைப்பது இது முதன்முறையல்ல.

நான் தேர்தல்களில் போட்டியிடும் போதும் எனது வெற்றி வாய்ப்பு கைகூடும்போதும் இணையத்தளம் மூலமும் முகநூல் மூலமும் ஆரைப்பற்றை முதல் அம்பிளாந்துரை வரையில் நடைபெற்ற அனைத்து செயற்பாடுகளுக்கும் நான்தான் காரணம் என மறைந்திருந்து தாக்கி மகிழும் கீழ்த்தரமான அரசியல் விபச்சாரத்தனமான விமர்சனங்களை செய்வதையே வழக்கமாக கொண்டவர்கள். இதுவே இவர்களது நடவடிக்கை.

மக்கள் இவர்களை விட பண்பட்டவர்கள்; பக்குவப்பட்டவர்கள்; முதிர்ச்சியடைந்தவர்கள்; அரசியல் தெரிந்தவர்கள்; அரசியல்
புரிந்தவர்கள்.

அதனால்தான் இவர்களது இத்தகைய கற்பனை கலந்த கீழ்தரமான விமர்சனங்களுக்கு மத்தியிலும் என்னை பாராளுமன்றத்திற்கும் பல வருடகால அரசியல் அஞ்ஞாத வாசத்திற்கு பின்னர் மாகாணசபைக்கும் மன மகிழ்ந்து தெரிவு செய்தார்கள்.

கடந்த பாராளுமன்ற தேர்தலில் கூட இவர்களது உள்குத்துவெட்டுகளே எனது வெற்றியை இறுதியில் பறித்தது. இதுகூட மட்டக்களப்பு மாவட்ட மக்கள் நன்கு அறிந்த வரலாறு.

அன்று நான் விடுதலை போராளியாக இருந்த போதும் மக்கள் விரும்புக்குரிய போராளியாகவே இருந்தேன். பாராளுமன்றம் கூட மக்கள் தெரிவிலேயே சென்றேன். மாகாணசபைக்கு கூட மக்களே என்னை அனுப்பி வைத்தனர்.

ஒரு தடைவ கூட தெரிவு செய்யப்பட்ட உறுப்பினரை எனது செல்வாக்கினை பயன்படுத்தி பதவி விலகுமாறு பயன்முறுத்தியோ அச்சுறுத்தியோ அல்லது தெரிவுசெய்யப்பட்ட ஒரு உறுப்பினரை படுகொலைக்கு இரையாக்கி அவரின் குருதியில் பாதம் பதித்து பாராளுமன்றத்திற்கோ மாகாணசபைக்கோ நான் செல்லவில்லை என்பதை துணிவுடன் தலை நிமிர்ந்து கூறுகின்றேன்.

மக்கள் என்னை ஏற்கும் வரையில் எனது பணி தொடரும். அதே போல் மக்கள் என்னை புறக்கணித்த அன்றே அதையும் மகிழ்வுடன் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் எனக்குள்ளது.